
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது: 37; கணவரின் வயது: 38. மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் கல்லுாரியில் படிக்கும்போதே, என் பெற்றோர் இறந்து விட்டனர். அந்த குறை தெரியாமல், சித்தி தான் என்னை பராமரித்து, திருமணம் செய்து வைத்தார்.
தாய் - தந்தை இல்லாதவள் என்று, என்னை தேடி வந்து பெண் எடுத்தனர். கணவருக்கு, அம்மாவும், ஒரு தங்கையும் உள்ளனர். தங்கைக்கு திருமணமாகி, அவள் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே வசிக்கிறார்.
நான், எம்.காம்., முடித்து, வங்கியில் பணிபுரிகிறேன். கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
திருமணம் ஆனதிலிருந்தே, கணவர் வீட்டாருடன் ஒத்துப்போகவில்லை. அவர்களது பத்தாம், பசலித்தனமான எண்ணமும், மூட நம்பிக்கைகளும், தற்காலத்துக்கு ஒத்துவராத எண்ணங்களும், என்னை வெறுப்படைய செய்கிறது.
கணவரோ, சுய சிந்தனையே சிறிதும் இல்லாதவர். அவர் குடும்பத்தாரும், நண்பர்களும் சொல்வதை தான், வேத வாக்காக எடுத்துக் கொள்வார். அவர்கள் வழி காட்டுதல்படிதான் வாழ்க்கை நடத்துகிறார்.
'இந்த சினிமாவுக்கு தான் போகணும்...' என்று நண்பர்கள் கூறினால், அதைதான் செய்வார். இது எனக்கு பிடிக்கவில்லை. நம் வாழ்க்கையை, நாம் தான் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறுவேன்.
இதன் காரணமாகவே, எனக்கும், அவருக்கும் சண்டை வரும். இதனால், கடந்த ஓர் ஆண்டாக, சித்தி வீட்டில் தங்கியிருக்கிறேன்.
கணவர் அழைத்தும், 'அடுத்தவர் சொல்படி கேட்டு, வாழ்க்கை நடத்த மாட்டேன் என்று, உறுதி அளித்தால் மட்டுமே வருவேன்...' என்று கூறி விட்டேன்.
'குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும். அவனுக்கு அப்பாவின் அன்பும், ஆதரவும் நிச்சயம் வேண்டும். குழந்தை வளர்ந்து, விபரம் தெரிவதற்குள், சமாதானமாக செல்...' என்று அறிவுறுத்துகிறார், சித்தி.
நான் எது சொன்னாலும், சொந்த புத்தியே இல்லாமல், அதை அலசி ஆராயாமல், உடனடியாக மறுத்து, கொத்தடிமை போல், வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல், தேங்கிய குட்டை போல் இருக்கும் அவருடன் வாழ வேண்டுமா என்று தோன்றுகிறது.
நான் என்ன செய்வது, அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கிரிக்கெட்டில், ஒரு ஆட்டக்காரர், ஆடுகளத்தில் நின்று, பந்து வீச்சாளரின் பந்தை எதிர்கொள்கிறார்.
பந்து, 150 கி.மீ., வேகத்தில் தலைக்கு வருகிறது. பந்தை எப்படி எதிர்கொள்வது என கேட்க, பயிற்சியாளரை அந்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடியுமா அல்லது கிரிக்கெட் பற்றிய புத்தகத்தை அப்போது படித்து, முடிவெடுக்க முடியுமா? கால் நொடி அவகாசத்தில், பந்து, தலையை தாக்கி, ஆட்டக்காரரை சாய்த்து விடும்.
வாகன நெரிசலில், காரை ஓட்டிச் செல்லும் நபர், யாரின் அறிவுரையை கேட்டு வாகன போக்குவரத்தை சமாளிப்பார்... ஒற்றையடி காட்டு பாதையில், ஒரு ராஜ நாகம், நம்மை வழி மறித்து நின்று, படமெடுத்து ஆடுகிறது. பாம்பிடமிருந்து தப்பிக்க, கைபேசியில் யாரிடம் உபாயம் கேட்போம்?
வாழ்வின் எல்லா முடிவுகளையும் சுயமாய் சிந்தித்து, சமயோசிதமாய், ஒரு மைக்ரோ நொடியில் முடிவெடுக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளில், 10ல், ஆறு ஜெயித்தாலே போதும். உடனடியாய் சுயமாய் முடிவெடுப்பவர்களே மாபெரும் வெற்றியாளர்களாக, தலைவர்களாக மின்னுகின்றனர்.
பெற்றோரும், ஆசிரியர்களும், நண்பர்களும் சொல்பவைகளை மனசாட்சியாலும், புலனுணர்வாலும் சீர்துாக்கி பார்த்து, சுயமாய் முடிவெடுக்க தெரிய வேண்டும். எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிடக் கூடாது.
ஆணும், பெண்ணும் சுயமாய் சிந்திக்க பயப்படுகின்றனர்; காரணம், தோல்வி பயம். சிலருக்கு, அறிவுத்திற அளவெண் குறைவு. அதனால், அவர்களுக்கு சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கும் நுட்பம் கைகூடுவதில்லை. சிலர், பணத்திற்காக, பாசத்திற்காக, காமத்திற்காக, புகழுக்காக, அதிகாரத்துக்காக மற்றும் நன்றிக் கடனுக்காக, தங்களது முடிவெடுக்கும் அதிகாரத்தை அடகு வைத்து விடுகின்றனர்.
அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
* கணவர், மீண்டும் சமாதானம் பேச வந்தால், 'அடுத்தவர் பேச்சை கேட்டே வாழ்க்கையை நடத்திய நீங்கள், இனி, என் பேச்சை கேளுங்கள்...' எனக் கூறி, அவருடன் குடும்பம் நடத்த போய் விடு. வாய்க்கு ருசியாக சமைத்து போட்டு, திகட்டத் திகட்ட தாம்பத்தியத்தை அளித்து, தினமும் தலையணை மந்திரம் ஓதி, கணவரை உன் பக்கம் திருப்பு
* குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை, அவரை எடுக்க விடாதே. கணவரின் சார்பாக நீயே எடு
* இன்றைய கணவன்மார்களில், 70 சதவீதம் பேர், எடுப்பார் கைப்பிள்ளைகள் தான். இதை நுண்ணோக்கி வைத்து பார்த்து, பெரிதுபடுத்தி வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே. நீயும் சம்பாதிக்கிறாய், கணவரும் சம்பாதிக்கிறார். மூன்று வயதில் மகன் இருக்கிறான். உன் கணவரிடம் வேறு சில நல்ல குணங்கள் கட்டாயம் இருக்கும்; அதை வைத்து, உன் கணவரை நேசி
* சில ஆண்கள், 40 வயது வரை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பர். அதன்பின், தானாகவே சுயமாய் முடிவெடுக்க ஆரம்பித்து விடுவர். சுயமாய் சிந்திப்பதில் கிடைக்கும் பெரு மகிழ்ச்சியை, ஒரு ஆணோ, பெண்ணோ அனுபவிக்க துவங்கி விட்டால், அதன்பின், முடிவெடுக்கும் அதிகாரத்தை யாரிடமும் விட்டுத்தர மாட்டார்கள்
* கணவர் வீட்டாரிடம், உன் எண்ணங்களை, கொள்கைகளை திணிக்காதே. அவர்கள், அவர்களாய் இருந்து விட்டு போகட்டும்; நீ, நீயாக இரு
* எதிர்பார்ப்புகளை குறைத்து கொள். உன் கணவர், உன்னைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதே.
எது கிடைக்கிறதோ, அது சிறப்பானது என்ற எண்ணத்துடன், வாழ்க்கையை வாழ்ந்து பார். தேங்கிய குட்டையில் மீன் பிடிக்க கற்றுக்கொள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

