sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

நான், 27 வயது ஆண்; என் உடன் பிறந்தது, ஒரே தம்பி; கல்லுாரியில், பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறான். நான், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் அப்பா வைத்திருந்த மொபைல்போன் விற்கும் கடையை தற்போது, பார்த்து வருகிறேன்.

என் அம்மாவிற்கு, பெரிய பங்களா கட்ட வேண்டும்; கார் வாங்க வேண்டும்; ஊர் ஊராக சுற்ற வேண்டும் என்று நிறைய ஆசை. ஆனால், என் அப்பாவோ, 'இருக்க சின்னதாக வீடும், தேவைக்கு பணம் உள்ளது; அதிகமாக ஆசைப்படக்கூடாது...' என்பார். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மாட்டார், அம்மா. எங்கள் கடைக்கு பக்கத்திலேயே ஒரு கட்டடம் விலைக்கு வர, அதை வாங்கி, 'கம்ப்யூட்டர்' கடைக்காரருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, என் தாய் மாமா, தனக்கு தெரிந்த ஒரு பெண் இருப்பதாக கூற, பெண் பார்க்க போனோம். பெண்ணை எனக்கு பிடித்திருந்ததால், திருமணத்துக்கு சம்மதித்தேன். பெண் மற்றும் அவரது குடும்பத்தை பற்றி விசாரிக்கலாம் என்று அப்பா கூறியபோது, 'அதெல்லாம் என் தம்பி பாத்துப்பான்; அவன் ஒரு வேலை செய்தால், சரியாகத் தான் செய்வான்; நீங்கள் பேசாமல் இருங்கள்...' என்று, அப்பாவின் வாயை அடைத்து விட்டார், அம்மா.

என்னாலும் ஏதும் செய்ய இயலவில்லை. திருமணம் நடந்தது; முதல் இரவு அன்றே, அவள், 'உன்னை பிடிக்கவில்லை; பள்ளியில் படிக்கும்போதிலிருந்து ஒருவனை விரும்புகிறேன். என் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக, இத்திருமணத்திற்கு சம்மதித்தேன்; உன்னுடன் வாழ விருப்பமில்லை...' என்று கூறி விட்டாள்.

உடனே, முதல் இரவு அறையை விட்டு வெளியேறி, என் மாமாவிடம் விஷயத்தை கூறினேன். 'அதெல்லாம் பிறகு பாத்துக்கலாம்; நீ முதல்ல உள்ளே போ...' என்று, அந்த அறைக்குள் தள்ள பார்த்தார். அப்போது தான், எனக்கு விஷயம் விளங்கியது. இதெல்லாம் அவருக்கு முன்பே தெரிந்திருக்கிறது; அதை மறைத்து, யாருடைய வற்புறுத்தலிலோ, அவளை என் தலையில் கட்டி வைத்துள்ளார் என்பது!

மறுநாளே, அவளை அழைத்துச் சென்று, அவளது பெற்றோரிடம் நடந்ததை கூறி, அவளை, அந்த பையனுக்கே திருமணம் செய்து வைக்க சொல்லி, வந்து விட்டேன். மூன்றே மாதத்தில் விவாகரத்தும் ஆகிவிட்டது.

என் தந்தையால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. 'ஹார்ட் அட்டாக்கில்' இறந்து விட்டார். வாழ்க்கையே வெறுத்து விட்டது. எனினும், தம்பியின் படிப்பு கெட்டு விடக்கூடாது, வியாபாரத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருந்ததால், என் மனதை தேற்றிக் கொண்டேன்.

இவ்வளவும் நடந்த பின்பும், எந்த வருத்தமும் இல்லாமல், 'போனது போகட்டும்... வேறு பெண்ணை கல்யாணம் செய்து கொள்; நிறைய பணம் சம்பாதித்து, கார், பங்களா என்று இருந்தால், பெண்கள் வரிசையில் நிற்பர்...' என்கிறார், என் அம்மா.

தந்தையின் இறப்பு மற்றும் என் திருமண வாழ்க்கையின் தோல்வியை என்னால் மறக்க முடியவில்லை. என் அம்மாவின் பணத்தாசை என் நிம்மதியை குலைக்கிறது.

இப்போதைக்கு, என் ஒரே ஆதரவு என் தம்பி மட்டுமே! அவன் நன்கு படித்து, ஒரு வேலைக்கு செல்வது வரை, பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.

இப்போது மீண்டும், எனக்காக பெண் பார்த்து வருகிறார், என் மாமா. அவர் தலையிட வேண்டாம் என்று கூறினாலும், அவருக்கு, 'சப்போர்ட்' செய்கிறார், என் தாய்.

இந்த, 'டார்ச்சரிலிருந்து' மீள, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —

குறிக்கோளும், பேராசையும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள். 'சுயேச்சையாக நின்று, அடுத்த, 10 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் ஆவேன்...' எனக் கூறுவது பேராசை. 'ஒரு குறிப்பிட்ட துறையின் அடிமட்ட ஊழியராக இருக்கும் நான், படித்து, பட்டங்கள் பெற்று, துறை தேர்வுகள் எழுதி, ஓய்வு பெறுவதற்குள் துறையின் உயரிய பதவியில் அமர்வேன்...' என, சூளுரைப்பது குறிக்கோள்.

கையிலிருந்த பணத்தை போட்டு, உன் தாய் ஒரு கட்டடத்தை விலைக்கு வாங்கி, வாடகைக்கு விட்டுள்ளது உங்கள் குடும்பத்திற்கு ஒரு மேல் வருமானம் தானே... உன் தாயின் பேராசை, உன்னை எவ்விதத்தில் பாதித்தது?

வரதட்சணை, கார், பங்களாவிற்காக பொருத்தமில்லாத பெண்ணை பார்த்து, உனக்கு மணம் முடித்து வைத்தாரா, அப்படி செய்ததாக உன் கடிதத்தில், நீ குறிப்பிடவில்லை.

ஒரு குறிப்பிட்ட குடும்ப அங்கத்தினர், மற்ற உறவுகளை அடிமைப்படுத்துவது, மொட்டை அதிகாரம் செலுத்துவது, தன் விருப்பு, வெறுப்புக்கு அனைவரையும் ஆடச்சொல்வது, காலம் காலமாக நம் சமுதாயத்தில் நடக்கும் விஷயமே!

தான் எது செய்தாலும், சரியாகதான் இருக்கும் என்ற குருட்டு தைரியத்தில் உனக்கு பெண் பார்த்திருக்கிறார், உன் மாமா. முதலிரவு அறையில் நடந்த விஷயத்தை அவரிடம் கூறியபோது, அவர், 'பிறகு பாத்துக் கொள்ளலாம்...' என்று கூறியது கூட, 'நடந்தது நடந்து விட்டது; இவன் ஓரிரவு மனைவியுடன் தாம்பத்யம் செய்து விட்டால், நம் தலைவிதி இவனுடன் தான் என, மனதை தேற்றி, தன் அக்கா மகனுடன் அவள் தொடர்ந்து குடும்பம் நடத்துவாள்...' என, தப்புக் கணக்கு போட்டுள்ளார்.

இவரைப் போன்ற நபர்கள், ஒரு காரியம் செய்து, அது தெய்வாதீனமாய் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி விட்டால், எல்லாம் தன்னால் தான் என, 'பாலே' நடனம் ஆடுவர். அவர்கள் செய்த காரியம் தீய விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், தான் செய்த காரியத்துக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சாதிப்பர்.

அதனால், உன் மாமாவையோ, அம்மாவையோ வெறுக்காமல், 'அம்மா... உன்னுடைய பணத்தாசையால் என் வாழ்க்கையில் மீண்டும் விளையாடி விடாதே... உன் தம்பிக்கு கோவில் கட்டி கும்பிடு; எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், அவரை எனக்கு பெண் பார்க்கச் சொல்லாதே...' என்று கூறு.

மாமாவிடம், 'மாமா... உங்க மீது அன்பும், மரியாதையும் நிறைய வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு பெண் பார்க்க வேண்டாம்; தயவுசெய்து, என் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்...' என, வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் சொல்.

நுாற்றுக்கணக்கான மேட்ரிமோனியல் இணையதளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து, பணம் கட்டி, உன், 'பயோடேட்டாவை' பதிவிடு. தவிர, நட்பு மற்றும் உறவு வட்டத்தில் கூறி, நல்ல பெண் தேடு. நம்பிக்கைக்குரிய தரகர் யாராவது இருந்தால், அவரிடமும் கூறி பெண் பார்க்கச் சொல்.

நீ மறுமணம் செய்து, நிறைவான வாழ்க்கை வாழ்ந்தால், உன் தந்தையின் ஆன்மா சாந்தியடையும். உன் மறுமணம் வெற்றிபெற, வாழ்த்துகிறேன்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us