PUBLISHED ON : நவ 27, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருகிற சோதனைகள்
நம்மை வாழ வைக்கின்றன
இல்லையெனில்
வீழ வைக்கின்றன!
முளைக்கிற பிரச்னைகள்
நம்மை உருவாக்குகின்றன
இல்லையெனில்
உடைத்துப் போடுகின்றன!
வதைக்கிற வேதனைகள்
நம்மை பலசாலியாக்குகின்றன
இல்லையெனில்
பலியாக்கி விடுகின்றன!
மிரட்டுகிற சங்கடங்கள்
நம்மை மெருகேற்றுகின்றன
இல்லையெனில்
பொலிவிழக்கச் செய்கின்றன!
துரத்துகிற துன்பங்கள்
நம்மை முறுக்கேற்றுகின்றன
இல்லையெனில்
முடக்கிப் போடுகின்றன!
தோன்றுகிற அச்சங்கள்
நம்மை தெளிவாக்குகின்றன
இல்லையெனில்
குழப்பி விடுகின்றன!
உதிக்கிற அழுகைகள்
நம்மை தேற்றுகின்றன
இல்லையெனில்
உருக்கி விடுகின்றன!
நடக்க வேண்டியவை
நேர்மறையா எதிர்மறையா
என்பதெல்லாம்
நம் கையில் தான்!
அ.ப. சங்கர், கடலுார்.