தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு-

என் வயது, 29; கணவர் வயது, 34. திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. இருவருமே சிகிச்சை பெற்று வருகிறோம். கணவர், நல்ல நிறமாக, அழகாக இருப்பார்; நான் மாநிறம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். வேலைக்கு செல்லவில்லை. கணவர் அரசு பணியில் உள்ளார்.

மாமியார், 'என் மகனின் அழகுக்கு, இவள் எல்லாம் பொருத்தம் இல்லை; என்னமோ விதி இவளைக் கொண்டு வந்து, இந்த வீட்டில் சேர்த்து விட்டது...' என்று, வீட்டுக்கு வருவோரிடம் எல்லாம் குறை கூறுவார்.

இதைக் கேட்டு வருத்தமடைவேன்; கணவர் தான் ஆறுதல் படுத்துவார்.

இதுபோல், ஒருநாள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவரிடம் என் நிறத்தை பற்றியும், குடும்பத்தை பற்றியும் கேவலமாக பேச, தாங்க முடியாமல் மாமியாரிடம் கத்தி விட்டேன்; வந்தது வினை... கணவர் வீடு திரும்பியதும், பற்ற வைத்து விட்டார்.

'வயதானவர் ஏதாவது பேசினாலும், பொறுமையாக இருக்க சொல்லிஇருக்கிறேனே... அதையும் மீறி, வீட்டுக்கு வந்த உறவினர் முன், எப்படி அம்மாவை எதிர்த்து பேசலாம்...' என்று கேட்டு, அன்றிலிருந்து என்னிடம் பேசுவதை தவிர்க்கிறார், என் கணவர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இரண்டொரு வார்த்தை பேசுவார்.

சிகிச்சைப் பெற, இப்போதெல்லாம் மருத்துவமனை வருவதை தவிர்க்கிறார். பொறுக்க முடியாமல் தான் எதிர்த்து பேச வேண்டியதாகி விட்டது. அதற்காக, கணவரிடமும், மாமியாரிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டும் பலனில்லை.

இப்போது என்ன செய்வது?

— இப்படிக்கு

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

'என் மனைவி கறுப்பு. அவள், எனக்கு குழந்தை பெற்று தரவில்லை; வேலைக்கு சென்று சம்பாதித்து கொட்டவில்லை...' என்கிற ஆவலாதி, உன் கணவருக்குள் ஒளிந்திருக்கிறது. தவிர, மருமகளை தேள் மாதிரி கொட்டும் அம்மாவை, நேரடியாக கண்டிக்க, உன் கணவருக்கு திராணியில்லை.

நெருங்கிய இருவருக்குள் சண்டை வந்தால், பலவீனமாய் இருப்பவரின் தலையில் தான் கொட்டுவோம். உன் மீது கோபப்பட தகுந்த சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்த உன் கணவருக்கு, உன் மாமியாரின் கத்தல் நல்ல வாய்ப்பாய் அமைந்து விட்டது. உன் தலையில் பலமாய் கொட்டி விட்டார்.

மன்னிக்கிற மனோபாவமும், 'மருமகளும் நம்மை போல ஒரு பெண்தானே...' என்கிற நிதர்சனமும், ஒரு நேரம் கோபப்பட்டால், இன்னொரு நேரம் அன்பாய் இருப்போம் என்கிற மனிதாபிமானமும் இல்லாத முரட்டு பெண்மணியிடம், மன்னிப்பு கேட்பதே பெரும் பாவம். இனி, நீ, உன் மாமியாரிடம் முட்டியும் கொள்ளாதே,

ஒட்டியும் போகாதே. 'மாமியாரே... உங்களிடம் சண்டை போட நான் தயாரில்லை; அவரவர் வழியில் ஒதுங்கி போவோம்...' என்கிற முகத்தை தொடர்ந்து காட்டு.

உன் கணவரிடமும், 'அன்பு கணவரே... போதும் அளவுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டாகி விட்டது; நீங்கள் எதற்கு வீண் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்... நாம் ஒற்றுமையாக இருந்து, தகுந்த சிகிச்சை மேற்கொண்டு தாம்பத்யம் செய்தால் தான் நமக்கு குழந்தை பிறக்கும்...' என்று கூறு.

இரண்டொரு வார்த்தை பேசும் கணவரிடம், அவ்வப்போது உரையாடலை வளர்த்து, இருவருக்குள்ளும் ஆன உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வா; இது ஒரு வீரியமான யுக்தி.

நாம் மாநிறம் என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழலாதே. கணவர் பணி முடித்து வரும் நேரம், அவர் முன், 'பளிச்'சென்று தென்படு. சமாதானத்தை பலப்படுத்தும் வண்ணம், கணவருக்கு மிகவும் பிடித்த சமையலை செய்து பரிமாறு.

'மனைவியின் மன்னிப்பை உதாசீனப்படுத்தி விட்டோம்; இப்போது, அவள் மவுனம் காக்கிறாள், பிரச்னையை நீளவிடக் கூடாது; மனைவியிடம் சமாதானமாக போவோம்...' என, உன் கணவர் இறங்கி வர வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான கணவன்மார்கள் கெஞ்சினால் விலகுவர், விலகினால் கெஞ்சுவர்.

காதல் ததும்பும், சமாதானம் பொங்கும், உன் தரப்பு நியாயங்களை நாசூக்காய் எடுத்து வைக்கும் குறுஞ்செய்திகளை, உன் கணவரின் கைபேசிக்கு அனுப்பு. இருவரும் தனித்திருந்த இனிமையான அனுபவங்களை வாய்வழி குறுஞ்செய்தியாக துாது விடு.

கணவரிடமும், மாமியாரிடமும் மன்னிப்பு கேட்டோம், அவர்கள் மன்னிக்கவில்லையே என புலம்பாதே. கணவரை உன் நேர்மையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆயிரம் யுக்திகள் உள்ளன. அதில், ஒரு யுக்தி, உன் வழி உறவினர் யாரையாவது உன் வீட்டுக்கு விருந்தாளியாக வரவழை. விருந்தாளியின் முன், உன் கணவர் அன்பாய் இருப்பது போல நடிக்கவாவது செய்வார். இரண்டொரு நாளில் அந்த நடிப்பு உண்மையாகி, சமாதானக் கொடி பறக்கும்.

சாதுர்யமிக்க ஒரு பெண், யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டாள்; ஆயிரம் பேருக்கு ஆலோசனை சொல்வாள். நீயும் ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்.

— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us