
அன்பு அம்மாவுக்கு -—
நான், 25 வயது பெண்; எனக்கு இரண்டு அக்கா, ஒரு தம்பி. இரு அக்காவும் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர்கள். ஒரு அக்கா, பி.எட்., முடித்து, ஆசிரியையாக பணிபுரிகிறாள்; இன்னொரு அக்கா இல்லத்தரசி. இருவரையும், ஒரே குடும்பத்தில், அண்ணன், தம்பிக்கு, மணமுடித்து வைத்தனர், என் பெற்றோர். மாமனார், மாமியாருடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தாலும், இருவரும் போட்டி, பொறாமை என, நாளுக்கொரு பிரச்னை, சண்டை என, காலம் தள்ளி வருகின்றனர்.
இப்போது, எனக்கு வரன் பார்க்கின்றனர். நல்ல வரன் ஒன்று வந்தது. அவர்களுக்கு என்னை பிடித்து விட்டது. ஆனால், பெண் எடுத்து, பெண் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே, இந்த திருமணம் நடக்கும் என்கின்றனர்.
என் தம்பியின் வயது, 24; இப்போது தான், எம்.காம்., முடித்து, வங்கி தேர்வுகள் எழுதி வருகிறான். புகழ் பெற்ற கார் நிறுவனத்தில், தற்காலிக பணியில் உள்ளான். அத்துடன், எம்.பி.ஏ., படிக்க விரும்புகிறான்.
இந்த ஏற்பாட்டில் எனக்கும், தம்பிக்கும் உடன்பாடு இல்லை. ஆனால், என் பெற்றோரோ, 'நல்ல குடும்பம்; இப்போது விட்டால், பின், இதுபோல் கிடைக்காது. திருமணம் செய்து, தம்பி மேற்கொண்டு படிக்கட்டும்...' என்கின்றனர்.
ஏற்கனவே, ஒரே குடும்பத்தில் என் அக்காக்கள் வாழ்க்கைப்பட்டு, சண்டையும், சச்சரவுமாக இருக்க, இது தேவை தானா என்று கேட்டால், நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர். இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. நல்ல பதில் கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதற்கேற்ப, உன் சகோதரிகளுக்கு ஓர் அழகிய கூட்டுக் குடும்பம் கிடைத்துள்ளது. இதனால், சகிப்புத் தன்மை, பொறுமை, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், ஒருவர் பணியை மற்றொருவர் செய்தல் போன்ற நற்குணங்கள் வளரும். ஒருவருக்கொருவர் நெருக்கமாய் இருந்து பாசத்தை பொழியலாம்; பரஸ்பரம், பாதுகாப்பு அரணாய் நிற்கலாம். ஆனால், உன் சகோதரிகளோ, போட்டி, பொறாமையில், மலை ஆடுகளாக முட்டி மோதுவதாக குறிப்பிட்டுள்ளாய்.
இது, உன் சகோதரிகளின் குண அமைப்பு; அவர்களை வேறு வேறு இடங்களில் கட்டிக் கொடுத்திருந்தாலும், இப்படித் தான் புகுந்த வீட்டில், ஏதாவது பிரச்னையை கிளப்பிக் கொண்டு இருப்பர். ஆகையால், பிரச்னை, இரட்டை திருமணங்களில் அல்ல; உன் சகோதரிகளிடம் தான் உள்ளது.
அதேநேரம், பெண் கொடுத்து பெண் எடுப்பதில், சில பிரச்னைகள் ஏற்படலாம். 'பனை மரத்தில் தேள் கொட்டினால், தென்னை மரத்தில் நெறிகட்டும்' என்கிற மாதிரி, ஒரு இடத்தில் விழும் அடி, இன்னொரு இடத்தில் இரட்டிப்பாய் எதிரொலிக்கும். இது, அக்குடும்பத்து மனிதர்கள் குணாதிசயங்களை பொறுத்தது. அதனால், மாப்பிள்ளை மற்றும் பெண்ணை பற்றியும், அவர்களது குடும்பத்தை பற்றியும் தீர விசாரித்துக் கொள். என்ன காரணத்துக்காக, ஒரே குடும்பத்தில் பெண் எடுத்து, பெண் கொடுக்க விரும்புகின்றனர் என தெரிந்து கொள்.
எவ்வித நெருக்கடிக்கும் உள்ளாகாமல், இந்த திருமணம் நன்மை பயக்குமா என்பதை ஆலோசி. உனக்கோ, உன் தம்பிக்கோ இந்த திருமணம் பயனளிக்காது என்று தெரிந்தால், நீங்கள் இருவரும் உங்கள் பெற்றோரிடம் ஆணித்தரமாய் மறுத்து விடுங்கள்.
அத்துடன், இறைவனின் மீது பாரத்தை போட்டு, எதிர்பார்ப்புகளை குறைத்தால், நல்ல சம்பந்தம் கிடைக்கும்; வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.

