sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 27, 2015

Google News

PUBLISHED ON : செப் 27, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என்னுள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிற விஷயத்தை, தீர்க்க வழி தெரியாமல், என் அன்னையாக உங்களை நினைத்து, உங்கள் உதவியை நாடுகிறேன்.

என் தோழிக்கு வயது, 45; சமூகசேவகி. அவளது கணவரும் நல்ல வேலையில் உள்ளார். நாங்கள், 13 ஆண்டுகளுக்கு மேல் குடும்ப நண்பர்கள். ஒருநாள் கூட, நாங்கள் இருவரும் பேசாமல் இருக்க மாட்டோம். என் இரு மகன்களும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 படிக்கின்றனர். அவளுக்கும் இதே வயதில் ஆண், பெண் என, இரு குழந்தைகள். அவர்கள் வீட்டில் என்ன பிரச்னை என்றாலும் எனக்கு தெரிந்துவிடும். உடனே, நானும், என் கணவரும் சென்று சமாதானம் செய்வோம். எங்கள் குடும்பத்தில் பிரச்னை என்றால், அவர்கள் வந்து தீர்த்து வைப்பர். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

மூன்று மாதங்களுக்கு முன், அவள் வீட்டிற்கு சென்றிருந்த போது, அழுது கொண்டே ரொம்ப நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தாள். நானும், தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, வெளியிலேயே காத்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு பின், காலிங்பெல்லை அழுத்தினேன்; முகம் கழுவி என்னை வரவேற்றவளிடம், 'ஏன் அழுதாய்?' என்று நானும் கேட்கவில்லை; அவளும் சொல்லவில்லை.

அதன்பின்,

எப்போது போன் செய்தாலும், 'பிஸி' என்றே வந்தது. 'தினமும் வீட்டிற்கு வா...' என, அடிக்கடி போன் செய்தவள், இப்போது ஏன் இப்படி இருக்கிறாள் என குழப்பமாக இருந்தது. ஒருநாள், நானே என்னவென்று கேட்டேன். 'பள்ளி தோழி ஒருத்தி, எங்கள் தெருவிற்கு குடி வந்திருக்கிறாள்; அவளிடம் தான் போனில் பேசுகிறேன்...' என்றாள்.

பின், ஒருநாள், அவள் தோழியையும் சந்தித்தேன்; அவர்கள் இருவரும், ஒரு ஆணைப் பற்றியே பேசினர். அதைப் பற்றி கேட்ட போது, 'என் கணவரை எனக்கு பிடிக்கவில்லை; என் கணவரின் நண்பர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருடன் தான் நாங்கள் பேசுகிறோம்...' என்றாள். அன்றிலிருந்து அவளுடன் பேச பிடிக்கவில்லை;

இவ்விஷயத்தை அவள் கணவரிடம் கூறினால், அவர்கள் வீட்டில் பிரச்னையாகி விடும். சொல்லாமல் விட்டால், ஒரு குடும்பமே சீரழியும்.

நானும், இதை யாருக்கும் தெரியாமல் சரி செய்து விடலாம் என்று நினைத்தேன்; முடியவில்லை.

அவள் தம்பிக்கு திருமணம் நடைபெற்ற போது, என்னையும் அழைத்திருந்தாள். அங்கு, அவனும் வந்திருந்தான்.

இதை நினைத்து, என்னால் சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை. தப்பு நடக்குது, என் உயிர் தோழி இதில் சிக்கி, சீரழியப் போகிறாள் என்று தெரிந்தாலும், தடுக்க வழி தெரியவில்லை. கடைசியாக, 'உன் கணவர் பணம் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; என் பையனுக்கு, உன் மகளை திருமணம் செய்து கொள்கிறேன். நீ திருமணத்திற்காக எதுவும் செய்ய வேண்டாம். தீர்க்க முடியாத பிரச்னை எதுவும் இல்லை. நான், உன் கணவரோடு பேசுகிறேன்...' என்று, அவளிடம் பேசிப் பார்த்தேன்; அதிலும், எனக்கு தோல்வி தான் கிடைத்தது.

அவள் என்னுடன் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை; அவளது வாழ்வை, சரி செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். என் தோழிக்காக, அவள் குடும்பத்திற்காக நான் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன், கரைசேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!

இப்படிக்கு,

அன்பு மகள்.


குமுறும் எரிமலைக்கு —

உன் உயிர்தோழி, அவளது பள்ளிதோழியுடன் சேர்ந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறாள். அதை மோப்பம் பிடித்த உன்னை, வெறுத்து ஒதுக்குகிறாள். இருந்தாலும் நீ அவளை காப்பாற்ற வழி தேடுகிறாய்.

அளவுக்கு மீறினால், அமிர்தமும் விஷம் என்பதை மக்கள் உணர்வதில்லை. நட்பு பாராட்டுவது என்றால், அதீத நட்பு பாராட்டுவது; பகைமை பாராட்டுவது என்றால், உச்சகட்ட பகைமை பாராட்டுவது! இவை இரண்டுமே நல்லதல்ல. அண்டை, அயலாருடன் நட்பு பாராட்டும் போது, அவர்கள் சிறுநீர் கழிக்கப் போவதை கூட நம்மிடம் சொல்லி விட்டு தான் போக வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.

தினமும், 50 வார்த்தைகள் பேசுபவர்கள், ஒரு நாள் தவறி, 49 வார்த்தைகள் மட்டுமே பேசினால், அன்பில் விரிசல் விழுந்து விட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அண்டை வீட்டு பெண் நம்மை விட, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், அதிக இன்முகம் காட்டி விட்டால் போதும்... மனதில் சாத்தான் கதக்களி ஆடுவான். உறவுகளை விட, நட்புகளில் தான் எதிர்பார்ப்பு அதிகம். நட்பு கூடக் கூட சந்தேகமும், ஈகோவும் பத்து மடங்கு கூடும். மிதமிஞ்சி நட்பு பாராட்டினால், பிரிவு நிச்சயம்.

உன் நடத்தை தெரிந்த உன் தோழி, அவள் கள்ளக்காதலுக்கு நீ துணையாக நிற்க மாட்டாய் என்று தான், உன்னை விட்டு விலகி நிற்கிறாள். புதை சேற்றில் நிற்பவள், உன்னையும் சேர்த்து புதைசேற்றுக்குள் இழுக்காமல் விட்டாளே என, சந்தோஷப்படு.

உன் தோழியுடன் தனிமையில் அமர்ந்து மனம் விட்டு பேசு. அவளது கள்ளக்காதல், அவளையும், அவளது குடும்பத்தையும் சீரழித்துவிடும் என்பதை அறிவுறுத்து. உன் அறிவுரையை உன் தோழி கேட்க மறுத்தால், அவளது பள்ளி தோழியை தனியே சந்தித்து, 'புரோக்கர் வேலை பார்ப்பதை நிறுத்து...' என எச்சரி. அவளும் உன் பேச்சை கேட்க மறுத்து விட்டால், உன் தோழியின் கணவரை சந்தித்து, விஷயத்தை நாசுக்காய் கூறி, எச்சரிக்கை செய்.

இரண்டாவது வழி, உன் தோழியுடனான உறவை படிப்படியாக குறைத்து, இறுதியாக முற்றுப்புள்ளி வை. உன்னை உதாசீனப்படுத்துபவளுக்கு ஏன் கையேந்தி மடிப்பிச்சை கேட்கிறாய்? ஒருவேளை, உன் தோழி பட்டு திருந்தி, மீண்டும் உன்னிடம் நட்பு பாராட்ட வரக்கூடும். அப்போது, அவள் உறவை ஏற்பதும், ஏற்காததும் உன்னிஷ்டம்.

அறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே! உன் குடும்ப நலனை புறக்கணித்து, மாரல் போலீஸ் ஆகாதே. தோழியின் குடும்பத்தை கண்காணிப்பதை விட்டு விட்டு, உன் குடும்பத்தில் உள்ளோரின் நடத்தையை கண்காணி. தவிக்கும் மனதை சாந்தபடுத்த, கோவிலுக்கு சென்று தோழியின் குடும்பம் நலமாய் வாழ பிரார்த்தனை செய். நல்லதே நடக்கும்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற சித்தாந்தத்தை நம்பு.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us