sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 09, 2018

Google News

PUBLISHED ON : டிச 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 38, கணவர் வயது: 45. படிப்பு, பி.ஏ., இல்லத்தரசி. கணவர், தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. பெற்றோருக்கு ஒரே மகன்; ஆணாதிக்கவாதி. மது அருந்துவது, பெண்களை மதிக்காமல், கேவலமாக பேசுவது, அவரது குணம். எனக்கு, இரண்டு குழந்தைகள். மகளுக்கு, 16, மகனுக்கு, 14 வயது.

என் மகனிடம், அப்பாவின் குணம் வெளிப்படுவதை உணர்ந்து, 'அக்காவிடம் அன்பும், ஆதரவுமாக இருக்க வேண்டும்; மற்ற பெண்களிடமும் மரியாதையாக பழக வேண்டும்...' என்று கூறினால், அப்போது, 'சரி... சரி...' என்பான், அடுத்த நிமிடம், மாறி விடுகிறான். வர வர, என்னையும் மதிப்பதில்லை.

என் கணவரோ, அவனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார். 'ஆம்பிளை சிங்கம்டா நீ...' என்று தலையில் துாக்கி வைத்து ஆடுகிறார். மகளுக்கு செய்வதற்கு தயங்குகிறார். அவசியமாக, ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால், பிச்சை போடுவது போல் செய்கிறார்.

இதனால், என் மகள், மனம் நொந்து, என்னிடம் முறையிடுகிறாள். என்னாலும் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. மனநோயாளியாக மாறி விடுவாளோ என்று, பயமாக இருக்கிறது.

அலுவலகத்திலும் பெண்களை, கேவலமாக பேசுகிறார். ஒருமுறை, இது பிரச்னையாகி, உடன் வேலை பார்க்கும் பெண்கள், புகார் அளித்துவிட, அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்தார். எவ்வளவோ முயன்றும், அவரை திருத்தவே முடியவில்லை. நான் என்ன செய்யட்டும்; சொல்லுங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

நான் உன்னிடம் கூறி, அதை, உன் மகளிடம் நீ கூறுவதற்கு பதில், நானே நேரடியாக பேசி விடுகிறேன்...

செல்லக்குட்டி... பெண்களை, கடவுளாக வழிபட்டு, அவர்களை காலில் இட்டு நசுக்கும், ஆணாதிக்க சமுதாயம் இது. பணக்கார வீட்டு பெண்களை விட, அடிதட்டு மற்றும் நடுத்தர வர்க்க பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தம்பியை ஆண் சிங்கம் என்கிறார், உன் தந்தை. அவன், ஆண் சிங்கம் என்றால், நீ பெண் சிங்கம் என்று உணர். பெண் சிங்கங்கள் தான், இரை தேடும் வல்லமை உடையவை. ஆண், பெண்ணில் யாரும் உயர்த்தி இல்லை, யாரும் தாழ்ச்சி இல்லை என்பதை, மனதார உணர்.

உனக்குள் தன்னம்பிக்கை, தனித்தன்மை, சுயமரியாதை ஆளுமைகளை வளர்த்துக் கொள். 'ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல், சம உரிமை, கவுரவும், சுதந்திரம், பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்...' என, இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பற்றிய, சட்ட அறிவை வளர்த்துக் கொள்.

'ஒரு நாடு, வளர்ச்சி பாதையில் செல்கிறதா, இல்லையா என்பதை, அந்நாட்டு பெண்களின் நிலையை வைத்தே கூறி விடலாம்...' என்றார், ஜவஹர்லால் நேரு.

உன் அப்பாவிடம் இப்படி கூறு:

'அன்புள்ள அப்பா... எனக்கும், என் தம்பிக்கும் இடையே, ஆண் - பெண் பாகுபாட்டை விதைக்காதீர். எனக்கான சம உரிமையை தர, நீங்கள் மறுத்தால், வீட்டுக்கு வெளியே ஆணாதிக்க சமுதாயம், அதே சம உரிமையை எனக்கு எப்படி வழங்கும்... என் தம்பிக்கு கொடுக்கப்படுவது, எனக்கும் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் போடுவது பிச்சை அல்ல, என் உரிமை...' என, அவரிடம் வலியுறுத்து.

இன்று, தந்தை இருப்பது போல், நாளை, உன் பணி இடமும் மற்றும் வருங்கால கணவனும், உரிமைகளை மறுக்கக் கூடும். சம வேலை வாய்ப்பும், சம சம்பளமும் கிடைக்க, ஆண்களுக்கு சமமாக அல்லது கூடுதலாக படி.

உனக்குள் ஒரு தலைமை பண்பை வளர்த்துக் கொள். வீட்டிலும், வெளியிலும் உன்னை பின்னுக்கு தள்ள துடிக்கும் சக்திகளுடன் போராடி, வெற்றி பெறு. ஒரு வைரம், தன்னை கரிக்கட்டையாக கருதக்கூடாது. உன் உண்மையான மதிப்பை, துல்லியமாக கணித்திடு.

ஆண்கள் மேலாண்மை நிர்வாகம் கற்றுத்தேறு. உன் தந்தையை போல, ஆணாதிக்கவாதியாக இல்லாத, பெண்மையை மதிக்கும் ஆண் மகனை, கணவனாக ஏற்றுக்கொள். 'அடங்கா பிடாரியாக, அகம்பாவம் பிடித்தவளாக இரு...' என, நான் கூறவில்லை. 'நான் ஒரு மகாராணி...' என அறிவித்துக் கொள்ளாதே... 'நீ ஒரு மகாராணி' என, பிறர் உன்னை கருதும்படி, நடந்து கொள்ள வேண்டும்.

உன் தந்தையின் துர்நடத்தைக்கு, அவரின் அறியாமையே அடிப்படை காரணம். அவர் மீதோ, தம்பி மீதோ வெறுப்பை உமிழாதே. தம்பிக்கு தகுந்த அறிவுரை கூறி, உன் பக்கம் திருப்பு. தந்தையின் அமில பேச்சால், புண்பட்ட அம்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்கு. 'அடிமையாக கிடப்பதே ஆனந்தம்...' என, விழுந்து கிடக்கும் பெண்களுக்கு, கலங்கரை விளக்கமாகு.

ஆணின்றி பெண் இல்லை, பெண்ணின்றி ஆண் இல்லை என்கிற தத்துவார்த்தமான உண்மையை, அனைவரும் உணர்வோம்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us