PUBLISHED ON : ஜன 30, 2011

* பொய்யெனும் கற்பனைக்குப்
பூவைத்து அழகு பார்ப்பவன் கவிஞன்...
உண்மைகளைக் கூர் தீட்டி
குறிவைத்து வீசுபவனும் அவன்தான்!
* கோடி பணம் கொடுத்தாலும்
விஷ விருட்சங்களுக்கு
வேர்களாக மாட்டான்...
அவன் —
பாதையோர வேலியில்
படரும் பூங்கொடி போல்
சுதந்திரம் பழகியவன்!
* கவிஞன் —
வார்த்தைகளை வசப்படுத்திக் கொண்டு
சிந்தனை உளியால்
சிற்பம் செதுக்குவான்...
தனிமை தவமிருந்து
இனிமை கவிதைகளை ஈன்றெடுப்பான்...
சின்னச் சின்ன அழகைக் கூட
அவன் விழிகள் வீணாக்காது!
* இன்பம் துன்பம் எனும்
இரட்டைச் சிறகணிந்து
விண்ணில் உலாவரும்
வீரியப் பறவை அவன்!
* சமுதாயக் கேடுகளையும்,
பண்பாட்டுப் பழுதுகளையும்
அவனது எழுதுகோல்
எடுத்துக் காட்டியே தீரும்!
* அன்னை மொழியையும்,
பிஞ்சு கால் பதிந்த மண்ணையும்
அவன் கடைசி வரை காதலிப்பான்!
* கவிஞனுக்கு
வினாக்குறியாய் வளையத் தெரியாது...
வியப்புக்குறி போல் நிமிர மட்டுமே தெரியும்!
* கவிஞன் என்பவன்
விழிகளுக்கு விருந்தாளி;
மொழிகளுக்கு முதலாளி!
— நா.பெரியசாமி, காட்டுக்குப்பம்.
