தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிப்பிற்குரிய அம்மா —

என் வயது, 38. அன்பான கணவர்; 17 மற்றும் 14 வயதுகளில் ஒரு மகன், மகள் என, இரு பிள்ளைகள். அழகான, அமைதியான, கவிதை போன்றது, என் குடும்பம். இதுவரை, பிள்ளைகளை, நாங்கள் அடித்ததே இல்லை; அன்பாக கூறியும், சில சமயம் திட்டியும், தவறுகளை திருத்தியிருக்கிறோம்.

பிளஸ் 2 படிக்கும் என் மகன், கூட படிக்கும் பெண் மீது காதல் வயப்பட்டுள்ளான் என, நினைக்கிறேன். பள்ளி முடிந்து வந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும், காலையில் கண் விழித்தவுடனும், அவளிடமிருந்து, எஸ்.எம்.எஸ்., வருகிறது; இவனும் பதில் அனுப்புகிறான்.

அவள், இவனை புகழ்ந்து, கவிதை அனுப்புகிறாள்; இவன், அவளுக்கு அனுப்பியதும் அழித்து விடுவான். படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில், அவன் கவனம் திசைமாறுவது கண்டு, மிகவும் கவலையாக இருக்கிறது.

அவள், மிஸ்டு கால் கொடுப்பாள்; இவன் பேசுவான். சில சமயம், போனை நான் எடுத்து, யார் என்று கேட்டால், பிரெண்டு என்பாள். அப்படி நினைத்து தான், நானும் விட்டு விட்டேன். இப்போது தான் விபரீதம் புரிகிறது.

மொபைல் போனில், மனதை உருக்கும் காதல் பாடல்களை கேட்கிறான், என் மகன். இதைப் பற்றி என் கணவரிடம் கூறிய போது, 'இதை பெரிதுபடுத்தாதே... கல்லூரிக்கு சென்றால் மறந்து விடுவான்...' என்கிறார்.

நான், அவனை திருத்த, கீழ்க்கண்ட வழிகளை யோசித்து வைத்துள்ளேன்.

* அன்பாக எடுத்துக் கூறி, அவளை மறக்க வைப்பது.

* இருவரிடமும் பேசி புரிய வைத்து, அவரவர் படிப்பை பார்க்க சொல்வது.

* அவளுடைய பெற்றோரிடம் பேசுவது.

* பள்ளி நிர்வாகியிடம் கூறி, இருவரையும் கண்டிக்க சொல்வது.

* மொபைல் போன் பயன்படுத்த முடியாத கண்டிப்பான விடுதியில் சேர்த்து விடுவது.

— இது எதுவுமில்லாமல், வேறு வழியிருந்தாலும் கூறுங்கள். உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

உனக்கும், டீன் - ஏஜ் வயது பிள்ளைகளின் பெற்றோருக்கும், கீழ்கண்ட ஆலோசனையை கூற விழைகிறேன்...

பொதுவாக, பள்ளிப் பருவத்தில் வரும் கன்றுக்குட்டி காதல்கள், நீண்ட நாள் நிலைப்பதில்லை. கல்லூரிக்கு போன பின், இருபாலருமே புதிய காதல்களில் பிரவேசிக்கின்றனர். பெற்றோர் பார்த்த வரனை திருமணம் செய்து கொள்ளும் யுவனும், யுவதியும், திருமணத்திற்கு முன், குறைந்தபட்சம் ஐந்து காதல்களில் தோற்கின்றனர் அல்லது துறக்கின்றனர். உன் கணவர் சொல்வது போல, கண்டுகொள்ளாமல் இருந்தாலே, பாம்பு, தன் சட்டையை உரிப்பது போல, தன் காதலை உதறி விடுவான், உன் மகன். அதற்கான வாய்ப்புகளே அதிகம்.

பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடிக்க, கற்பனை உலகில் சஞ்சரிக்கும் வயது இது. அதனால், சினிமா, பாட்டு, இலக்கியம் மற்றும் கூடா நட்பு என, இவற்றின் தாக்கத்தால், காதலை அதீத கற்பனையில் அணுகுவர். இவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து, வேண்டாதவற்றை தணிக்கை செய்தாலே போதும். அவர்கள் கவனம் திசை திரும்பாது. மேலும், தினமும் சிறிது நேரம், பிள்ளைகளிடம், பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டு, அவர்களை, நம்மிடம் மனம் விட்டு பேச தூண்ட வேண்டும்.

இன்றைய, டீன் - ஏஜ் வயதினர், காதல் என்று இல்லாமல், ஜாலிக்காக, ஒருவருக்கு ஒருவர், குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். 'தாங்கள் செய்வது காதல் அல்ல; டைம் பாசிங்...' என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். இதில், நாம் அவசரப்பட்டு, மூக்கை நுழைத்து, இல்லாத பிரச்னையை, பூதாகரமாக்கி விடக்கூடாது.

அத்துடன், பிள்ளைகள் எவ்வளவு தான் அடம் பிடித்தாலும், பள்ளிப்படிப்பு முடியும் வரை, மொபைல் போன் வாங்கித் தரக் கூடாது. கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு போஸ்ட் பெய்டு கனெக் ஷன் உள்ள மொபைல் போன் வாங்கி கொடுக்கலாம். பட்டப்படிப்பு முடித்த பின்னரே, ஸ்மார்ட் போன் வாங்கி தர வேண்டும்.

இப்போது உன் பிரச்னைக்கு வருவோம்...

ஒரு விடுமுறை நாளில், உன் மகனின் தோழியை விருந்துக்கு அழை. அவளின் நடை, உடை பாவனைகளை கவனி. உன் மகனை போல, பல ஆண் நண்பர்களுக்கு, காதல் குறுஞ்செய்தி அனுப்பும் குணமுடையவளா, உயர் கல்வி கற்று, பணிக்கு போன பின், திருமணம் செய்யும் முடிவில் இருக்கிறாளா அல்லது ப்ளஸ் 2 முடித்ததும், பாஸ்ட் புட் திருமணம் செய்யும் வெறியில் இருக்கிறாளா என்பதை துப்பறி. அவளது குடும்ப பின்னணி, சகோதர - சகோதரிகள் பற்றி கேட்டறி. மொத்தத்தில், அவள், உன் மகனை சுருட்டி விழுங்கும் மலைப்பாம்பா அல்லது நூறு வானவில்கள் பூத்த நந்தவனமா என்பதை அறிந்து கொள்.

அறிவுரை கேட்கும் மனப்பக்குவம், அவளுக்கு இருந்தால், 'அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நட்பை அளவாக தொடர்ந்து, அதன்பின்னும், காதல் தேயாமல் இருந்தால், இருவரின் காதலை பரிசீலிப்போம்...' என, வாக்குறுதி கொடு.

உன் மகனின் தோழி நல்லவள் இல்லை என்பது தெளிவாக தெரிந்தால், மொபைல் போனை அனுமதிக்காத, கண்டிப்புடன் கூடிய விடுதியில் உன் மகனை சேர்த்து விடு. மாறாக, அவள் நல்லவள்; உன் மகனுக்கு பொருத்தமானவள் என்று தோன்றினால், 'தினம் இருமுறை மொபைல் போன் மூலம் பேசலாம்; இரு முறை குறுஞ்செய்தி அனுப்பலாம்...' என, கட்டுப்பாடு விதி. 'வெளியில் சுற்றக்கூடாது; படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்; படிப்பை முடித்து, பணிக்கு போனபின் தான் திருமணம்; அதுவரை, கண்ணியம் காக்க வேண்டும்...' என, நிபந்தனை விதி. இவளது காதலை, இவளின் பெற்றோர் ஏற்பரா என்பதையும் அறிந்து கொள்.

பொதுவாக, பெற்றோர், மகனின் காதலை, 'ஈகோ' இல்லாமல் நன்மை, தீமைகளை சீர்தூக்கி பார்த்து, தன் சந்தோஷத்தை விட, மகனின் சந்தோஷமே பெரிது என கருதி, நிதானமாக முடிவெடுத்தால், எல்லாம் சுபமே!

காதல் என்பது, வாழ்க்கையின் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பு. காதலில் ஈடுபடுவோரே, பெரிய வெற்றிகளை ஈட்டுகின்றனர். காதல் தப்பு அல்ல; உடலை, பணத்தை பார்க்காமல், உறவுகளை சிதைக்காமல், இரு மனங்களின் காவிய சங்கமமாய் வந்தால், காதலை இரு கை நீட்டி வரவேற்கலாம்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us