PUBLISHED ON : ஏப் 23, 2017

மதிப்பிற்குரிய சகோதரிக்கு —
என் வயது, 27; அரசு உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிகிறேன். பணியில் சேர்ந்து, சில மாதங்களே ஆகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளன.
நான் மாநிறம்; சுமாராகத் தான் இருப்பேன். என் கணவர் நல்ல நிறம்; வாட்ட சாட்டமாக இருப்பார். நான் ஒல்லியாக இருப்பதால் திருமணம் ஆனதிலிருந்து, பலர் முன்னிலையில், என்னை மட்டமாகப் பேசுவார். காரணமே இல்லாமல், என்னை சந்தேகப்படுவார்.
அவர், பிளஸ் 2 பெயில்; ஆனால், டிப்ளமோ படித்திருப்பதாக பொய் கூறி, என்னை திருமணம் செய்தார். சொந்த வீடு கூட அவருக்கு இல்லை. உடல் வனப்பைக் காட்டி, விவசாயம் போன்ற எந்த வேலைக்கும் போக மாட்டார்.
இரண்டாவது குழந்தை வயிற்றில் மூன்று மாசமாக இருந்த போது, அவர் எதிர்பார்த்த வரதட்சணையை என் வீட்டார் கொடுக்காததாலும், என் உடல்வாகுவையும் காரணம் காட்டி, என்னை, என் தாய் வீட்டில் விட்டுப் போய், மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
ஆனாலும், பொது இடத்தில் எங்கு பார்த்தாலும், என்னை அடிப்பது, தவறான உறவுக்காக ஆள் தேடி வந்து விட்டேனென்று கூறி அவமானப்படுத்துவது என, அவரது செயல்கள் தொடர்கிறது.
ஒருமுறை, இரண்டாவது குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல் ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழிமறித்து, குழந்தையைப் பிடுங்கி கீழே போட்டு, 'குழந்தையை போட்டுத் தாண்டு... இந்தக் குழந்தை எனக்கு பிறந்திருந்தால், பிழைத்துக் கொள்ளும்; இல்லையேல் சாகும்...' என்று கூறி, என்னை கதறத் கதற துடிக்க வைத்தார்.
பின் ஒருநாள், அவர் வீட்டிலிருந்து பொருட்களை திருடி வந்து விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, வாழ்க்கையே வேண்டாமென நொந்து, நான் தற்கொலைக்கு துணியும் அளவுக்கு நடந்து கொண்டார்.
சொந்தங்கள் எல்லாம், 'ஆம்பளன்னா அப்படித்தான் இருப்பான்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம அவன் கூட போயி வாழு...' என்று வற்புறுத்துகின்றனர். அவரோ, தனியாக என்னைப் பார்க்கும் போது, 'ஜீவனாம்சமாக, மாதம், 60 ஆயிரம் ரூபாய் கொடு; ஒதுங்கிக்கிறேன். இல்ல நீ பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே, பெட்ரோல் ஊற்றி உன்னை கொளுத்துவேன்...' என்று மிரட்டுகிறார். ஆனால், என் உறவினர்களிடமோ, 'நான் திருந்திட்டேன்; அவளை, என்னோடு அனுப்புங்க...' என்று நடிக்கிறார்.
இவர் தான் இப்படி என்றால், என் அம்மாவோ, சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, நான் பள்ளியில், சக ஆசிரியர்களுடன் தவறாக நடக்கிறேன் என்றும், வெளியிடங்களில் அடிக்கடி ரூம் எடுத்து தங்குகிறேன் என்றும் போவோர், வருவோரிடம் கூறி, அவமானப்படுத்துகிறார்.
என் குழந்தைகளை விட்டால், எனக்கு வேறு துணையுமில்லை; நிம்மதியுமில்லை. சம்பளம் வாங்கி, புருஷனால் பட்ட கடனுக்கும், என் கல்யாணத்திற்காக தாய் பட்ட கடனுக்கும், பிரித்து கொடுத்தது போக, ஐந்தாம் தேதிக்கு மேல், பேருந்திற்கு கூட பணம் இல்லாம் அல்லாடுகிறேன்.
தற்போது, விவாகரத்து வாங்கியே ஆக வேண்டுமென்ற தீர்மானத்தோடு இருக்கிறேன். நான் எடுத்துள்ள முடிவு சரியானதா... எனக்கு நல்ல பதிலை கூறுங்களேன்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உடற்பயிற்சி கல்வி ஆசிரியையான நீ, தீவிர உடற்பயிற்சியின் காரணமாக, ஊளை சதை இல்லாமல் கச்சிதமான உடல் வாகை பெற்றிருக்கிறாய். மாநிறமான பெண்கள் பலர், கோவில் சிலை போல் பளபளப்பாய் மிளிர்வர். நீயும், ஆண்களை கவர்ந்திழுக்கும் ஆளுமை பெற்றிருப்பதை அறியாதிருப்பது ஆச்சரியம் தான். அத்துடன், ஆண்களுடன் விகற்பம் இல்லாமல் பழகும் குணமும் உனக்கு இருக்கக்கூடும்.
சொந்த சம்பாத்தியம் இல்லை; படிப்பு குறைவு, மித மிஞ்சிய சந்தேகக் குணம் இவையே உன் கணவனை பேயாட்டம் ஆட வைக்கின்றன.
ஒருவரை பிடித்திருந்தால், அவரை தூக்கி வைத்து ஆடுவதும், பிடிக்காவிட்டால், காலுக்கு கீழ் போட்டு நசுக்குவதும் மனித இயல்பு. கருத்து வேற்றுமை காரணமாக மனைவியை பிரியும் கணவன்மார்கள், அவளை, நடத்தை கெட்டவள் என, வீண் பழி சுமத்துவது உலக வாடிக்கை. தாம்பத்யத்தை திருப்தியாக தரும் கணவன், மனைவியை ஒருநாளும் சந்தேகப்பட மாட்டான். அத்துடன், சிறு சிறு கருத்து வேற்றுமைகளையும் பெரிதுபடுத்த மாட்டான்.
ஒரு பெண், தான் பத்தினி என்ற சான்றிதழை, தன்னை சுற்றியுள்ள ஆண்களிடமிருந்து பெற்று தான், வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
பொதுவாக, பெண்கள் தான், ஆண்களிடம் ஜீவனாம்சம் கேட்டு, நீதிமன்றம் செல்வர். ஆனால், உன் கணவன் ஜீவனாம்சம் கேட்கிறான். இது, அவனின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
அவன், உன் மீது வீண்பழி சுமத்துவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாலும், உன் தாயே, உன் மீது குற்றம் சாட்டுகிறாளே... பெற்ற தாயுடன், நீ நல்லுறவு பேணாமல் இருப்பது இதிலிருந்து தெரிகிறது. தகவல் தொடர்பு விஷயத்தில் நீ படு பலவீனமாய் இருக்கிறாய். அம்மாவுக்கு சமாதான கொடி காட்டு. அம்மாவின் ஆதரவுடன், உன்னை சூழ்ந்து நிற்கும் பிரச்னைகளை தீர்க்கப் பார்.
உன் கணவன் என்றாவது ஒருநாள் முழுமையாக திருந்த வாய்ப்புள்ளதா என, உன் ஆழ்மனதை கேட்டுப் பார். அவனுடைய சந்தேகங்களை போக்கும் வண்ணம், உன் நடத்தையை திருத்தி அமைத்துக் கொள்ள முடியுமா என, யோசி. கணவனை கவுன்சிலிங்க்கு அழைத்துச் சென்று, கருத்து வேற்றுமைகளை பேசி தீர்க்கப் பார். 'குறைந்த சம்பளமானாலும், ஏதாவது ஒரு வேலைக்கு கட்டாயம் போயே ஆக வேண்டும்...' என, கணவனை நிர்பந்தப்படுத்து.
'புற அழகு வானவில் போன்றது; வந்த வேகத்தில் மறைந்துவிடும். கணவன் - மனைவிக்கிடையே உள்ள மெய்யான காதல், பல நூற்றாண்டுகளுக்கு பின்னும் அழியாது. நாமிருவரும் சண்டை இட்டு, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நாசப்படுத்த வேண்டுமா... என் வாழ்க்கையில் உன்னைத் தவிர வேறு எந்த ஆணுக்கும் இடமில்லை...' என தெளிவுபடுத்து.
எந்த முயற்சிக்கும், உன் கணவன் அசைந்து கொடுக்காவிட்டால், இறுதி உபாயமாக, குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு, வழக்கு போடு.
விவாகரத்து கிடைத்த பின், உன் வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும் என, உறுதி கூற முடியாது. 27 என்பது இளமை கொப்பளிக்கும் வயது. மனம், அனிச்சையாய் ஆண் துணை தேடும். இரு குழந்தைகளுடன், உன்னை மறுமணம் செய்ய தகுதி உள்ள ஆண் மகன் கிடைப்பானா என்பது சந்தேகமே!
பேயிடமிருந்து தப்பி, பிசாசிடம் சிக்கிக் கொள்ளாமல், உன்னையும், உன் குழந்தைகளையும் அன்பாய் பார்த்துக் கொள்ளும் ஆண் மகனை பொறுமையாக தேடு.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
