PUBLISHED ON : மார் 25, 2012

என்ன சொல்லப் போகிறாய்?
* விழியில்
ஆயிரம் கவிதைகள்
சொல்கிறாய்...
அருகில் வந்தால்
அலைக்கழிக்க விடுகிறாய்!
* எனக்கான
உன் தடயங்கள்,
என் இதயத்தை
புரட்டிப் போட்ட
பாதைகள்!
* நீயறிந்திட
நான் சொன்ன காதலை - ஏனோ
உனக்குள்ளே
மறைத்து விட்டாய்!
* நீயறிந்திடாததைப் போல
நீ நடந்து கொள்ளும் போது
என் காதலெங்கும் தீயில்
எரிந்திடுகிறது!
* வானத்துக்குள்
நிலவாய் நீ
ஜொலித்துக் கொண்டிருக்க,
உன் வீட்டு செடியில்
பூக்களாய்
என்னை காத்திட வைக்கிறாய்!
* காற்றாய் நீ சுற்றி வர
கண்டு கொள்ளாமல்
நானிருந்தது குற்றம் தான் -
அதற்காகவே
தென்றலாய் நான் வர
புயலாய் நீ போகாதே!
* அன்புப் பார்வையை
எறிந்து விட்டு
ஏன் அதிகாரப் பார்வையில்
ஆட்சி செய்கிறாய்!
* என் அன்பே...
உனக்கும், எனக்கும்
தினந்தோறும் நிகழ்வது
காதல் யுத்தமா...
அல்லது
காம யுத்தமா...
நீயே சொல்லி விடு...
இல்லையெனில்
உன் நினைவில்லாத
உலகில் என்னை
வாழவிடு!
— வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.
