
ஒரு ஆண்டுக்கு பின், நண்பன் பிரதாப்பை சந்திக்கிறேன்;
கை குலுக்கி, கட்டிப் பிடித்து, நலம் விசாரித்துக் கொண்டோம்.
மனைவி, குழந்தைகள், வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ் என எல்லாவற்றிலும் இருவருமே நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன், அவனுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்!
ஆனால், என்னிடம் இருந்த மன நிறைவு, அவனிடம் இல்லை என்பது அவன் வார்த்தைகளின் மூலம் தெரியவந்தபோது கொஞ்சம் திகைத்துப் போனேன்.
நானும், பிரதாப்பும் பால்ய சினேகிதர்கள். எங்கு போனாலும், வந்தாலும் சேர்ந்து தான் போவோம்; வருவோம்.
படிப்பிலும் எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை. நான் பெயிலானால், அவனும் பெயிலாவான் அல்லது பார்டர் மார்க்கில் பாசாவோம்; கவலைப்பட மாட்டோம். அதற்குத் தான் வீட்டில் பெற்றோர் இருக்கின்றனரே!
ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு ஆண்டுகள் பெஞ்ச் தேய்த்து விட்டு, பத்தாவது பெயிலாகும்போது, நாங்கள் மாணவர்கள் என்ற நிலையை கடந்து, இளைஞர்களாக இருந்தோம். மீசை தாடியெல்லாம், கருகருவென வளர்ந்திருந்தது.
'உன்னால இவன் கெடறானா, அவனால நீ கெடறியா... எப்படா உருப்படப் போறீங்க...' என்று இரு வீட்டாரும் வஞ்சனை இல்லாமல் கரித்துக் கொட்டியதில், இருவருக்கும் ரோஷம் வந்து வீட்டை துறந்தோம். 'வந்தால் வெற்றியோடு வருவோம்; இல்லையேல் வீர மரணம்...' என்று ஒரு வரி எழுதினோம். வேலை தேடி அம்பத்தூர் எஸ்டேட்டில் கம்பெனி கம்பெனியா ஷட்டரை தட்டினோம்.
'வேலை காலி இல்லன்னு போர்டு தொங்குதே... கண்ணு என்ன குருடா...' என்று எரிந்து விழுந்தனர்.
அதை இங்கிதமாக சொல்லக் கூடாதா... 'மிஷின்களோடு வேலை செய்து இவன்களும் மிஷின்களாய்ட்டானுங்க போல...' என்று நினைத்துக் கொண்டோம்.
பசி, வெயில் மற்றும் கால் வலியில், தூசு படிந்த அசோக மரத்தின் சொற்ப நிழலில் சுருண்டு உட்கார்ந்தோம். 'வீர மரணம் இல்ல; நமக்கு தெரு ஓர மரணம் தான்...' என்றான் பிரதாப்.
'சோர்ந்து போகாதடா... அம்பத்தூர விட்டா என்னா, கிண்டியிலும் தொழிற்பேட்டை இருக்கு...' என்றேன் வறண்ட குரலில்!
'தம்பிகளா... யாரு நீங்க... இங்க என்ன செய்றீங்க?' என்ற ஆதரவான குரல் கேட்டு, விருட்டென்று எழுந்தபடியே, 'வேலை தேடி வந்தோம் சார்; யாரும் கொடுக்க மாட்டேங்கறாங்க...' என்று கைகளை கட்டியபடியே அந்த மனிதரிடம் கூறினோம்.
'என்ன படிச்சிருக்கிங்க?' என்று கேட்டார் அப்பெரியவர்.
'பத்தாவது பெயில் சார்; ஆனா, ஒவ்வொரு வகுப்பையும் ரெண்டு ரெண்டு வருஷம் படிச்சிருக்கோம்...' என்று உண்மையை சொல்ல, அவர், கடகடவென சிரித்து, 'வாங்க என் கூட...' என்று அழைத்துப் போனார்.
சாதாரண பவுண்டரி தான்; சொற்ப பேர்கள் வேலை பார்த்தனர். அதில் ஒருவரை அழைத்து, 'இந்த பசங்களுக்கு வேலை சொல்லி கொடு...' என்றவர், 'அதுக்கு முன்ன இவங்களுக்கு சாப்பிட எதாவது கொடு...' என்றார்.
அந்த புள்ளியில் ஆரம்பித்த எங்கள் வாழ்க்கை, கிடுகிடுவென வளரத் துவங்கியது.
எங்களை தன் சொந்த செலவில், பகுதி நேர டெக்னிக் படிப்பில் சேர்த்து, ஒரு இன்ஜினியர் லெவலுக்கு உயர்த்திப் பார்த்த முதலாளிக்கு, நாங்கள் இறுதிவரை உழைத்து நன்றிக் கடன் செலுத்துவதாக, முண்டகக் கண்ணியம்மன் முன் சத்தியம் செய்தோம்.
பதினைந்து ஆண்டுகள் கால ஓட்டத்தில் நாங்களும் கல்யாணம், குழந்தைகள், வீடு, வாகனம் என்று செட்டிலானோம்.
நாங்கள் உருப்பட்ட ரகசியம் புரியாமல் ஊருக்குள், 'இது எப்படி?' என்று ஆச்சரியப்பட்டனர்.
'எல்லாத்துக்கும் மூல காரணம் எங்க முதலாளி தான்...' என்று கோரஸ் பாடினோம். நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஒரு நெருடல்.
ஒரு நாள், வீட்டுக்கு பிரதாப் வந்து, 'ஒரு முக்கியமான விஷயம்; நம் கம்பெனி திவால் ஆகப் போகுது; வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கைவிட்டு போய்கிட்டிருக்கு...' என்றான்.
'யார் சொன்னது?' என்றேன்.
''தெரியாதா... கம்பெனி பூரா இதுதான் பேச்சு; இன்னைக்கோ, நாளைக்கோ இழுத்து மூடப்படலாம்ன்னு! ஜியார் கம்பெனில ரெண்டு வேலை காலியாயிருக்கு; கூப்புடறாங்க. சம்பளம், சலுகை எல்லாம் ரெட்டிப்பு. எனக்கு ஒரு வேலையை சொல்லிட்டு, இன்னொரு போஸ்ட்டை உனக்கு, 'ரிசர்வ்' செய்துட்டு வந்திருக்கேன்...' என்றான்.
அதிர்ச்சியடைந்த நான், 'பிரதாப்... இதை, மத்தவங்க பேசியிருந்தா பொறுத்திருப்பேன்; நீயோ, நானோ அப்படி பேசக் கூடாது. நினைச்சுப் பாரு... அன்னைக்கு, அந்த மனுஷன் அரவணைக்கலன்னா, இன்னைக்கு நாம இப்படி இருந்திருப்போமா... கம்பெனிக்கு நெருக்கடி வர்றது ஒண்ணும் புதுசு இல்ல. அந்த நேரத்திலும் உன்னையோ, என்னையோ அவங்க கைவிட்டதில்ல. பாதி சம்பளமாவது கொடுத்து வயிறு வாடாம பாத்துக்கிட்டாங்க.
'ஒரு கட்டத்தில, ஊழியர்கள் வெளியேறிய போது, 'போங்க... எனக்கு செல்வமும், பிரதாப்பும் இருக்காங்க'ன்னு நம்பிக்கையா சொன்னவரு நம்ம முதலாளி...' என்றேன்.
'இதெல்லாம் நீ சொல்லித் தான் தெரியணுமா... அப்போ நாம கல்யாணமாகாதவங்க; பன்னும், டீயும் சாப்பிட்டு, ஷெட்டுக்குள்ளயே வாழ்ந்தோம். இப்ப அப்படி இல்ல; வசதியாயிட்டோம். அந்த வசதிக்கு நம்ம குடும்பங்கள பழக்கிட்டோம். குழந்தைகள் பெரிய கான்வென்டில் படிக்க, நம் மனைவியர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் போய் வராங்க. ஆசைகள, கனவுகளை வளர்த்துக்கிட்ட அவங்களுக்கு, கம்பெனி திவாலாகும்போது உண்டாகும் ஏமாற்றத்த நினைச்சுப் பாக்க முடியாது...' என்றான்.
'முட்டாள்... கம்பெனிய பத்தி இன்னொரு முறை அப்படி பேசாத... கால் நூற்றாண்டு காலம் நின்னு நிலைச்சியிருக்கிற ஒரு நிறுவனத்தை, உறுதியில்லாத சில தகவல்களை வச்சு சந்தேகப்படற... அந்த ஜியார் கம்பெனி, நேத்து பெய்ஞ்ச மழையில் இன்னைக்கு முளைச்ச காளான். எனக்கு என்னமோ இது எல்லாம் அவங்க சதியா கூட இருக்கலாம்ன்னு தோணுது; அவசரப்பட்டு அதுக்கு பலியாயிடாதே, சார் கிட்டே பேசுவோம்...' என்றேன்.
'என்ன பேசிடப் போறார்... அரவணைச்சதும், தோழமை பாராட்டியது எல்லாம் ஆரம்ப காலத்துல தான். அப்ப, கம்பெனி ஒரு ஷெட்டுக்குள்ளே இருந்துச்சு. எட்டு பேர் தான் வேலை பாத்தாங்க. இன்னைக்கு, நூத்துக்கணக்கானவங்க வேலை பாக்கறவங்க. கம்பெனிக்கு ஒரு இடம்; நிர்வாக அலுவலகத்துக்கு வேற ஒரு இடம். கடைசியா அவரை பார்க்க போனபோது, அவரோட பி.ஏ., அபாயின்மென்ட் இருக்கான்னு கேட்டு துரத்தல...' என்றான்.
'பிரதாப்...'
'நான் முடிவு செய்துட்டேன்; வீண் சென்டிமென்ட் வேணாம். இங்கே விசுவாசத்துக்கு சம்பளம் தரல. நம் உழைப்புக்கான ஊதியத்தைக் கடந்து, ஒரு பைசா கிடையாது. அதுக்கும் உத்தரவாதமில்ல எனும்போது, இதே வேலைக்கு, இதைக் காட்டிலும் அதிக ஊதியம் கொடுக்கும் இடத்துக்கு மாறுரதுதான் நமக்கு நல்லது. நான் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டேன்; உனக்காக ரெண்டு நாள் காத்திருப்பேன். நண்பன்னாலும் அதுக்காக ஒரேயடியா காத்திருக்க முடியாது. அந்த இடத்துக்கு வேற ஆளை சிபாரிசு செய்திடுவேன்...' என்று நிர்தாட்சண்யமாக சொல்லிப் பிரிந்தான்.
எனக்கு ஏற்பட்ட மன இறுக்கம், குறைய பல மணி நேரம் ஆனது. கம்பெனி நிலையை கூர்ந்து பார்த்த போது, பிரதாப் பயந்ததற்கு காரணம் இருப்பது தெரிய வந்தது. அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் ரத்தாகியிருந்தது. செய்து கொடுத்த வேலைகள் ரிஜெக்ட் ஆகி திரும்பிக் கொண்டிருக்க, முதலாளியும் அதை ஒப்புக் கொண்டார்.
'ஆமாம் செல்வா... நிலைமை மோசமாயிருக்கு; ஆனா என்ன... அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே, சமாளிச்சுடலாம்...' என்றார். அந்த, 'நீங்க எல்லா'மில் பிரதாப் மிஸ்ஸானது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
''வாழ்க்கையில திருப்பங்கள் எப்படியெல்லாமோ நேர்ந்துடுது. கம்பெனி திவாலாகும்ன்னு பயந்து ஓடின... ஆனா, நிலமை கொஞ்சம் மோசமானாலும், உடனே, ஒரு புது ஆர்டர் மூலம் கம்பெனி நிமிர்ந்தது. அதுபோலவே, நீ சேர்ந்த புது நிறுவனம் மேல் சந்தேகப்பட்டேன். ஆனால், அதோட பர்பாமன்ஸ் பாசிட்டிவா இருக்கு. உனக்கு அங்க நல்ல வரவேற்பு, நிறைய சம்பளம்ன்னு கேள்விப்பட்டேன் ரொம்ப மகிழ்ச்சி. ஆக, ரெண்டு பேர் முடிவும் சரின்னு ஆயிடுச்சு,'' என்றேன்.
''இல்ல,'' என்றான் சட்டென்று பிரதாப். அவனை கேள்விக் குறியாக பார்த்தேன்.
''பண ரீதியாக பார்த்தால் என் முடிவு சரி; எனக்கு வெற்றி தான். பணம் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் தான். ஆனா, அதற்கு அடியில் ரத்த நாளம் போல் ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு பேர், நம்பிக்கை, விசுவாசம். புது கம்பெனியில் என்னை தாங்குறாங்க; ஆனால், சேர்ந்த அன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னாங்க பாரு... செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. 'பதினைஞ்சு வருஷம் உங்கள ஆதரிச்ச இடத்தில, ஒரு பிரச்னைன்னு வந்தவுடனே விட்டு விலகி வந்துட்டிங்க... நாங்களோ புது நிறுவனம். எங்களுக்கு உங்க அனுபவமும், அறிவும் உதவும்ன்னு நம்பி ஏத்துக்கறோம். இங்கும் சிக்கல் வரலாம்; அந்த இக்கட்டான நேரத்தில் கைவிடாம இருப்பிங்களா'ன்னு கேட்ட போது, செத்துப் போய்ட்டேன்
''எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், என் மேல் ஒரு கண் வச்சுக்கிட்டே இருக்காங்க. முதுகுல ஒரு ஈட்டி முனை தொட்டுக்கிட்டு இருக்கிறாப்லயே இருக்கு. இந்த சந்தேகம் போயி, எப்போ அவங்க என்னை முழுமையாய் நம்புவாங்கன்னு தெரியல; இத நினைச்சு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது,'' என்றான்.
''விடு... விசுவாசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது; செயல்ல தான் காட்டணும். அவங்க என்ன வேணும்ன்னாலும் நினைச்சுட்டு போகட்டும். நீ, உன் வேலையில குறை வைக்காதே. காலப்போக்கில சரியாயிடும்,'' என்றேன்.
''எனக்கும் அந்த நினைப்பு தான்,'' என்று விடை பெற்றான்.
அவன் வேதனையை என் வேதனையாக்கி, நின்ற இடத்திலேயே நின்றேன் வெகுநேரம்.
பி.எஸ்.சுசீந்திரன்