PUBLISHED ON : ஜூலை 24, 2011

அ நிறம் | அளவு
தவிர்க்கிறேன்... தவிக்கிறேன்!
* யாருமற்ற மவுனத்தில்
இரவில் கரைந்தொழுகும்
உன் நினைவின் பிம்பங்கள்
வென்றெடுக்கிறது என்னை...
* களைத்தெடுக்க இயலா
கனவென
பிய்த்தெறிய முடியா
பச்சைக் குத்திய ரணமென
உன்னால் கிளர்ந்தெழும்
என் மன உணர்வின் தழும்புகளை
பிறர் காணக் கூடுமோ
எனும் அச்சத்தின் விளிம்பில்
தத்தளிக்கிறேன்!
* உனை தவிர்க்க
உள்ளுக்குள் மட்டுமே
உணர்வுகளை ஒளித்து வைத்து
ஏளனப் பார்வை ஒன்றை
உன்மேல் வீசி கடக்கிறேன்!
* ஆயினும், உறைய வைக்கவே
இயலவில்லை...
இமை மூடிய கண்ணுக்குள்ளும்
இதழ் மூடிய இதயத்துள்ளும்
நீ எழுப்பும் மெல்லிய
சலன அதிர்வுகளை!
— க.அகிலா, வண்டலூர்.
