
நாங்கள்...
* தீவிரவாத வெடிகுண்டுகள்
கர்ஜித்துப் பாய்ந்தாலும்
எங்கள் அமைதிப் புறாக்களுக்கு
சேதமில்லை!
* மதப் பிரிவினை நரிகள்
ஊர்களுக்குள் உலவினாலும்
எங்கள் ஒற்றுமை மான்களுக்கு
பாதகமில்லை!
* ஜாதி வெறிப் பேய்கள்
கூட்டம், கூட்டமாய் அலைந்தாலும்
எங்கள் மனிதநேய யானைகள்
சிதிலப்படுவதில்லை!
* இயற்கை சீற்றப் பாம்புகள்
மூர்க்கமாய் தீண்டினாலும்
எங்கள் கம்பீரச் சிங்கத்திற்கு
பங்கமில்லை!
* எல்லைப் பிரச்னைக் கற்கள்
பாதைகள் நிரம்ப இருந்தாலும்
எங்கள் வேகக் குதிரைகள்
சோர்வதில்லை!
* ஊழல் தேள்கள்
மாறி, மாறி கொட்டினாலும்
எங்கள் உயர்வு ஒட்டகச்சிவிங்கிகள்
தாழ்வதில்லை!
* நெரிசல்களூடே
இருந்தாலும்
எங்கள் நிம்மதி முயல்கள்
நசுங்குவதில்லை!
* ஏற்றத்தாழ்வு நெருப்பு விழுந்தாலும்
எங்கள் சாதனை நெருப்புக் கோழிகள்
பொசுங்குவதில்லை!
* நாங்கள் உலகின் வியப்பு
நாங்கள் உலகின் அவசியம்
நாங்கள்
இருநூற்று நாற்பது கோடி
கால் மண்டபம்...
இருநூற்று நாற்பது கோடி கரங்கள்
கொண்ட விருட்சம்...
நூற்றிருபது கோடி மூளைகள் கொண்ட
அறிவுக் களஞ்சியம்...
நாங்கள் இந்தியர்களாய்ப் பிறந்த
புண்ணியஸ்தர்கள்!
— வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

