
பிரிவு!
* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!
* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!
* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!
* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!
* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!
* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!
* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!
* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!
* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!
* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!
* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!
— ஆர்.நாகராஜன், திருமங்கலம்.