PUBLISHED ON : பிப் 13, 2011

இதய குளத்தில் காதல் கல்லெறிந்து...
* என் பார்வை
அம்பு பட்டு
காயம் பட்டதென்னவோ
உன் இதயமாக
இருக்கலாம்...
ஆனால், வலி
எனக்குள்ளே!
* எட்டாக்கனி நீயென்பதால்
உன்னை மறக்க
நினைத்து, நினைத்தே
தினம் உன்னையே
நினைத்து கொண்டிருக்கிறேன்...
மறந்து போனேன்
உன்னை மறப்பது
எப்படியென்று!
* என் அப்பாவின்
நினைவு நாளன்று
கண்ணீர் கூட
வர மறுத்து விட்டது...
ஏன் தெரியுமா?
உப்பு நீர்
உன்னை உறுத்துமென்று!
* என் காதலை
ஏற்காமல்
காலம் தாழ்த்துவதேனோ?
என்னை
கவிஞனாக்கிடவா...
உனக்கு தெரியுமா?
உன்னை முதன்முதல்
பார்த்தபோதே
நான் ரசிகனாய்,
கலைஞனாய், கவிஞனாய்
மாறிப்போனேனென்று!
* என்னுடல்
இளைத்து விட்டது
என்கின்றனர்
உறவினர்கள்...
உன்னால் தானே
இரவு பகலாவும்,
பகல் இரவாகவும்
என்னுள் வானிலை
மாற்றம் நிகழ்ந்தது!
அதற்கு ஈடுகொடுக்க
முடியாத உடல்
இளைக்காமல்
என்ன செய்யும்?
* உன் இதயக் குளத்தில்
காதல்
கல்லெறிந்துவிட்டு
நான் கலங்கி கொண்டிருக்கிறேன்...
நீயோ,
தெளிவாகவே இருக்கிறாய்
மரபு வேலிக்குள்!
— தே.பழனி, ராட்டினமங்கலம்.
