தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை...!

கவிதைச்சோலை...!

கவிதைச்சோலை...!


PUBLISHED ON : ஜூன் 29, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

எக்கா எக்கா பேச்சியக்கா,

என் கொடுமையக் கேட்டியா?

வாயக்கட்டி வயித்தக்கட்டி

வருசமெல்லாம் வேலை செஞ்சு

ஆன கஞ்சி குடிக்காம

அடிவயிறு சுருங்கிப்போச்சு!

பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சு

பத்து விரலும் தேஞ்சு போச்சு!

இப்படியெல்லாம் பாடுபட்டு,

நான் சேத்த கொஞ்ச பணத்தை,

எவனோ ஒருபாவிய நம்பி,

இழந்துட்டு நிக்கிறேன்!

என்னென்னமோ பேருவச்ச கம்பெனிக

எத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்...

அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்!

அடுத்த அஞ்சு வருசத்தில

நானும் ஒரு அம்பானியாம்!

ஐம்பதாயிரம் கட்டினாக்கா

அடுத்த வருஷம் லட்சாதிபதி...

அதுக்கு மேல பணம் போட்டா

அரைப்பவுன் தங்கம் தாரேன்...

ஓம்புள்ள கல்யாணத்த

ஓகோன்னு நடத்திரலாம்!

பத்துப் பேரச் சேத்து விட்டா

பத்தாயிரம் கமிஷன் தாரேன்

பட்டுச்சேலை, வாஷிங்மெஷின் தீவாளிப்

பட்டாசும் பரிசாத்தாரேன்...

பிள்ளகுட்டி எல்லாரோட

'பிக்குனிக்கும்' போய் வரலாம்!

இப்படியெல்லாம் சொல்லித்தானே

ஏமாத்திப்புட்டாங்க...

கேப்பையில வடியுறது நெய்தான்னு,

கேணச்சிறுக்கி நான் நம்பிப்புட்டேன்!

அக்கம் பக்கத்தில் சொன்னாங்க

அதிக வட்டி கிடைக்குமுன்னு

ஆசைப்பட்டு கட்டிட்டு

இப்ப அவதியில மாட்டிக்கிட்டேன்!

முந்தாநாளு சேதியில

மூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டே

மூணு பேரு போனாங்க...

யாருன்னு பாத்தாக்க, யாத்தே... என்

ஈரக்கொலை நடுங்கிப் போச்சு!

என்னைப்போல பல பேர அவ(ன்)

ஏமாத்தியிருக்கான்னு

இப்பத்தான் புரிஞ்சிச்சு!

பசி பட்டினின்னு பாக்காம

பாத்துப்பாத்து சேத்தபணம்,

அளவுக்கு மீறின ஆசையால

அத்தனையும் போச்சேக்கா!

பிள்ளை குட்டியக் காப்பாத்த

பெரும்பாடு படுற மக்கா...

அரசாங்கம் சொல்லுறத

ஒரு அரைநாழி கேளுங்க!

பத்துக்காசா இருந்தாலும் அதை

பாதுகாப்பா சேத்து வைக்கணும்...

கெட்ட பின் தானக்கா எனக்கு

எட்டுப்புத்தி வந்திருக்கு!

வேர்வையில வெளைஞ்ச காசு

அது உசுரக்காட்டிலும் பெரிசு...

யோசிக்காம சீட்டுல கட்டி

ஒரு போதும் இழந்துராதீங்க...

அந்த, 'மன்னார(ன்)ங் கம்பெனிகள...' மக்கா நீங்க

அடையாளம் தெரிஞ்சுக்கங்க!

— இரா.தமிழ்செல்வன்,

காவல் ஆய்வாளர்

பொருளாதார குற்றப்பிரிவு - II

மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us