
அன்பு சகோதரிக்கு —
நான், 65 வயதான மூத்த குடிமகள். அரசு ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றுள்ளேன். என் கணவர் வயது, 68. அவரும், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.
என் கணவர், ஒரு சந்தேக பிசாசு. நன்றாக உடை உடுத்தினாலோ, முகத்திற்கு பவுடர் போட்டாலோ, வீட்டு வாசலில் நின்றாலோ, சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று கத்துவார்.
திருமணம் ஆன நாளிலிருந்தே இதே நிலை தான். இவரது பேச்சை கேட்டு கேட்டு, மனம் வெறுத்து விட்டது.
எங்கள் இருவரது பெற்றோரும், இந்த விஷயத்தில் தலையிடவே மாட்டார்கள். அப்படி அவர்கள், எனக்கு ஆதரவாக பேசி விட்டால், அன்று, வீடு ரெண்டு படும்.
குழந்தையின்மைக்காக, எத்தனையோ முறை, பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்தேன், வர மறுத்தார். நான், பரிசோதனை செய்து வருகிறேன் என்று கூறினால், அதற்கும் மறுத்து, என்னை, 'தரிசு நிலமாக'வே வைத்து விட்டார்.
இது, எனக்கு மிகவும் வேதனை அளித்தது. வயதாக வயதாக, அவரை பார்க்கும்போதெல்லாம் வெறுப்பு காட்ட ஆரம்பித்தேன். அதற்கும், சமயம்
கிடைக்கும்போதெல்லாம் என்னை, யாருடனாவது சம்பந்தப்படுத்தி கேவலப்படுத்த ஆரம்பித்து விடுகிறார்.
இப்போது, அவரை விட்டு பிரிய நினைக்கிறேன். ஆனால், எங்கு செல்வது என்று தெரியவில்லை; நான் என்ன செய்ய வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
திருமணமாகி, 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என, கணக்கிடுகிறேன். பணி காலத்தில், ஆயிரக்கணக்கான ஆண் ஊழியர்களிடம் பணி நிமித்தம் பேசியிருப்பாய். அதையெல்லாம், சம்பளத்துக்காக பொறுத்துக் கொண்டுள்ளார், உன் கணவர்.
பொதுவாக, ஆண்களின் சந்தேகம், மனைவிக்கு, 50 வயது வரை தான். அதன்பின், மனைவியை அந்நிய ஆண்களுடன் பேச, உடன் அமர, ஏன் கை குலுக்க கூட அனுமதிப்பர். விதிவிலக்காய் சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களது வாழ்க்கை துணை, வயோதிகத்தின் உச்சத்துக்கு போனாலும், திருமணத்தின் போது எப்படி இருந்தரோ அந்த முகமும், வாலிப வனப்பும் மனக்கண்ணில் பச்சை குத்தியது போல தங்கிடும்.
தன் குடுகுடு கிழ மனைவியை, குடுகுடு கிழ கணவனை, எந்த ராவணனாவது - ராவணியாவது கடத்திச் சென்று விடுவர் என்ற மனப்பிராந்தி, இவர்களது தினசரி நடவடிக்கைகளில் வெளிப்படும்.
ஆண்களின் சந்தேக குணத்திற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆண்மை குறைவு; இன்னொன்று, மனைவி மீது அதீத காதல்.
கணவரின் ஆண்மை குறைவு காரணமாகவே, உன்னை நொடிக்கு நொடி துன்புறுத்தி வந்துள்ளார். 40 ஆண்டு காலம் அவரின் சந்தேக குணத்தை சகித்து வாழ்ந்த நீ, தற்சமயம் பொங்கி எழுந்துள்ளாய்.
பணி காலத்தில், தினம், 8 - 10 மணி நேரம், கணவரின் சந்தேக சித்ரவதைகளிலிருந்து விலகி இருந்திருக்கிறாய். இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டீர்கள். 24 மணி நேரமும், வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நிற்கிற கட்டாயம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
* 'உங்களின் சந்தேக குணத்தை இனியாவது கை கழுவுங்கள். இல்லையென்றால், குடும்ப நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று, தற்காலிகமாக பிரிந்து வாழ போகிறேன். ஒரு ஆண்டு அவகாசத்தில், நீங்கள் திருந்தா விட்டால், விவாகரத்தே நிரந்தர தீர்வு...' எனக் கூறு
* பேரன் - பேத்தி வயதுள்ள உறவினர் பையனையோ, பெண்ணையோ உடன் வைத்துக் கொள். அவர்களை படிக்க வை; பாசமழையில் நனை
* ஆண்டிற்கு நான்கு முறை, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுலா செல்
* முதியோர் இல்லங்களுக்கு சென்று, அங்குள்ளோரின் பிரச்னைகளை கேட்டறிந்து, உன் பிரச்னை சிறிதென உணர். மாதம் ஒருமுறை, முதியோர் இல்லங்களின் ஒருவேளை உணவை, வழங்கப் பார்.
90 வயதை நெருங்கும் இருதரப்பு பெற்றோரிடமும் அன்பு பாராட்டு. அவர்களின் மாதாந்திர மருந்து செலவை ஏற்றுக்கொள்
* உன் உறவிலோ, நட்பிலோ இளைய தலைமுறை கணவன் - மனைவி இருந்தால், அவர்களுடன் மனம் விட்டு பேசு. சந்தேக குணத்தை அறவே கைவிட்டு, பரஸ்பரம் நம்பிக்கை வைக்க ஆலோசனை கொடு
* உற்சாகமூட்டும், நம்பிக்கை பீறிடும், நகைச்சுவை உணர்வு பொங்கும், சமூக அக்கறை மேலிடும் நட்பு வட்டத்தை, முகநுாலில் உறுப்பினராக பெறு. ஒத்த கருத்துள்ள பெண்களாய் கூடி, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஆரம்பி
* எளிதாய் செரிக்கும் சைவ உணவுகளை சமைத்து சாப்பிடு. 'டிவி' தொடர்களை தவிர்த்து, உபயோகமான நிகழ்ச்சிகளை பார்
* தேனீ, கழுதை, தேள், குளவி மற்றும் பாம்பு இவைகளின் மொத்த வடிவமான, கணவரிடமிருந்து விலகி நின்று, வாழ்வின் வெளிச்ச மகிழ்ச்சி பக்கத்தை கொண்டாடு.
நீ எங்கும் செல்ல வேண்டாம், இருக்கும் இடத்திலேயே அடையாறு ஆல மரமாய் இருந்து விழுதுகளை பரப்பு.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

