
அன்பு சகோதரிக்கு -
வணக்கம்; நான், 48 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மற்றும் மகள் முறையே, 8 மற்றும் 5 வயதாக இருந்த போது, பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த என் மனைவி, அவளுடன் பணிபுரிந்த ஒருவருடன் சென்று விட்டாள்.
அப்போதிலிருந்து, என் குழந்தைகளை நானே வளர்த்து வருகிறேன். என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் சகோதரியும், அவள் கணவரும் எங்களுக்கு உதவியாக இருக்கின்றனர். தற்போது, மகன் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டும், மகள், பிளஸ் 2வும் படிக்கின்றனர்.
சமீபகாலமாக, என் மகன் ஏதோ மனச் சஞ்சலத்துடன் இருப்பது போல் தோன்ற, என்னவென்று விசாரித்தேன். என் மாஜி மனைவி, அவனை ஏதோ ஒரு ஷாப்பிங் மாலில் சந்தித்து, அவனது படிப்பு, விவரமெல்லாம் கேட்டறிந்து, தன்னுடன் வரும்படி அழைத்துள்ளாள். என் மகன் மறுத்தும், தொடர்ந்து, அடிக்கடி போன் செய்து வற்புறுத்துவதாக கூறினான். எனக்கு ஆத்திரமாக வந்தது; அவனை சமாதானப்படுத்தி, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினேன்.
என் சகோதரிக்கும் போன் செய்து, என் மகனை அழைத்து செல்ல போவதாக கூறியுள்ளாள். என் மகளுக்கும் தொந்தரவு கொடுக்கப் போகிறாளோ என்று பயமாக இருக்கிறது.
என் உத்தியோகத்தை வேறு ஊருக்கு மாற்றுவதோ, வீடு மாறி செல்வதோ இயலாது.
அவள் என்னை விட்டு பிரிந்து போனதிலிருந்து, அவள் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா என்று கூட தெரியாமல் தான் இருந்தேன். அவள், வேறொருவனுடன் சென்ற போது ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீண்டு வரவே பல ஆண்டுகள் பிடித்தது.
சட்டப்பூர்வமான விவாகரத்தை அவளும் கேட்கவில்லை; நானும் அதுபற்றி யோசிக்கவில்லை. மீண்டும் அவளுடன் சேர்ந்து வாழ்வதோ, குழந்தைகளை அவளிடம் ஒப்படைப்பதோ என்னால் முடியாது.
என் சகோதரி மற்றும் மாமாவின் பராமரிப்பில், நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்; இப்போது, எதற்காக எங்கள் கூட்டை கலைக்கிறாள் என்று தெரியவில்லை.
நான் என்ன செய்ய வேண்டும்; என் பிரச்னை தீர வழி சொல்லுங்கள் சகோதரி.
— இப்படிக்கு,
அன்பு சகோதரன்.
அன்பு சகோதரருக்கு -
ஆடம்பர மோகம், கவர்ச்சியான பேச்சு, தாம்பத்யத்தில் திருப்தியின்மை, கொடுங்கோல் கணவனின் வன்முறை மற்றும் ஏச்சுபேச்சு, நீண்ட நாள் தனிமை, தவறான தோழிகளின் வழிகாட்டல் மற்றும் கிளைவிட்டு கிளை தாவும் குரங்கு மனோபாவம் இவைகளே, சில திருமணமான பெண்களை தடம் புரள வைக்கின்றன. ஆனால், அப்படி போன இடத்திலும், அவர்களது வாழ்க்கை திருப்தியாய் அமைவதில்லை.
கணவனை விட்டு பிரியும் போது, குழந்தைகளைப் பற்றி நினைக்காமல், சுயநலமாக முடிவெடுக்கும் பெண்கள், தான் ஒட்டிக் கொண்ட ஆணின் உண்மையான கோரமுகத்தை பார்த்ததும், தன் கணவன் மற்றும் குழந்தைகளிடம் திரும்ப துடிக்கின்றனர்; அது, பெரும்பாலும் சாத்தியமாவதில்லை.
மனைவி ஓடி போனதிலிருந்து மறுமணம் செய்யாமல், பிள்ளைகளை வளர்த்து வருகிறாய் என்பது பாராட்டுதலுக்குரிய விஷயம்.
மனைவி ஓடிப்போவது என்பது, ஒரு ஆணுக்கு பெரும் அவமானத்தை தரும் சம்பவம். ஒரு கணவனுக்கு இதில் எவ்வளவு அவமானம் இருக்கிறதோ, அதற்கு சிறிதும் குறியாத மனவேதனை, பிள்ளைகளுக்கும் இருக்கும். 50 ஆண்டுகள் ஆனாலும் சமுதாயம் அவர்களை, 'ஓடிப்போனவளின் பிள்ளைகள்...'என்றே கேலி செய்யும்.
நாற்று நடும் நேரத்தில் ஓடி போனவள், அறுவடை செய்ய ஆவலாதிக்கிறாள், உன் மனைவி. பிள்ளைகள் உன் பக்கம் இருக்கும் போது எதற்கு கவலையும், பயமும் கொள்கிறாய்... நீ பயப்படுவது தெரிந்தால், உன் மீது ஏறி மிதிப்பாள்.
உன்னை விட்டு சென்ற போதே, அவளை, நீ சட்டப்படி விவாகரத்து செய்திருக்க வேண்டும். பரவாயில்லை... இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்து, விவாகரத்து வாங்கு.
தற்காலிகமாய் அவளது தொந்தரவிலிருந்து மீள, அவள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடு. பிள்ளைகளின் மொபைல் எண்ணை மாற்று; அவர்கள் படிக்கும், பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, உன் மனைவி வந்தால், பிள்ளைகளை சந்திக்க அனுமதிக்காதீர்கள் என அறிவுறுத்து.
அவள் உன்னிடமே வந்து, 'என்னை மன்னித்து விடுங்கள்; நான் திருந்தி விட்டேன். உங்களுக்கு மனைவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; என் குழந்தைகளுக்கு தாயாக இருக்கவாவது அனுமதியுங்கள்...' என்று, உன் காலில் விழுந்து கதறினாலும், மன்னிக்காதே!
அவளது மன்னிப்பு நாடகத்தில் நீ ஏமாந்தால், அடுத்து, உன்னை இறைவனாலும் காப்பாற்ற முடியாது. உண்மையிலேயே அவள் திருந்தி இருந்தாலும், பிள்ளைகளை பிரிந்து வாழ்வதே, அவளது பாவ செயலுக்கான தண்டனை.
குருவிக்கூடு போன்றது குடும்பம்; அதை யார் கலைத்தாலும், அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

