PUBLISHED ON : டிச 25, 2011

வேண்டும் விடுதலை
* பிறந்தவுடன்
கள்ளிப் பாலூட்டும்
காட்டுமிராண்டி
கலாசாரத்திலிருந்து
வேண்டும் விடுதலை
பெண் சிசுக்களுக்கு!
* கொள்ளைக் கூடமான
பள்ளிக்கூடங்களின்
புத்தகச் சுமைகளிலிருந்து
வேண்டும் விடுதலை
இளஞ் சிறார்களுக்கு!
* கல்லூரி வாழ்க்கையில்
பாதிக்கு மேற்பட்டோரை
பாழ்படுத்தி, பின்
காணாமலே போகும்
காதல் மாயையிலிருந்து
வேண்டும் விடுதலை
பருவ வயதினர்களுக்கு!
* அம்மி மிதித்து
அருந்ததி பார்க்க
தடையாய் இருக்கும்
வரதட்சணையிலிருந்து
வேண்டும் விடுதலை
கன்னியர்களுக்கு!
* கட்டி அழ வைத்து
அறிவை மழுங்கடிக்கும்
தொ(ல்)லைக்காட்சி
சீரியல்களிலிருந்து
வேண்டும் விடுதலை
குடும்பப் பெண்களுக்கு!
* வாழ்ந்த வீட்டிலேயே
பிள்ளைகளால்
அனுபவிக்கும் - வன்
சிறைக் கொடுமையிலிருந்து
வேண்டும் விடுதலை
வயோதிகர்களுக்கு!
* பசி, பஞ்சம், பட்டினி
பிணிகளிலிருந்து
வேண்டும் விடுதலை
பொது மக்களுக்கு!
* ஆங்கிலேயனிடமிருந்து
விடுதலை பெற்றாலும்
அரசியல்வாதிகளிடமிருந்து
வேண்டும் விடுதலை
அன்னை பாரதத்திற்கு!
— க.விஜயபாஸ்கர், மூவானூர்.
