PUBLISHED ON : ஆக 06, 2023

ஆக., 6 - நண்பர்கள் தினம்
பெற்றோருக்கு அடுத்து
கனத்த இதயத்தை
தேற்றும் உறவாய்
இருப்பது தோழமைகள் தான்!
நட்பு -
மனதில் இசைக்கும்
மங்கள நாதம்...
உன்னில் நானும்
என்னில் நீயும்
இணைப் பிரியாமல் இருப்பது!
நண்பர்கள் சூழ இருந்தால்
நரகம் கூட பூஞ்சோலையாகும்!
எண்ணற்ற எதிரிகளையும்கணக்கற்ற துரோகிகளையும்
எதிர்கொள்ள செய்வது நட்பு!
நண்பர்களையும் - நட்பையும்
வெறும் வார்த்தைகளால்
அளந்து விட முடியாது - அது
மற்றொரு இதயத்தையும்
தனக்கான இடத்தையும்
ஆறுதலையும் பெறும்
நிம்மதி தரும் சன்னிதி!
ஆரவார தோழமையின்
நீளமான காலங்களில்
நினைவுக்கூரத்தக்கவர்கள்
ஏராளம் - அவர்கள்
வாழ்க்கையெனும் வங்கிக் கணக்கில்
பெருஞ்செல்வ வரவுகள்!
கடைப் பொருளில்
மட்டுமல்ல கலப்படம்
நட்பிலும் நஞ்சு போல
அமைவது துரதிருஷ்டம்!
கைக் குலுக்கும் தோழர்களும்
பொய்யென போவதுண்டு...
வஞ்சிக்கும் நெஞ்சங்களின்
விலகலின் முடிவுகளாலும்
முற்று பெற்றுவிடும் நட்பு!
நட்பை மதியாதார் கையில்
வைரமாகவே நீ கிடைத்தாலும்
மண்ணில் மறைந்திடும்
கூழாங்கல்லாகவே அறியப்படுவாய்!
நட்பு மேம்பட
கூர் வார்த்தைகளகற்றி
கூட்டுத் தேனீக்களின்
கொட்டிடும் தன்மையகற்றி
தேனாய் சொற்கள் இனித்திட
நட்பை விரிய செய்வோம்!
செல்வங்கள் நிரந்தரமல்ல
தோழமை என்றுமே நிலையானது...
கடைசி மூச்சு வரை
வாழ்வில் சுகமளிக்கும்
உத்தம நண்பர்களை பெறுவோம்
உண்மை நண்பர்களாய் இருப்போம்!
— செல்வி நடேசன்,சென்னை.
