தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 26. பெற்றோருக்கு ஒரே மகள். குடும்ப நண்பரின் மகனுடன், பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல், கல்லுாரியில், எம்.ஏ., வரை ஒன்றாக படித்தேன். உற்ற நண்பனாக, நட்புக்கு இலக்கணமாக இன்று வரை இருந்து வருகிறான்.

என் திருமணத்தின்போது, ஓடி ஆடி வேலை செய்தான். என் கணவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். எங்கள் நட்பை புரிந்து கொள்ளவும், நட்பை தொடரவும் அனுமதி கேட்டேன். அவரோ, 'இதுவரை சரி... இனி, அவனது நட்பை வெட்டி விடு; இது, வேறு மாதிரியான பிரச்னையை ஏற்படுத்தும்...' என்று தடை விதித்தார்.

'நண்பனுடன், தொலைபேசியில் எப்போதாவது பேசலாம்; அடிக்கடி வேண்டாம்...' என்றார். 'சரி...' என்றேன்.

நான் ஏதாவது வேலையாக இருக்கும்போது, நண்பனிடமிருந்து போன் அழைப்பு வந்தால், 'அவள் இல்லை... வெளியே போயிருக்கிறாள்...' என்று கூறி, பட்டென்று வைத்து விடுவார்.

நண்பனுக்கு திருமணம் நிச்சயமாகி, அழைப்பிதழ் கொடுக்க வருவதாக கூறினான்.

'அலுவலகத்தில் இரண்டு நாள் மும்பைக்கு அனுப்புகின்றனர்; நீயும் வா... அழைப்பிதழை, பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு செல்லச் சொல்...' என்று கூறினார்.

நண்பனோ, நேரில் பார்த்து அழைக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டதாக, என் அம்மா பிறகு கூறினார். அவன் திருமணத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்கிறார், கணவர்.

இப்போதெல்லாம், எதற்காவது சண்டை ஏற்பட்டால், அந்த நண்பனுடன் இணைத்து, என்னை கேவலமாக பேசுகிறார். என் பெற்றோர், எவ்வளவோ கூறியும், எங்கள் நட்பை கொச்சைபடுத்துவதிலேயே குறியாக இருக்கிறார், கணவர்.

இதனால், கணவர் மீது இருந்த பாசம் குறைந்து வருகிறது. மன உளைச்சலில் தத்தளித்து வருகிறேன். தக்க வழி காட்டுங்கள் அம்மா.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

ஒரு ஆண் சிங்கம், தன் ஆளுமை உள்ள காட்டுக்குள், இன்னொரு ஆண் சிங்கத்தை அனுமதிக்காது. அத்துமீறும் சிங்கத்தோடு சண்டையிட்டு, காயப்படுத்தி துரத்தியடிக்கும். எல்லா உயிரினங்களிலும் ஆண் இனத்துக்கு, இந்த சுயநலம் உண்டு.

மனிதரில், ஆண்களுக்கு, இந்த சுயநலம் உச்சபட்சம். தன் மனைவி, அவளின் தந்தையிடம் அன்யோன்யமாய் இருப்பது கூட, சில கணவனுக்கு பிடிக்காது. மனைவியின் கூடப்பிறந்த அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா மகன்கள், மனைவியுடன் கூடுதலாய் அன்பு பாராட்டுவது, கணவனுக்கு எட்டிக்காயாய் கசக்கும்.

நிறைய பெண்கள், பிறந்த வீட்டு பெருமைகளை, உறவுக்கார ஆண்களின் பராக்கிரமங்களை, ஆண் நண்பர்களின் அசகாயசூரத்தனங்களை கணவனிடம் பீற்றிக் கொள்வர். இது, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதைப் போல.

இந்த வீண் பெருமை பேச்சு, கணவனின் மனதிற்குள் பொறாமை பூதத்தை உருவாக்கிவிடும். ஒருமுறை பற்றிய காட்டுத்தீயை அழிப்பது மிக சிரமம்.

எனக்கு தெரிந்து, பெரும்பாலான, பிழைக்க தெரிந்த பெண்கள், ஆண் தோழர்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கின்றனர். எவ்வளவு நெருக்கமான ஆண் நண்பர்களாய் இருந்தாலும், அவர்களை, தங்களது திருமணங்களுக்கு அழைப்பதில்லை.

கைபேசியில், ஆண் நண்பர்களின் எண்கள் இருந்தால், அழித்து விடுகின்றனர். பெற்ற தகப்பனிடம் கூட, அரை புன்னகைதான். உடன் பிறந்தவர்கள் வந்தால், 'ஹாய், ஹலோ' அவ்வளவு தான். 'பிறந்த வீடு நரகம், புகுந்த வீடு சொர்க்கம்...' என, கணவனிடம் கதை விடுகின்றனர்.

பொது வெளியில், கணவனுடன் செல்லும்போது, யாராவது ஆண் நண்பனை காண நேர்ந்தால், அறிமுகம் இல்லாதவரை பார்ப்பது போல, கடந்து சென்று விடுகின்றனர்.

'எனக்கு அந்த சினிமா ஹீரோ பிடிக்கும்; இந்த சினிமா ஹீரோ பிடிக்கும்...' என, கணவனிடம், மூச்சு விடுவதில்லை. உன்னை போன்ற பெண்கள் தான், ஆப்பை அசைத்து, வாலை மாட்டிக் கொள்கின்றனர்.

கணவனிடம் வெளிப்படையாக மனம் விட்டு பேசு. 'இனி எந்த நண்பனோடும், நட்பு பாராட்ட மாட்டேன். உங்கள் அனுமதி இல்லாமல், எந்த நண்பன் திருமணத்துக்கும் போக மாட்டேன். நண்பனோடு என்னை இணைத்து பேசி கொச்சைப்படுத்தாதீர்.

'உங்களின் பேச்சு, ஆண்மைக்கு இழுக்கு. என்னை போலவே, நீங்களும் பெண் தோழியருடன் நட்பு பாராட்டாதீர். அவளின் அருமை, பெருமைகளை என்னிடம் கதைக்காதீர். நம்பிக்கை தான் வாழ்க்கை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அகழி சூழ் மாளிகையில் ஒரு பெண்ணை சிறை வைத்தாலும், வழி தவற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவள் வழி தவறுவாள்.

'ஆயிரம் ஆண்களுக்கு நடுவில், ஒரு பெண் இருந்தாலும், பிற ஆடவரை ஏறெடுத்து பார்க்கக் கூடாது என்ற எண்ணமிருந்தால், ஏறெடுத்து பார்க்காமல் கண்ணியமாக வாழ்வாள்.

'நமக்குள் சண்டை வந்தால், என்னை பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள், சகித்துக் கொள்கிறேன்; சண்டைக்கு பின், யார் மீது தவறு இருந்தாலும், யாராவது ஒருவர் வெள்ளை கொடி காட்டுவோம். ஜோடி சேர்க்கும் வேலை மட்டும் வேண்டாம்...' எனக் கூறு.

ஆண் நண்பர்களை நீ வெறுத்து ஒதுக்குவதால், கணவன், உன் வழிக்கு வந்து விடுவான். சுயநலமாய் ஆண் நண்பர்களை ஒதுக்கி தள்ளுகிறோமே என, குற்ற உணர்ச்சி கொள்ளாதே. உன் பால்ய தோழனுக்கு திருமணம் ஆனவுடன், அவனும் உன்னை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கவே செய்வான்.

பிழைக்க தெரிந்த பெண்ணாய் இரு மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us