தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு -—

என் வயது, 64; அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், என் கணவர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில், 'செட்டில்' ஆகி விட்டனர்.

சென்னை புறநகரில் தனி வீட்டில் வசிக்கிறேன். உதவியாக, துாரத்து சொந்தக்கார பையன் தங்கியுள்ளான். கல்லுாரியில் படிக்கிறான்; வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தருவான். அவனது கல்வி கட்டணம் மற்றும் செலவுக்குப் பணம் கொடுத்து விடுவேன்.

கணவரின், 'பென்ஷன்' பணம், தேவைக்கு போதுமானதாக உள்ளது. தனிமை மற்றும் இயலாமை காரணமாக, முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணியுள்ளேன். வீட்டை விற்று, அந்த பணத்தை, வங்கியில், 'டெபாசிட்' செய்து, அதிலிருந்து வரும் வட்டி பணத்தை முதியோர் இல்லத்துக்கு கட்டி விடலாம் என எண்ணி, வீட்டை விற்க முயற்சித்தேன்.

வீட்டைப் பார்க்க வருபவர்கள் நன்றாக இருப்பதாக கூறினாலும், என்ன காரணத்தாலோ, அதன் பின் தொடர்பு கொள்ள மாட்டார்கள். காரணம் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

இந்நிலையில், கடைசியாக வீடு பார்க்க வந்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'யாருக்கும் நஷ்டமில்லாமல், ஒரு விலையை சொல்லியும், ஏன் தகவல் தெரிவிக்கவில்லை...' என்று கேட்டேன். என் உறவினர் பையன் தான், 'தற்சமயம் வீடு விற்கும் எண்ணம் இல்லை...' என்று நான் சொல்லச் சொன்னதாக, அவரிடம் தெரிவித்து இருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல், நான் கூறிய விலையை விட, அதிக விலைக்கு விற்க இருப்பதும், அதற்காக, போலியான, 'டாக்குமென்ட்டு'களை தயார் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.

என் வீட்டுப் பத்திரம் வங்கி லாக்கரில் இருப்பதால், அதற்கும் ஒரு போலி ஆவணம் தயார் செய்ய, ஏற்பாடு செய்துள்ளான்.

'இந்த ஏமாற்று வேலை எல்லாம் எதற்கு?' என்று அவனிடம் கேட்டதற்கு, 'நாலு வருஷமாக இந்த வீட்டுக்கு நாயாக உழைத்திருக்கிறேன். யாரும் இந்த வீட்டுக்கு உரிமை கோரப் போவதில்லை; எனக்கு கொடுத்தால் என்ன...' என்று திமிராக பேசுகிறான்.

வேறு எந்த நெருங்கிய சொந்தமும் இல்லாத தனி மனுஷியான நான், என்ன செய்வது என்று தெரியவில்லை.

என் மகனிடம் இது பற்றி பேசினால், 'போகட்டும் விட்டு விடுங்கள்...' என்கிறான். பெற்ற பிள்ளைகளின் அருகாமையும், ஆதரவும் இல்லாமல், மீதி காலத்தை எப்படி கழிப்பது என்று கவலையாக உள்ளது.

நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்புள்ள அம்மாவுக்கு —

உறவுக்காரப் பையனை அழைத்து, 'போலி ஆவணம் தயாரித்து, ஒரு கிழவியின் சொத்தை அபகரித்து, கிரிமினலாய் உன் வாழ்க்கையை ஆரம்பிப்பது முறையல்ல...' என, அவனுக்கு அறிவுரை வழங்குங்கள். தனியாக அவனுக்கு பண உதவிகள் செய்திருந்தாலும், அவன் உங்களை பார்த்துக் கொண்ட காலத்திற்கு ஒரு சம்பளத்தை நிர்ணயித்து, கொடுத்து விடுங்கள். இனி, உன் உதவி தேவைப்படாது; நீ வரவேண்டாம் எனக் கூறி, அவனை இதமாய் கத்தரித்து விடுங்கள்.

தேவைப்பட்டால், வழக்கறிஞர் உதவியுடன் இளைஞனின் பெயர், புகைப்படத்துடன், உங்கள் வீட்டு விற்பனைக்கும், இவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, பிரபல நாளிதாழில் விளம்பரம் வெளியிடுங்கள்.

உறவுக்காரப் பையனின் நடத்தையில் அல்லது பேச்சில் வன்முறை தென்பட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். மகன் - மகள் குடும்பத்தை, ஒரு மாதம் இந்தியாவுக்கு வரச்சொல்லி, உங்களுடன் தங்கச் சொல்லுங்கள். வீடு விற்பனையில் உங்கள் மகனை முழுமையாக ஈடுபடுத்துங்கள். துரிதமாக வீடு விற்க, இணையதளங்களில் விளம்பரம் செய்யுங்கள்.

வீட்டை தகுந்த விலைக்கு விற்று, பணத்தை வங்கியில் போட்டு, நீங்கள் முதியோர் இல்லத்தில் சேரும் வரை வழக்கறிஞர் ஆலோசனையில் இருங்கள். கட்சிக்காரருக்கு விசுவாசமாய் இருக்கக் கூடிய வழக்கறிஞரை அமர்த்துங்கள். வீடு விற்பனையில், 25 சதவீதம் மகனுக்கும், 25 சதவீதம் மகளுக்கும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுங்கள்.

வீடு விற்பனையாகும் வரை தனிமையில் இருக்காதீர்கள். அண்டை அயலாருடன் அன்பாய், நட்பாய் பழகுங்கள். வீடு விற்பனை செய்தபின், முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு முன், எதாவது ஒரு அன்பான உறவுக்கார பெண்ணுடன் இந்திய அளவில் ஆன்மிக சுற்றுலா சென்று வாருங்கள். தேவைப்பட்டால், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

'வீடு விற்ற பணத்தை, இரண்டாக பிரித்து, உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன். ஆண்டுக்கு ஆறு மாதம் நீயும், ஆறு மாதம் உன் தங்கையும் என்னை கவனித்துக் கொள்கிறீர்களா...' என, மகன் - மகளிடம் கேளுங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் முதியோர் இல்லம் செல்லாது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி தங்கலாம். பேரன் - பேத்திகளை உடனிருந்து கொஞ்சும் வாய்ப்பும் கிடைக்கும்.

வயோதிகத்தில் பிள்ளைகளிடம், 'ஈகோ' பார்க்கக் கூடாது; மனம் விட்டு பேச வேண்டும். அவரவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். கணவர் உயிரோடு இருந்தபோது, இருந்த நிலை இப்போது கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம். நமக்கு உடன் இருந்து உதவி செய்பவர் நல்லவரா, கெட்டவரா என ஆராயாமல் உடனிருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் முன் நகை, பணம் புழக்கத்தை காட்டக் கூடாது. மொத்தத்தில், முதியவர்கள் புறநகர் பகுதியில் தனியே வசித்தல் கூடாது.

அம்மா... உங்களின் மகன், மகள் இல்லா வாழ்க்கை, அர்த்தப்பூர்வமாய் அமைய, காஞ்சி காமாட்சியம்மன் அருள் புரியட்டும்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us