
அன்புள்ள சகோதரிக்கு -
நான், 46 வயது பெண்; மத்திய அரசு ஊழியை. திருமணமாகி, ஒரு மகன் உண்டு; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கணவர். என் உடன் பிறந்தது, ஒரே அண்ணன். வெளியூரில் சாதாரண வேலையில் இருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன். அப்போது, என் மகன், கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தான். எனக்கு கேன்சர் என்று தெரிந்ததுமே, என்னை விட்டு விலக ஆரம்பித்ததுடன், வெளியூருக்கு பணி மாறுதல் வாங்கி சென்று விட்டார், என் கணவர். அதன்பின், என்னுடனோ, என் மகனுடனோ போனில் கூட பேசியதில்லை. என் மருத்துவ செலவுக்கோ, வீட்டு செலவுக்கோ பத்து ரூபாய் கூட கொடுத்ததில்லை. இன்று வரை, என் சேமிப்பில் இருந்தும், மருத்துவ பாலிசி மூலமாகவும் செலவுகளை சமாளித்து வருகிறேன்.
பெரும்பாலான நேரங்களில், சிகிச்சைக்காக தனியாகவே மருத்துவமனைக்கு சென்று வருவேன்; சில நேரங்களில் என் அலுவலக தோழிகள் உதவி செய்வர். அத்துடன், என் அண்ணனும், அண்ணியும் எனக்கு ஆறுதலாக இருப்பர்.
தற்சமயம், நோயிலிருந்து மீண்டு விட்டேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார், மருத்துவர். இனி, என் பொருளாதார நிலையை, கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த வேண்டும். அதற்கேற்ப, இவ்வளவு நாள் தடைப்பட்டிருந்த பதவி உயர்வு, தற்போது கிடைப்பது போல் உள்ளது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக தொடர்பே இல்லாத என் கணவர், இப்போது வீட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார். அவருக்கு வேலை போய் விட்டது என்றும், குடிபழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், ஒருநாள், அவரது நண்பர் போன் செய்து கூறினார்.
திருமணமானதிலிருந்து எந்த சுகத்தையும் நான் அனுபவித்ததில்லை. ஆரம்பத்திலிருந்து எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்; அன்பாக, ஆதரவாக இருந்ததே இல்லை. எனக்கு கேன்சர் வந்து அவதிப்பட்ட போது, என்னை அனாதையாக விட்டு சென்றவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவரது அம்மாவும், அக்காவும் கிராமத்தில் உள்ளனர். அவர்களிடம் சென்று பணம் கேட்டு, தொந்தரவு செய்ததால், அவர்கள் இவரை வீட்டில் சேர்ப்பது இல்லை.
இப்போது நான் என்ன செய்வது... அவரை ஏற்றுக் கொள்வதா... 'குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரால் என்றுமே தொல்லை தான்; அவர் வேண்டவே வேண்டாம்...' என்கிறான், என் மகன்.
நோயுற்ற காலத்தில், வீட்டு வேலைகளில் உதவி செய்ய, கிராமத்திலிருந்து உறவுக்கார அம்மாவை அழைத்து வந்திருந்த என் உறவுக்கார அம்மாவும், தற்போது, வயதான காரணத்தால் கிராமத்திற்கு சென்று விட்டார். வீடு, அலுவலகம் இரண்டிலும் வயதுக்கு மீறி உழைக்க வேண்டியிருப்பதால், உடல் பலவீனமடைந்து, சோர்ந்து விடுகிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் மகன் நிலை என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது.
நான் என்ன செய்ய வேண்டும்... நல்ல பதிலை தெரிவியுங்கள் சகோதரி!
- இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு -
மனிதர்களாய் பிறந்த நம் அனைவருக்குமே துக்கமான நேரத்திலும், சோதனையான காலத்திலும் ஆறுதலாய் சாய, ஒரு தோள் தேவை. அது, உன் கணவன் மூலம், உனக்கு கிடைக்கா விட்டாலும், மகன், தோழிகள், அண்ணன், அண்ணி மூலம் கிடைத்துள்ளது. அந்த வரையில் நீ கொடுத்து வைத்தவள்.
பெரும்பாலான கணவர்கள், மனைவி நோயால் பீடிக்கப்பட்டிருந்தால், மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதிலிருந்து, வீட்டு வேலைகளை செய்வது வரை, அத்தனையும் பொறுப்பாக செய்து, மனைவியையும் அன்பாய், அனுசரணையாய் கவனித்துக் கொள்வர். ஒரு கணவனின் உண்மையான காதல், மனைவியின் நோவில் தான் வெளிப்படும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப் பட்டு, உடலும், மனமும் துவண்டிருந்த காலத்தில், சுயநலமாய் செயல்பட்ட உன் கணவன், அந்த உறவுக்கே களங்கமானவன்; திருமணம், தாம்பத்யம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவன். காதல் ஒரு பண்டமாற்று முறை; ஒரு கைப்பிடி காதலை கொடுத்தால் தான், அது, மலையளவு திரும்ப கிடைக்கும் எனும், வாழ்க்கை சூத்திரம் அறியாத மூடன்.
வறண்ட குளத்தை விட்டு நீங்கி, நீர் நிலையை தேடிச் செல்லும் பறவையைப் போன்று, நோயால் பீடிக்கப்பட்டிருந்த உன்னை நிராதரவாக விட்டுச் சென்றவன், வேலை இழந்து, குடிநோயாளியாக உன்னிடம் புகலிடம் தேடி வந்துள்ளான். அவனிடம் சிறிதும் கருணை காட்டாதே; விரட்டு.
உன் மகன், தன் தந்தை மீது கருணை காட்டினால், உன் கணவனை, உன்னுடன் வைத்திருப்பது பற்றி நீ சிறிதளவாவது பரிசீலிக்கலாம். அதனால், விவாகரத்து பெறாமலேயே, பிரிந்து வாழ். உன்னை மிகவும் தொந்தரவு செய்தால், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முறைப்படி விவாகரத்து பெறு.
மகனை நன்கு படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பி, வரன் பார்த்து திருமணம் செய்து வை. புற்றுநோய் மருத்துவமனையில் கிடைத்த அறிவுரைகளை, சக பெண்களுக்கு வழங்கு. அறியாமையில் சிலர் புற்றுநோயை, தொற்று நோயாக கருதுகின்றனர். இது தவறு. தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவனுக்கு, மனைவியிடம் இருக்கும் புற்றுநோய் தொற்றாது. ஆரம்பத்தில் இதைக் கண்டுபிடித்தால், முழுவதும் குணப்படுத்தி விடலாம். முற்றிய நிலையில் இருந்தாலும், கட்டுக்குள் வைத்திருந்து, வாழலாம். புற்றுநோய் குணமானதை போல தோன்றினாலும், மருந்து உட்கொள்வதை நிறுத்தக் கூடாது என்பது போன்ற, புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வை, சமுதாயத்துக்கு ஏற்படுத்து.
உரிய இடைவெளியில், மருத்துவரை சந்தித்து, மீண்டும் புற்றுநோய் வராமல் இருக்க, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெறு.
- என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.