
மதிப்பிற்குரிய அக்கா அவர்களுக்கு,
நடுத்தரக் குடும்பத்தில், ஒரு சகோதரர், நான்கு சகோதரிகளுடன் பிறந்து, சந்தோஷமாக வாழ்ந்தேன். பழைய எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளேன். நான் படித்த காலத்தில் என்னை இரு பெண்கள் விரும்பினர். ஆனால், நான், அவர்களை விரும்பவில்லை.
ஆந்திராவில் வேலை பார்த்த என் தங்கையின் கணவர், 'வீட்டில் சும்மா தானே இருக்கிறீங்க; ஆந்திராவுக்கு வாங்க ஏதாவது வேலை கிடைக்கும்...' என்று என்னை அழைத்துச் சென்று, அவர் நண்பர் மூலமாக கல் குவாரியில் சூப்பர்வைசர் வேலை வாங்கி தந்தார். அங்கும், என்னை இரு பெண்கள், விரும்பினர். அதில், ஒரு பெண் நல்ல கறுப்பா, களையாக இருப்பாள்; அவளை எனக்குப் பிடித்திருந்தது. இருவரும் வேலை நேரத்தில் அடிக்கடி பேசுவதை பார்த்த மேஸ்திரி, அப்பெண்ணின் குடும்பத்தைப் பற்றி சொல்லி என்னை பயமுறுத்தி விட்டான். நானும், 'தங்கையின் வீட்டில் இருக்கிறோம்; அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடாது...' என்று, அவளிடமிருந்து விலகி விட்டேன்.
என்னுடன் வேலை பார்த்த, 200 பேருடனும் அன்பாக பழகுவேன். அங்கு நிலவிய கடும் குளிரால் என் உடல் நிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்ப முடிவெடுத்த போது, அனைவரும் வருத்தப்பட்டனர்; சிலர் அழுது விட்டனர். நான் காதலித்த பெண், 'உங்க நினைவாக எனக்கு உங்க சட்டைய கொடுங்க...' என்று கேட்டாள். நானும் கொடுத்து விட்டு, சொந்த ஊருக்கு வந்தேன்.
சிறிய அளவில் சொந்தமாக கம்பெனி நடத்தினார் என் சகோதரர். அங்கு கணக்கு வழக்கு பார்ப்பதற்கும், உதவிக்கும் ஆள் தேவைப்பட்டதால், என்னை வேலைக்கு வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் அண்ணியின் தங்கை, பள்ளி விடுமுறையின் போது, அங்கு வந்திருந்தாள். என் அண்ணனும், அண்ணியும் அவளை எனக்கு மணமுடிப்பதற்காக என் பெற்றோரிடம் கேட்டனர். அவர்களும், 'பத்து ஆண்டுகளாக சண்டையிட்டு பிரிந்து சென்ற மகன் வந்து கேட்கிறானே...' என நினைத்து, சரி என்று கூறினர். என் அண்ணனும், அண்ணியும், 'இந்தப் பெண்ணை திருமணம் முடித்தால், நாங்கள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வோம்...' என்று கூறி, திருமணத்தை முடித்து விட்டனர்.
சில காரணங்களால், எனக்கும், என் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், வேலையை விட்டு நின்று, துபாய்க்கு வேலைக்கு சென்றேன். கால் நூற்றாண்டுகள் பணிபுரிந்தும், எனக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல், சம்பாதித்த அனைத்தையும், என் மனைவிக்கே அனுப்பி வைத்தேன்.
நான் அனுப்பிய பணத்திற்கு இன்று வரை என் மனைவியிடம் கணக்கு கேட்டதில்லை. நான் துபாய்க்கு செல்லும் போது, என் ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் படித்துக் கொண்டிருந்தனர்.
இப்போது என் பிரச்னை என்னவென்றால், எனக்கு நீரிழிவு பிரச்னையுடன், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால், ஊருக்கு அனுப்பி விட்டனர். என் சொந்த ஊரில், இதய நிபுணரிடம் ஒரு மாதம் சிகிச்சை எடுத்த பின், வீட்டிற்கு வந்தேன். அச்சமயத்தில், என் மனைவி என்னை வந்து பார்க்கவே இல்லை.
இருப்பினும், என் மகளை பி.இ., படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்தேன். கடந்த 10 ஆண்டுகளாக எனக்கும், என் மனைவிக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததால், தனித்து விடப்பட்டேன். அதனால், மனம் நொந்து, மீண்டும் துபாய் சென்று, 13 மாதங்கள் பணிபுரிந்து வந்த நிலையில், மீண்டும் என் உடல் நிலை சரியில்லாமல் போனதால், வீட்டிற்கு வந்து விட்டேன்.
நான் சம்பாதித்துக் கொடுத்த பணத்தில், ஐந்து சென்ட் இடம் வாங்கி வீடு கட்டியும், மூன்று இடத்தில் நிலமும் வாங்கியுள்ளாள் என் மனைவி. எல்லாமே அவள் பெயரில் தான் உள்ளது. என் பெயரில் எதுவும் இல்லை.
நான் உடல்நிலை சரியில்லாமல் வந்து ஓராண்டு ஆகிவிட்டது. தினமும், இருவருக்கும் வாக்குவாதம் தான். கடுமையான வார்த்தைகள் பேசி, 'வீட்டை விட்டு வெளியே போ...' என்கிறாள். துபாயில் நான் வேலையில் இருந்த போது, பணம் செலவழித்து வந்து விடுவேன் என்பதற்காக, என் தாயார் இறந்ததை கூட, எனக்கு தெரிவிக்கவில்லை.
என் மகளை, என் அம்மாவுக்கு நிகராக நேசித்தேன்; ஆனால், அவளும் என்னை நிராகரித்து, என் மேல் தான் தவறு இருப்பது போல் பேசுகிறாள். என் பிள்ளைகளிடம் என்னைப் பற்றி தவறான விஷயங்களை சொல்லியே வளர்த்திருக்கிறாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எனக்கென்று சிறு தொகையைக் கூட சேர்க்கவில்லையே என்று நினைக்கும்போது, அவமானமாயிருக்கிறது.
அவர்கள் எண்ணமெல்லாம், வெளிநாடு செல்வோர் எல்லாம், லட்ச லட்சமாக கொண்டு வருகின்றனர்; ஆடம்பரமாக இருக்கின்றனர். நான் தவறான செலவுகள் செய்து, குறைந்த அளவே பணம் அனுப்பியதாக கற்பனை செய்து பேசுகின்றனர். நான் அதிகம் படிக்கவில்லை; அதற்கேற்ற, சம்பளம் தானே கிடைக்கும்!
பூனையிடம் பேசுகிற அன்பான வார்த்தையைக் கூட என்னிடம் பேசுவதில்லை. என்னை கணவனாக பார்க்காவிட்டாலும், ஒரு நோயாளியாகவாவது பார்க்கலாம் அல்லவா? என் மகனுக்கு அவன் அம்மா சொல்வது தான் வேதம்; என்னிடம் ஏதோ பெயருக்கு பேச வேண்டும் என்று பேசுவான்.
சிறு வயதிலிருந்தே, என்னை சுற்றியிருப்போர் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நினைத்து ஜோக்கடிப்பது, கதைகள் சொல்வது என இருப்பேன். மற்றவர்களை சிரிக்க வைத்த எனக்கு, என் வாழ்க்கையே சிரிப்பாய் சிரிக்கிறது.
நிம்மதியாக தூங்கி பல மாதங்களாகி விட்டது; தூக்க மாத்திரை உபயோகித்தும் தூக்கம் வர மறுக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வை கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கடித்தை எழுதுகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரர்.
பின் குறிப்பு: இதைப் படிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், உழைக்கும் பணத்தில், தமக்கென ஒரு தொகையை சேர்த்து வைக்குமாறு வேண்டுகிறேன்.
அன்பு சகோதரருக்கு —
உங்களது சோகக் கதையை படித்து, என் விழியோரம் அருவி கொட்டியது. டீனேஜ் வயதிலேயே, உங்களை நான்கு பெண்கள் விரும்பியிருக்கின்றனர் என்றால், நீங்கள் பெண்களை ஈர்க்கும், அழகனாய் இருந்திருக்கிறீர்கள் என தெரிகிறது.
நீங்கள் மேலே படிப்பை தொடராததும், எந்த வேலையிலும் நிலைக்காது, வெவ்வேறு வேலைகளுக்கு தாவியதும், வெளிநாட்டு வேலைக்கு சென்ற பின், குடும்பத்தில் நிகழும் சாதக, பாதகங்களை அவதானிக்காததும், மாரடைப்பு ஏற்பட்ட பின்பும், மீண்டும் துபாய்க்கு வேலைக்கு போனது என, தப்புக்கு மேல் தப்பு செய்து விட்டு, இப்போது மனைவி மக்களை குற்றம் சொல்லி என்ன பயன்?
ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா... சூரிய அஸ்தமனத்திற்குள் ஓடும் தூரம் தனக்கு என்றதும், வெறியுடன் ஓடி, இதயம் அடைத்து இறந்து போனானாம் ஒருவன். அதைப் போன்று இருக்கிறது உங்கள் நிலை!
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆண்கள், தங்களின் எதிர்காலத்துக்காக ஒரு பங்கை சேமிக்க வேண்டும். அனுப்பும் பணத்தில் நான்கு சொத்துக்கள் வாங்கப்படுகிறது என்றால், இரண்டு சொத்துக்கள் கணவன் பெயரிலும், இரண்டு சொத்துக்கள் மனைவி பெயரிலும் பதிவு செய்யப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு, 15 வயது நிரம்புவதற்குள் வெளிநாட்டு வேலையை விட்டு தாயகம் திரும்பிவிட வேண்டும். சம்பாதித்த பணத்தில் ஏதாவது சுய தொழில் செய்ய வேண்டும்.
மொத்தத்தில், மனைவியின் விருப்பம் அறியாது, வெளிநாட்டு வேலைக்கு செல்வது உசிதமல்ல. நீண்ட காலம் மனைவி, மக்களை பிரிந்து வாழ்ந்ததற்கு, அவர்களிடம் மனம் விட்டு பேசி மன்னிப்பு கேளுங்கள்; அவர்களின் மனம் இரங்காவிட்டால், ஏதாவது முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகுங்கள். ஆன்மிகத்தில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்துங்கள்.
உங்களது வாழ்க்கை, கானல்நீரை தேடி ஓடும் கலைமான்களுக்கு, ஒரு பாடமாய் அமையட்டும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.