தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது, 42; கணவர் வயது, 45. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் பார்த்து வைத்து நடத்திய திருமணம். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவருக்கு, தன் முறைப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம்; ஆனால், ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்பதால், எங்களின் திருமணம் நடந்தது. மேலும், அவருக்கு நல்ல சிகப்பாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஆசை; ஆனால், நான் கறுப்பு. இதனால், நகை, சொத்து என மாப்பிள்ளைக்கு வேண்டிய அளவில் கொடுத்து திருப்தி செய்து, ஆடம்பரமாக செலவு செய்து எங்கள் திருமணத்தை நடத்தினர் என் பெற்றோர்.

திருமணமான பின்தான், அவரது நடவடிக்கை கண்டு அதிர்ந்தேன். கூட்டுக் குடும்பமாக தொழில் செய்து வந்தவர், தொழில் ரீதியாக அழகாகவும், நல்ல நிறத்துடனும் இருக்கும் பெண்களைக் கண்டால், வலிய சென்று பேசி, பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அவரின் பெற்றோர் கண்டிப்பானவர்கள்; அதற்காக, என்னை நல்ல முறையில், பாசமாக வைத்திருப்பது போல, குடும்ப உறுப்பினர்கள் முன், நடிப்பார். எப்படியோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அவருடைய தேவைகளை, ஆசையை எந்த நேரத்திலும், அது பகல் நேரம் என்றால் கூட தீர்த்துக் கொள்வார்.

தற்போது, அவரவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட, நாங்களும் புறநகரில் வீடு வாங்கி, ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் தெரு குறுகலான பகுதி. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, எதிர்வீடு மற்றும் பக்கத்து வீடு என, அழகான பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி, நல்லவர் போல் பேசுவார் என் கணவர்.

அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில், அவசர கதியில் வேலை செய்யும் பெண்கள், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள் மற்றும் வாசல் பெருக்கும் பெண்களின் உடலை பார்த்து ரசிப்பார். இரு ஆண்டுகளுக்கு முன், எதிர்வீட்டிற்கு வந்த பெண், இவர் நடந்து கொள்ளும் விதத்தை தெரிந்து, வேண்டுமென்றே உடலை காண்பித்து, உள்ளாடைகள் வெளியில் தெரியும்படி காட்டுவார். இவரும் வண்டியை சுத்தம் செய்வது போலவும், சாலையில் செல்வோரிடம் பேசியபடியும் அந்தப் பெண்ணை நோட்டமிடுவார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி சண்டை போடுவேன். தற்போது, இருவரும் பேசுவது இல்லை. இதனாலேயே நிம்மதி இல்லாமல், வீட்டில் எல்லாரிடமும் கோபத்துடன் எரிந்து விழுகிறேன்.

இரு பெண் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பையும், எதிர்கால வாழ்வை நினைத்தும், அமைதியாக இருக்கிறேன். அவரை விட்டு பிரிந்து விடலாமா, என்ன செய்வது, எப்படி அவரை திருத்துவது என வழி தெரியாமல், உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன். இப்படிப்பட்ட வக்ர புத்தியுள்ள கணவருடன் எப்படி வாழ்வது? தினமும், ஏதாவது ஒரு வகையில் மனக்கசப்புடன் வாழ்ந்து வருகிறேன். எனக்கு நல்ல தீர்வைத் தாருங்கள்.

இப்படிக்கு,

தங்களின் சகோதரி.


அன்பு சகோதரிக்கு,

பொதுவாகவே, தம் கையிலுள்ள பொருள் அற்பமாகவும், அடுத்தவர் கையிலுள்ள பொருள் அதிசயமாகவும் தெரியும். கட்டின மனைவியை முழுமையாக திருப்திப்படுத்த தெரியாதவர்கள் தான், போற வர்ற பெண்களை எல்லாம் வெறித்து பார்ப்பர். அப்படித்தான்

உன் கணவனும். 'குரைக்கிற நாய் கடிக்காது' என்பது போல், ஜொள் விடும் கணவன்மார்களால், மனைவிமாரின் ஸ்தானம் ஒருநாளும் பறி போகாது.

வெறிக்கும் ஆண்களை, பொதுவாகவே பெண்கள் முறைப்பர், திட்டுவர், காறித் துப்புவர், இழிவாய் கேலி செய்து மகிழ்வர். மிட்டாய் கடைகளை வெறிக்கும் பட்டிக்காட்டானை யாருக்கு பிடிக்கும்?

பொதுவாக, அழகான பெண்களை கண்டால், வலிய போய் உதவி செய்வர் ஆண்கள்.

உன் கணவர் சபலத்துடன் பிற பெண்களை வெறிக்கும் போது, 'படவா... அடுத்த பெண்களை பாக்காதே... பார்த்தே கண்ணை நோண்டிப்புடுவேன்...' என, உன் கணவர் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு கூறி, பற்களை கடி. 'நீ பார்க்கிற மாதிரி நானும் பிற ஆண்களை பார்த்தா தாங்குவியாடா...' என வினவு. 'கல்லூரியில் படிக்கும் இரு மகள்களை வைத்துக் கொண்டு, என்னடா அற்ப காரியம் செய்ற அரை கிழவா...' என இடித்துரை. 'பொம்பளை கிறுக்கு பிடித்து அலைஞ்சா, வாழ்க்கையில எப்படிடா உருப்படுவ...' என, உதட்டை சுழி.

கணவனை விட்டு பிரிவதோ, விவாகரத்து செய்வதோ தீர்வல்ல. கூடவே இருந்து ஊசியாய் தைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், நீ பார்க்கும் போது, பிற பெண்களை உன் கணவன் ரசிப்பதை நிறுத்திக் கொள்வான்; குறைத்துக் கொள்வான் அல்லது நிறுத்திக் கொண்டது போலவாவது நடிப்பான்.

'அறுக்க மாட்டாதவன் இடுப்பில், ஐம்பதெட்டு கதிர் அரிவாள்...' என நையாண்டி செய். கணவனின் மீதான கோபத்தை, இரு மகள்களிடம் காட்டாதே! மகள்களின் ஒளி மயமான எதிர்காலத்திற்கு, ஒரு அர்த்தப் பூர்வமான வாழ்க்கையை வாழ்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us