
மதம் ஏறிய ஜாதி!
உன்னிலும் என்னிலும்
ஓடுவது ஒரே ரத்தம்
மறுப்பதற்கு மனங்கள் உண்டா?
விண்ணிலும், மண்ணிலும்
கேட்பது நம் ஒரே சத்தம்
இல்லையென்று சொல்ல
இதயங்கள் உண்டா?
அன்னையின் பாலில் ஏது ஜாதி சாயம்
ஆண்டவன் தோளில்
இல்லை அதிகார வர்க்கம்!
அன்றாடம் உதிக்கும்
ஆதவனுக்கு ஆணவம் இல்லை
ஆகாயம் உலவும்
நிலவுக்கு அகந்தை இல்லை!
பள்ளத்தில் புயலாகவும்
சிகரத்தில் தென்றலாகவும்
பாகுபாடு பார்ப்பதில்லை காற்று!
அருவியில் ஒரு சுவையென்றும்
ஆற்று நீரில் ஒரு சுவையென்றும்
தரம் பார்த்து தாகம்
தீர்ப்பதில்லை தண்ணீர்!
பசி அடக்கும் சாதத்திற்கு
ஜாதி பெயர்கள் தெரிவதில்லை
வாசம் தரும் மலர்கள்
மத உறவுகள் அறிவதில்லை!
படித்தும் பட்டம் பெற்றும்
பாழுங்கிணற்றில் விழும் மானிடனே
பகுத்தறிந்து பார்!
மூட்டை கட்டிய உந்தன்
மூளையில் தான் மொத்த இருளும்
அறிவு சுடரேற்றி விலக்கு
அத்தனை ஆணவத்தையும்!
ஒரு தாய் மக்கள் நாமெல்லாம்
உதவாக்கரை ஆவதா
ஜாதி மதம் பிடித்து சகலத்துக்கும்
சண்டையிட்டு சாவதா!
எவரேனும் ஏளனம் செய்யுமுன்னே
ஓரணியில் திரளுவோம் நாம்
ஏற்றத் தாழ்வு இனி இல்லையென்று
இறைவனடி பறை சாற்றுவோம் நாம்!
சமரசம் தான் சந்தோஷமென்று
பரவசமாய் பாடிடுவோம்
பாரினில் இனி நாம் என்றென்றும்!
க. அழகர்சாமி, கொச்சி.