
கொடுப்பினை இல்லை!
நகரும் நாட்களில்,
நான் படும்பாட்டை
எண்ணி அழுகிறேன்...
எழுத்தில் வடிக்கிறேன்!
அதிகாலை விடியலில்
குயிலின் கூவலையோ
பூபாள ராகத்தையோ
ரசிக்க நேரமில்லை...
குக்கர் விசிலிலும்
கூட்டுப் பொரியலிலும்
குழம்பி போகிறேன்!
அழும் குழந்தையை
அரவணைக்கப் போய்,
அடுப்பிலே பாலை
பொங்க விட்டு...
அதைப் பார்க்கும்போதே
அடுத்ததை கோட்டை விட்டு...
அப்பப்பா!
அடுப்படியிலே அஷ்டாவதாணியாய்
அரிதாரம் பூசி...
அலுவலகம் விரைகிறேன்!
வாரறுந்த செருப்பை
வாகாக மாட்டி...
தோலுரிந்த கைப்பையை
தோளிலே தொங்க விட்டு
ஓட்டமும் நடையுமாய்
ஓயாமல் விரைகிறேன்!
பாரம் தாங்காமல்
சாய்ந்து வரும்
அரசுப் பேருந்தில்,
அசாத்தியமாய் நுழைந்து
அடுத்தவர் காலை மிதித்து,
'சாரி' எனும் சொல்லிலே
சங்கடத்தை உணர்த்தி...
நான் மிதிபடும் போது
'அம்மா' எனும்
அவலக்குரல் எழுப்பி...
வியர்வை மழையில் நனைந்து
நிற்கவும் வழியின்றி தவித்து,
விஷமம் செய்யும் வீணரிடமிருந்து
விலக முடியாமல்
விழியால் எச்சரித்து
விதியை நொந்து கொள்கிறேன்!
அவதி அவதியாய்
அலுவலகம் நுழைந்தாலும்
அதிகாரியின், 'அலட்சிய' பார்வையில்
அடங்கிப் போகிறேன்!
கடமையே கதியென்று
கண்ணை மூடிக் கொள்கிறேன்!
அலுத்து களைத்து வீடு வருகையில்
யாரேனும் ஒரு, 'கப்'
காபி கொடுத்தால், 'தேவலை'
என நினைக்கிறேன்!
கொடுக்க யாருமில்லை...
அந்தக்
கொடுப்பினை எனக்கு இல்லை!
காபி கரிக்கிறது
என்
கண்ணீரும் கலந்ததனால்!
— ஆர்.சத்யா, மதுரை.

