
ஜூலை 17 - ஆடி மாதப்பிறப்பு
தமிழகத்தில், ஆடி மாதத்தில் மாரியம்மனை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வணங்குகிறோம். தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில், போனாலு என்ற பெயரில், இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
'போனாலு' என்ற தெலுங்குச் சொல், போஜனாலு என்பதன் திரிபு. போஜனம் என்றால் உணவு. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பது, தமிழகத்தில் வழங்கும் ஒரு சொலவடை.
தமிழகத்தில், ஆடி மாதம் மாரியம்மனை வணங்கக் காரணம், விவசாயம் செழித்து, தங்கு தடையின்றி உணவு கிடைப்பதற்காக தான். மாரி என்றால் மழை. இதையே தங்களுக்கு தடையின்றி போஜனம் கிடைக்க, போனாலு என்ற பெயரில் கொண்டாடுகின்றனர், தெலுங்கு மக்கள்.
தமிழகத்தில் ஊர் காவல் தெய்வமாக காளி, வடக்குவாசல் செல்வி, மாரி ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஊரின் வடக்கு எல்லையில், கோவில்கள் இருக்கும்.
தங்கள் எல்லை காவல் தெய்வத்துக்கு, எல்லம்மா என்று பெயர் சூட்டியுள்ளனர், தெலுங்கு மக்கள். எல்லைக் காவல் தெய்வம் என்பதால், இப்படி ஒரு பெயர்.
ஐதராபாத்திலுள்ள எல்லைக் காவல் தெய்வத்தை, ஜெகதாம்பிகா என்பர். கோல்கொண்டா போர்ட் எனுமிடத்தில், இந்தக் கோவில் உள்ளது. இங்கு, போனாலு திருவிழா மிகவும் விசேஷம்.
செகந்திராபாத் - உஜ்ஜைனி மகாகாளி
(தமிழக தென் மாவட்டங்களில் இந்த தெய்வத்தை, உச்சி மாகாளி என்பர்.) கோவிலில், போனாலு கொண்டாட்டம் விசேஷமாக இருக்கும். ஐதராபாத் லால்தர்வாசாவிலுள்ள மகா காளி கோவிலில், இந்த விழா மிக மிக விசேஷம். இங்கு தான் மிக அதிக மக்கள் கூடுவர்.
இந்த விழா பெண்களுக்கே உரியது. நம் ஊர் அம்மன் கோவில்களில் பால் குடம் எடுப்பது போல, இங்கு, தீர்த்தக்குடங்களுடன் ஏராளமான பெண்கள், ஊர்வலமாக வருவர். இந்த தீர்த்த நீர், எல்லையம்மன் என்ற பெயரிலுள்ள காளி மாதாக்களுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால், போதுமான மழை பொழிந்து, விவசாயம் தழைக்கும் என, நம்புகின்றனர், பக்தர்கள்.
பார்வதியின் அம்சமே எல்லையம்மன். தசாவதாரங்களில் ஒன்றான, பரசுராமரின் தாய் ரேணுகாவை, எல்லையம்மனின் சகோதரி என்று சொல்வர்.
எல்லையம்மனுக்கு பொலிரம்மா, அங்கம்மா, முத்யாலம்மா, தில்லி பொலாசி, பங்காரம்மா, மாதம்மா மற்றும் ரேணுகா என்ற ஏழு சகோதரிகள் உள்ளனர். தமிழகத்தில், இவர்களை சப்த மாதர்களாக வழிபடுகின்றனர். இந்த தெய்வங்களுக்கும், போனாலு திருவிழாவில் சிறப்பு பூஜை உண்டு.
தமிழகத்திலும் ஆடி ஞாயிறன்று, அம்மனுக்கு, கூழ் படைத்து தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது. இதில், விசேஷம் என்னவென்றால், தானம் கொடுப்பவரை விட, தானம் பெறுபவருக்கு புண்ணியம் அதிகம் கிடைக்கும்.
ஆடியை வரவேற்போம். ஆண்டு முழுவதும் போதுமான மழை பொழிய அம்மனை வேண்டுவோம்.
தி. செல்லப்பா