PUBLISHED ON : பிப் 19, 2012

புரிதல்!
* வெட்டப்பட்ட காய்களாய்
காதல் விளையாட்டிலிருந்து
நாம் வெளியேற்றப்பட்டோம்
நம்மை வெட்டிய
சூழ்நிலைகள் கைகொட்டிச் சிரித்தன!
* கண்ணீர் குளத்தில் தத்தளித்த
நம்மை மீட்டெடுத்த
வேறு சூழ்நிலைகள்
நம்மை துவட்டிவிட்டு,
மாற்றுப் பாதையை காண்பித்தன!
* நீ ஒரு வழியில்
நான் ஒரு வழியில்
நடக்கத் துவங்கினோம்!
உன் விழியை நீ, உன் வழியிலும்
என் விழியை நான், என் வழியிலும்
செலுத்தியபடி...
* கவனமும் சிந்தனையும்
நம் காதலிலிருந்து
நம் வாழ்க்கைக்கு மாறிற்று...
நாம் வாழத் துவங்கினோம்
தனித்தனியாய்!
* காதல் நம்மை கிள்ளவில்லை
அழவைத்து ஆனந்தப்படவில்லை
நம்மை உருக்கி வேதனைப் படுத்தவில்லை!
* எதிர்பாராத தருணமொன்றில்
நம் சந்திப்பு நிகழ்ந்தது...
புன்னகையால் கை குலுக்கிக் கொண்டோம்!
நட்பாய் நலம் விசாரித்துக் கொண்டோம்...
எட்டிப்பார்த்த காதலை
தட்டி அமரச் செய்தோம்!
* பிறகு,
விடை பெற்றுக் கொண்டோம்...
காதலை நம் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தால்,
அது, நம்மை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருக்காது
என்ற புரிதலுடன்!
— வீ.விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி.
