PUBLISHED ON : ஜூலை 23, 2017

அன்புள்ள சகோதரிக்கு —
நான், அரசு துறையில், கவுரவமான பதவியில் இருக்கிறேன்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், என் கணவர். இருவருக்குமே வயது, 50க்கு மேல். எங்களுக்கு, 21 வயதில், கல்லூரியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான்.
என்னுடன் பணிபுரியும் தோழியின் உறவினர் பெண், ஒருவரை நம்பி ஏமாந்து, ஒரு ஆண் குழந்தையுடன் நிர்கதியாக இருந்தாள். தோழியின் பரிந்துரையை அடுத்து, நல்ல பெண் என்று விசாரித்து தெரிந்த பின், அப்பெண்ணை என் வீட்டில் வேலைக்கு சேர்த்தேன். என் வீட்டில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாள்.
அவள் பையனை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்ததிலிருந்து, அவளுக்கு குடும்ப அட்டை வாங்கி கொடுத்து, வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்தது வரை, என் மூலமாகவே செய்து கொடுத்தார், என் கணவர்.
இந்நிலையில், அவர்களுக்குள் எப்படியோ கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, என் கணவர், அவருடைய பெற்றோர் வீட்டிற்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களது கள்ளத்தொடர்பு எனக்கு தெரிந்து, சண்டை போட்டு கண்டித்தேன்; மன்னித்து விடும்படி கூறினார். அப்பெண், அவளுக்கு தெரிந்த நபரை வைத்து, போன் மூலமாக என்னை மிரட்டினாள்; அதையும் சரி கட்டினேன்.
இவளோ, 'ஹவுஸ் ஓனர் கதவை தட்டுகிறான்; மருத்துவரிடம் போனால், மருத்துவர் படுக்கையறைக்கு கூப்பிடுகிறான்...' என்றும், தன் மகனுக்காக மட்டுமே, தான் வாழ்வதாக கூறி அழுவாள்; நானும் நம்பி விட்டேன்.
நான் வீட்டிலிருக்கும் போது மட்டும் தான், வேலைக்கு வருவாள். ஆனால், நான், அலுவலகம் சென்ற பின், அவளை வீட்டுக்கு வரவழைத்து, சல்லாபித்திருக்கிறார், என் கணவர். இருவரும் நல்லவர்கள் போல் நடித்து, என்னை ஏமாற்றியுள்ளனர்.
என்னிடம், இவள், 'நான், வீட்டு வேலை செய்யும் போது, சார் குறுக்கே, நெடுக்க வருகிறார்; அவரிடம் எப்படி சொல்றதுன்னு தெரியல...' என்று கூறுவாள். நானும் அதை நம்பி, வீட்டில் வயசுப் பையன் இருக்கும் போது, என் கணவனால், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விடாது என்று கருதி, அவளை காபந்து செய்து வந்தேன். ஆனால், அவளோ, என் கணவனுடன், காரிலும், பைக்கிலும் வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளாள்.
இந்த விஷயமெல்லாம் என் மகனுக்கு தெரிந்துவிட்டதால், மனம் வெறுத்து, 'மூவரும் செத்து விடுவோம் அல்லது உன் புருஷனையும், அவளையும் கொலை செய்துட்டு, ஜெயிலுக்கு போறேன்...' என்கிறான்.
அவளுக்கு தின்பண்டம் முதற் கொண்டு மளிகை சாமான்கள் வரை, என் காசில் வாங்கி கொடுத்திருக்கிறான் என் கணவன். அவள் மகனை, டியூஷனில் சேர்த்து விட்டுள்ளான்; அப்பையன் டியூஷனுக்கு சென்றதும், இருவரும் லூட்டி அடித்துள்ளனர்.
அவளுக்கு மொபைல்போன் வாங்கி கொடுத்து, இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல, எல்லா விஷயமும், என் மகன் மூலமாக, இப்போது எனக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், அவளை ஏமாற்றி சென்ற அவளது கணவன் திரும்பி வந்து விட்டான்; ஆனாலும், இவர்கள் தொடர்பு தொடர்கிறது. என் கணவன், பொம்பள பொறுக்கி என்று தெரிந்து விட்டது. இவன் திருந்துவான் என்ற நம்பிக்கையும் போய் விட்டது.
இந்த மன உளைச்சலில், அலுவலகத்தில், என்னால், எந்த பணியையும் செய்ய முடியவில்லை; அடுப்பை ஆன் செய்து, அப்படியே நிற்கிறேன். என் மன குழப்பத்தினால், நான் ஏதேனும் செய்து கொள்வேனோ என்று பயமாக இருக்கிறது.
என் கணவனை பார்க்கும் போதெல்லாம், கொன்று விட வேண்டும் போல் ஆத்திரமாக வருகிறது. ஆனால், உறவினர்கள், என்னை எந்த முடிவையும் எடுக்க விடாது, என் கையை கட்டிப் போடுகின்றனர்.
இதுவரை, வீடு, அலுவலகம் என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து விட்டேன். நெருங்கிய தோழிகளும் இல்லை. மொத்தத்தில், அழகான தங்க கூண்டுக்குள் என்னை சிறை வைத்திருக்கிறான், என் கணவன். அவனை பொறுத்தவரை நான் பணம் கொடுக்கும்
ஏ.டி.எம்., மிஷின்!
நான், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுங்கள்!
— இப்படிக்கு,
தங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
ஏற்கனவே, உன் கணவன் கள்ள உறவு வைத்திருந்ததை அறிந்து, அந்த உறவை கத்திரித்திருக்கிறாய். அப்படியிருக்கையில், கணவனை பிரிந்த இளம் பெண்ணை, வேலைக்கு அமர்த்தலாமா? உன் கணவனின் தூண்டிலில், பணிப்பெண் சிக்கினாளோ அல்லது அவள் வலையில் உன் கணவன் சிக்கினானோ... ஒட்டு மொத்த சேதாரம் உனக்குத் தான்.
உன் பிரச்னைக்கு தற்கொலையோ, கணவனை கொலை செய்வதோ தீர்வல்ல.
முதலில், அவளை வேலையை
விட்டு நிறுத்து; பின், உன் கணவரிடம் இப்படிக் கூறு...
'கள்ள உறவுகளை கத்தரித்து, திருந்திய மனிதாக மாறு. உன் கட்டுபாட்டில் இருக்கும் ரொக்க பணத்தையும், வங்கி கணக்கையும் என்னிடம் ஒப்படை. பணி முடிந்த ஒரு மணி நேரத்துக்குள், வீட்டிற்கு திரும்ப வேண்டும். மொபைல் போன் மூலம், எந்த பெண்ணிடமும் ரகசியம் பேச கூடாது. வாரம் ஒருமுறை உன் மொபைல் போனை நம் மகன் பரிசோதிப்பான்.
'எனக்கு தெரியாமல், நீ அலுவலகத்திற்கு விடுமுறை போடவோ, குடிக்கவோ கூடாது. இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு, சம்மதம் என்றால் எங்களுடன் இரு... இல்லையென்றால், உன்னிடம் விவாகரத்து பெற்று, என் மகனுடன் தனியே வாழ்ந்து கொள்கிறேன்...' என்று கூறு.
நீ வீறு கொண்டு பத்ரகாளியாக விஸ்வரூபம் எடுத்தால், மண்புழுவாய் துவள்வான் உன் கணவன். பொருளாதார சுதந்திரம் உனக்கு இருக்கிறது; கணவனின், காதல் லீலைகளை கண்டு மனம் புழுங்காமல், நீயும், உன் மகனும் நிம்மதியாக வாழலாம். மகனை நன்கு படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பி, திருமணமும் செய்து வை; உன் மகனின் மூலம், உன் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலரலாம்.
எந்த முடிவை எடுத்தாலும் தீர்க்கமாக எடு; மருந்தின் மூலம் குணமாகாத கட்டியை, அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதே, சாலச் சிறந்தது.
—என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
