தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பொத்திப் பொத்தி வளர்ப்பதா?

பொத்திப் பொத்தி வளர்ப்பதா?

பொத்திப் பொத்தி வளர்ப்பதா?


PUBLISHED ON : பிப் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.

நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது.

இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்று விட்டன. முதலில் பெறப்படுகிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்... நம்மை பாடாய்ப்படுத்துகிறது.

தந்ததைப் பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்கள் காலம், மாறி விட்டது. பிள்ளைகளிடம் வால் தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார்த்த பெற்றோர், 'போதும்டா சாமி...' என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.

ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக்கியத்துவம் தரப்போக, சாப்பிடக் கூடப் பரிசு கேட்கின்றனர்.

எங்கள் காலத்திலெல்லாம், 'எங்கே போற, எப்ப வருவேங்கிற...' கேள்வி எல்லாம் கிடையாது. அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற்றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா... அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட்டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.

இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏகமாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா - பாட்டிகள் வேறு!

ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, 'டீன் - ஏஜ்' எனப்படும், 19 வயது வரை, 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே...' என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.

கடமை மிக்க காவல் துறையினரையும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

'ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது...' என்று கூறி வளர்க்காமல், 'ஐஸ் வாட்டர் குடிச்சே, சாக்லேட் தின்னேன்னு வச்சுக்க... அப்புறம், டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போய், ஊசி போடச் சொல்வேன்...' என்று, ஊசியை கூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர்.

'கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்தனை முறை சொல்றது... எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடின்னு!' வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின்றனர்.

'சுண்டு விரலை, உள்பக்கமாக மடி; அதன்மீது, கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது...' என்று, இயற்பியல் ஆசிரியர்களாக மாற, பெற்றோர் தயாரில்லை!

செய்ய வேண்டியதை சொல்லித் தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதால், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.

பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா... வயதுப் பிள்ளைகளையும் பச்சைப் பிள்ளைகளை நடத்துவதை போல் நடத்தி, அவர்களை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.

'என் கையை விடு... இரண்டு பக்கமும் பார். திடீரென்று ஓடிக் கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட்டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதானித்துக் கட...' என்று இவர்களுக்கு ஒரு பாடமே நடத்தப்பட வேண்டாமா... சாலையைக் கடக்கவே, இந்தப் பெற்றோர் கற்றுத்தராத போது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?

திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்... தங்களை விட்டு, இரண்டடி கூடப் தள்ளிப் போகக் கூடாதாம். பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூடாது...' என்று கட்டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர் போலவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர்களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!

குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர்வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினராக இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us