தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு —

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் நான். முதல் பெண், பி.இ., முதலாம் ஆண்டும், இரண்டா வது பெண், பத்தாம் வகுப்பும் படிக்கின் றனர். என் கணவர், விமான படையில் பணிபுரிந்து, வெளியில் வந்து, தற்போது, மத்திய அரசு துறையில், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு பத்து வருடங்களாகவே கோவில்களுக்கு செல்வது தான் இஷ்டம். அது போக, தலைகுளித்தால் என் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதனால், சாமி பேரைச் சொல்லி, நான், என் கணவரை விட்டு விலக ஆரம்பித்தேன், .

அவரும் என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; நான் கேட்கவில்லை் விளைவு, அவர், தற்போது, வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துள்ளார். அதையும், அவரே என்னிடம் மறைக்காமல் சொல்லி விட்டார். ஆனால், என்னால் தான், இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இப்போது என்னையே எனக்கு பிடிக்க வில்லை.

என் கணவர் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணையே, என் கணவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, நான் எங்காவது கோவில், குளம் போய், மொட்டை போட்டு, ஆசிரமத்தில் சேர்ந்து விடலாமா அல்லது என் கணவரின் நடத்தைகளை கண்டும், காணாமலும் இருந்து விடவா இல்லை தற்கொலை செய்து கொள்வதா?

ஒரு நல்ல பதிலை தாருங்களேன்... ப்ளீஸ்!

இப்படிக்கு,

அன்பு சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

'என்னையே எனக்கு பிடிக்கவில்லை... முடியாத பட்சத்தில், தற்கொலை செய்து கொள்வதா; இல்லை, கணவர் விரும்பும் பெண்ணையே அவருக்கு மறுதிருமணம் செய்து வைத்து, நான் சாமியாராக போவதா...' என்று கேட்டு, உங்களின் உள்ளக் குமுறல்களை கொட்டி எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் இரு பெண்களுக்கு தாய் நீ. கணவரோ விமானப் படையில் பணிபுரிந்து, இப்போது மத்திய அரசு துறை யில் பணிபுரிகிறார். அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம். உன் இறைவழிபாடு முறைகள், எதிர் பார்க்கும் சடங்குகள் அதை தடை செய்கிறது.

ஒவ்வொரு முறையும் குளித்து விட்டு வேலை பார்ப்பதால், உங்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதனால், செக்ஸ் வேண்டும் என, கருதிய உங்கள் கணவர், வேறு ஒரு பெண்ணை நாடியிருக்கிறார். இதனால், குடும்பத்தில் குழப்பம். அப்படித் தானே!

சகோதரியே, சில விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கணவன் -மனைவி உடல் உறவிற்கு பின், தலைக்கு குளித்து விட்டுத்தான் சமையல் செய்வது அல்லது கோவிலுக்குச் செல்ல வேண்டும்... இல்லையேல், அது பாவம், தீட்டு என்று யார் சொன்னது? இதை, ஒரு சடங்காய் யார் ஏற்படுத்தியது?

உறவிற்கு பின் உடலை சுத்தமாய், கழுவினாலே போதும். இன்றும் சிலர், வீடுகளில் படுக்கையறையில், எந்த சாமி படமும் வைத்திருப்பது இல்லை. கேட்டால், தெய்வ குத்தம் என்று கூறுவர். இவைகள் எல்லாம், பல்வேறு காலக்கட்டத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்கள்.

பல ஆண்டுகள், ராணுவத்தில் பணிபுரிந்த கணவர், சிவில் வாழ்க்கையை துவங்கும் போது, மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப் பதில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நேரத்தில், ஆயிரம் கண்டிஷன் போட்டதால், கடுப்பாகி, வேறு ஒரு பெண்ணை நாடியிருக்கிறார் உன் கணவர்.

அப்பவும் உன் அனுமதியுடன் தான் இச்செயலையும் செய்திருக் கிறார். உன் கணவரின் இம்மாதிரியான நிலைக்கு, நீயே மூல காரணம்.

ஆக, உன்னிடம் கிடைக்காத ஒன்றை, வேறு ஒரு பெண்ணிடம் பெற்று கொண்டிருக்கிறார். நீயோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இறைவழிபாடு என்ற பெயரில் உன்னையும், கணவரையும் ஏமாற்றி, மனதளவில் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறாய்.

சரி, உன் பிரச்னைக்கான வழிமுறைகளை பார்க்கலாம்...

இறக்கும் வரை கணவன் - மனைவி தாம் பத்திய உறவு இருப்பது நலம்; அது இயற்கையும் கூட. அது, அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும். இதற்கு எந்த காலமும், நேரமும் கிடையாது என்ற, யதார்த்தமான உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

துறவறத்தின் மூலம் மட்டுமல்ல, இல்லறத் தின் மூலமும் இறைவனைக் காண முடியும் என்பதை, மனதில் வைத்துக் கொள்.

உன் கணவர் செய்யும் அனைத்தையும், கண்டும் காணாதது போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் நேராக, மனம் திறந்து உன் நிலையை எடுத்துரைத்து, படிப்படியாக அவரை சந்தோஷப்படுத்தி, முடிவில், உன் வழிக்கு கொண்டு வர முயற்சி எடு.

வாழ்க்கையில் அதிகமான ஆண்டுகள், ராணுவத்தில் இருந்ததினால், உன் கணவருக்கு 'செக்சில்' அதிக ஆசை ஏற்படுவதில் தவறில்லை. இருப்பினும், முதலில் நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து, பின் உன் அன்பினால், உன் நிலையையும், குடும்ப சூழல், மகள்களின் முன்னேற்றம் குறித்து விளக்கலாம். மேலும், உடல் உறவைத் தவிர, வேறு முறைகளைப் பற்றியும் பக்குவமாய் எடுத்துச் சொல்லலாம்.

கணவரின் செயலை, எந்த காரணத்தைக் கொண்டும், பெரிய குற்றமாய் பாவிக்காமல், அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

மொட்டையடித்து காவி உடை உடுத்துவது, மனைவி, அம்மா என்ற, உன் பல கடமைகளை தட்டி கழிக்கும் செயல். எந்த மதத்திலும், 'செக்ஸ் கூடாது' என்று, சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, உன்னையே நீ மீண்டும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உன் குழந்தைகளுக்கு, இவ்விஷயம் தெரிந்து விட்டால் என்ன நினைப்பார்கள் என்று, கவலைப்படுவதை விட, கணவரிடம் எடுத்துச் சொல்லி, பாதுகாப்பான உறவை வைத்துக் கொள்ளலாம்.

இப்பிரச்னை பெரிதாகி, உன் வளர்ந்த பெண் குழந்தைகளுக்கு தெரிய வந்தால், அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று, யோசனை செய்.

எந்த ஒரு பிரச்னைக்கும், தற்கொலை, ஒரு தீர்வாகி விடாது.

உன் பிரச்னையை உன்னால் சமாளிக்க முடியாது என, ஆணித்தரமாய் நினைக்கும் பட்சத்தில், அருகில் இருக்கும் மனநல மருத்துவரை, ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.

சகோதரியே... கடித ஆரம்பத்தில், 'கடவுள் துணை' என்று, எழுதியிருந்தாய். 'கணவர் துணை' என்பதையும், மனதில் கொண்டு, இல்லற வாழ்வில் இசைந்து வாழ, என் அன்பான வாழ்த்துகள்.

என்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us