
அன்புள்ள அம்மா —
நான், 24 வயது பெண். பி.இ., படித்துள்ளேன். என் பெற்றோருக்கு நானும், என் அண்ணன் மட்டும் தான். அன்பான, சந்தோஷமான, வசதியான குடும்பம் எங்களுடையது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், உறவினர் ஒருவரின் மகள், பெற்றோர் சம்மதமின்றி, காதல் திருமணம் செய்து கொண்டாள். இரு வீட்டாரும், அவர்களை ஏற்றுக்கொள்ளாததால், தற்சமயம் வெளியூரில், வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். போதிய வருமானம் மற்றும் பெற்றவர்களின் ஆதரவு இன்றி கஷ்டப்படுவதாக கேள்விப்பட்டோம்.
அதிலிருந்து பெற்றோர், என் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தினர்.
கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கும்போதே, 'காதல் கத்தரிக்காய் எல்லாம், நம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதும்மா. அது, நம் சந்தோஷத்தை, நிம்மதியை கெடுத்துடும்...' என்று போதிக்க ஆரம்பித்தனர்.
'எனக்கு காதல் எல்லாம் வரவே வராது. நன்கு படித்து, வேலைக்கு சென்று சுயமாக நிற்க வேண்டும் என்பதே, என் விருப்பம்...' என்று, அவர்களுக்கு அப்போதே உறுதி அளித்தேன்.
ஆனாலும், கடந்த ஆண்டு, என் படிப்பு முடிந்ததுமே, வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறி விட்டனர்.
'கேம்பஸ் இன்டர்வியூ'வில் தேர்வானேன். நல்ல சம்பளத்தில், பெங்களூரில் வேலை கிடைத்தும், பெற்றோரின் பிடிவாதத்தால் போக முடியவில்லை. அப்பா - அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான், அண்ணன். அவனும், எனக்கு ஆதரவாக பேசவில்லை.
'காலம் எப்படி போகும் என்று சொல்ல முடியாது. வேலைக்கு போன இடத்தில், யாரையாவது காதலித்து விட்டால், எங்களால் அதை ஏற்க முடியாவிட்டால் என்ன செய்வது...
'அப்படியில்லாமல், உன்னை யாராவது ஒருதலையாக காதலித்து, நீ சம்மதிக்காவிட்டால், உன் முகத்தில், 'ஆசிட்' ஊற்றுவர் அல்லது கொலை செய்வர். இதெல்லாம் தேவையா... உன்னை வேலைக்கு அனுப்பி விட்டு, நாங்கள் இங்கு அல்லாட முடியாது...' என்று கூறி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
அவர்களை மீறி என்னால், எதுவும் செய்ய இயலவில்லை. படித்து, நல்ல மதிப்பெண் வாங்கியும், வேலைக்கு போக முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.
என்னுடன் படித்தவர்கள் எல்லாம், வெளிநாட்டு வேலை, சுய சம்பாத்தியம் என்று இருக்கும்போது, நான் மட்டும் இப்படி இருப்பது, வருத்தமாக உள்ளது.
நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
படித்த மற்றும் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும், காதல் செய்வர் என்கிற கோட்பாடு, அபத்தமானது. காதலில் உடன்படாத பெண்களை எல்லாம், ஆண்கள் கொலை செய்வர் அல்லது முகத்தில், 'ஆசிட்' ஊற்றுவர் என்ற எண்ணமும் முட்டாள்தனமானது.
நடப்பு, 21ம் நுாற்றாண்டிலும், இவ்வளவு பத்தாம் பசலித்தனமாக யோசிக்கும் பெற்றோர், உனக்கு வாய்த்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. பெற்றோரையும், அண்ணனையும் ஒருசேர அழைத்து பேசு.
'தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து விடுவர் என பயந்து, யாரும் விமான பயணம் போகாமல் இருக்கின்றனரா... காலடியில் கண்ணிவெடி புதைத்து வைத்திருப்பர் என பயந்து, யாரும் நடக்காமல் இருக்கின்றனரா... பூச்சி மருந்து தெளிக்கப்பட்டிருக்கும் என பயந்து, யாரும் உணவை உண்ணாமல் இருக்கின்றனரா...
'காற்று மாசுபட்டிருக்கும் என பயந்து, யாரும் சுவாசிக்காமல் இருக்கின்றனரா... நொடிக்கு நொடி, ஆபத்துகளும், சவால்களும் நிறைந்தது வாழ்க்கை; வாழ்க்கையை, தைரியமாய் வாழ்ந்து பார்க்க வேண்டியது தான்...
'நான் படித்தது, வேலைக்கு போக தான். வேலைக்கு போகும் நான், 'காதலிக்கவே மாட்டேன்' என, என்னால் முழு உத்திரவாதம் எழுதி தரமுடியாது. ஆனால், மனதிற்கு பிடித்த ஆண், என் வட்டத்திற்குள் வந்தால், உங்களிடம் தெரிவித்து, உங்கள் சம்மதத்துடன் அந்த ஆணை மணப்பேன்.
'நான், யாரையும் காதலிப்பது, 5 சதவீத சாத்தியம் தான். காதலிக்க வேலைக்கு போகவில்லை; சொந்த காலில் நிற்பதற்காக, வேலைக்கு போகிறேன். நான், உங்கள் மகள் தான்; ஆனால், கொத்தடிமை அல்ல. வேலைக்கு செல்வதை தடுப்பதாக, மகளிர் காவல் நிலையத்தில், நான் புகார் செய்தால், என்ன செய்வீர்கள்... அப்படி ஒரு கட்டாயத்துக்கு, என்னை தள்ளி விடாதீர்.
'வேலைக்கு சென்றால், காதலிப்பான் என நினைத்து, அண்ணனை வேலைக்கு அனுப்பாமல் இருக்கிறீர்களா... அவனுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா... ஆணாதிக்கத்தை நிலை நாட்டுவது, பெரும்பாலும் ஆண்கள் அல்ல, பெண்கள் தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கலாமா, அம்மா...
'காதலிக்காதே, காதலிக்காதே என, நீங்கள், என்னை அல்லும் பகலும் வலியுறுத்தினால், காதலித்து பார்த்தால் தான் என்ன என்கிற எண்ணம், எனக்குள் வந்து விடும். இயல்பாக இருங்கள்; எதையும் பிடித்து தொங்காதீர். இக்கால பெண்களுக்கு, தங்களை தற்காத்துக் கொள்ள நன்கு தெரியும்.
'எங்களுக்கு, 'ஆண்கள் நிர்வாகம்' முழுமையாக அத்துப்படி. மேலதிகாரியை எப்படி நிர்வகிக்க வேண்டும், திருமணமான - ஆகாத ஆண்களை, எப்படி நிர்வகிக்க வேண்டும், விடலை பசங்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என, எல்லாம் எங்களுக்கு தெரியும்.
'உங்களுக்கு எதிராக கலகம் செய்ய, என்னை துாண்டி விடாதீர். நான் வேலைக்கு செல்வதை, கடவுளாலும் தடுக்க முடியாது...' என்று தெளிவாக கூறு.
வேலைக்கு போனதும், தலைகீழாக நடக்காதே; கண்ணியத்தை கடைப்பிடி. என்ன பேசி, வேலைக்கு போகிறாயோ, அதே மாண்புடன் நட. 'உனக்கு கட்டுப்பாடுகள் விதித்தது முட்டாள்தனம்' என, பெற்றோர் நினைக்கும் வண்ணம், உன் செயல்பாடுகள் இருக்கட்டும்.
உன் முதல் மாத சம்பளத்தில், எனக்கு, 'ஸ்வீட் பாக்ஸ்' அனுப்பு; வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.