
அன்புள்ள அம்மாவுக்கு,
வயது: 33. இளம் விதவை. 20வது வயதில், சாலை விபத்தில் பெற்றோரை இழந்தேன். ஒரே பெண்ணான எனக்கு, திருமணம் செய்து வைத்தனர், உறவினர்கள். இனிமையான மண வாழ்க்கையில், இரு மகன்கள் பிறந்தனர்.
என், 28வது வயதில், விபத்தில் கணவர் இறந்து விட்டார். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இப்போதும், உறவினர்கள் தான், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, குணமாக்கினர்.
இரு குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிலையில், கணவரின் அரசு வேலை கிடைத்தது. நேரம் காலம் தெரியாமல் உழைத்தேன். வாழ்க்கை படகு தள்ளாடாமல் சென்றது.
இந்நிலையில், உடன் பணிபுரியும் ஒருவர், என்னை விரும்புவதாக தெரிவித்தார். முதலில் மறுத்தேன். சிறிது சிறிதாக என் மனதை மாற்றினார்.
நாங்கள் இருவரும், கோவிலில் மாலை மாற்றி, கணவன் - மனைவியானோம். என் குழந்தைகளும், அவரை தந்தையாக ஏற்று, அன்பு செலுத்தினர்.
ஆரம்பத்தில், எங்களுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்.
ஒருநாள், அவருக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், மனைவியை பிரித்து வாழும் அவர், இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்ற விபரமும் தெரிய வந்தது; உடைந்து போனேன். அப்போதும், அவர் எங்களை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டதால், சமாதானமானேன்.
இதற்கிடையே, அவரது முதல் மனைவியின் உடன் பிறந்தவர்களும், உறவினர்களும், பல வழிகளில் சமாதானம் பேசி, என் கணவரின் மனதை கலைத்து விட்டனர்.
இப்போது அவர், எங்களை விட்டு பிரிந்து, முதல் மனைவியுடன் சென்று விட்டார்.
அனாதைகள் போல் பரிதவிக்கிறோம். என் குழந்தைகளின் ஏக்கத்தை பார்க்கும்போதெல்லாம், வேதனையாக இருக்கிறது.
இனி, நான் என்ன செய்வது, அம்மா.
- இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
இருபத்தியெட்டு வயது இளம் விதவைக்கு, ஓர் ஆணின் அருகாமையும், தாம்பத்தியமும் கட்டாயம் தேவைப்படும். உடன் பணிபுரியும் திருமணமான ஆண்கள், உன் வகை பெண்களுக்கு, வலை வீசவே செய்வர். விரும்பி வலையிலும் சிக்கிக் கொண்டாய்.
கோவிலில் மாலை மாற்றிக்கொண்ட போதே, அவன் திருமணம் ஆனவன் என தெரிந்திருந்தாலும், உன் ஆசை மனம், எதிர்மறை முடிவெடுத் திருக்காது. பின்னாளில் அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என தெரிந்தும், அவனுடன் தொடர்ந்து வாழ்ந்தாய்.
முதல் மனைவி, அவனை பேசி, அழைத்துச் சென்றதை, 'மனதை கலைத்து விட்டனர்' என கூறுகிறாய். இது, தவறான அணுகுமுறை மகளே.
திருட்டு பொருள், பறிமுதல் செய்யப்பட்டது நியாயம்தானே!
நீ மறுமணம் செய்து கொண்டதில் தவறில்லை. ஆனால், ஏற்கனவே திருமணம் ஆகாதவனை பார்த்து சட்டப்படி மணந்திருக்க வேண்டும்.
இனி, என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...
* குழந்தைகள் பரிதவிக்கின்றன; ஏக்கத்துடன் இருக்கின்றன என, நீ கூறுவது தவறு. அவனை பிரிந்து நீதான் பரிதவிக்கிறாய், ஏக்கத்துடன் இருக்கிறாய். மகன்கள் மீது பாசத்தை கொட்ட, நீ இருக்கிறாய். இடையில் வந்தவன், இடையில் போனான்; அவ்வளவே
* உனக்கு, 33 வயது. மீதி வாழ்நாளை ஓர் ஆணின் துணை இல்லாமல், நீ வாழ முடியாது. பழையன கழிதல், புதியன புகுதலுக்கான கால அவகாசமாய், ஒரு ஆண்டு போகட்டும்
* உறவினர்கள், தரகர்கள் அல்லது 'மேட்ரிமோனியல்' மூலமாக, தகுந்த ஆண் துணையை தேடு. நீ பார்க்கும் வரன், குழந்தைகள் இல்லாத, மனைவியை இழந்த, 40 வயது விதவனாக இருக்கட்டும். வருபவனிடம், உன் கடந்த காலத்தை பற்றி முழுமையாக கூறு.
ஒரே ஒரு தடவை பேசினால், எதிராளியை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. நான்கைந்து முறை அவனிடம் மனம் விட்டு பேசு. அவன் சரிபட்டு வருவான் என உனக்கும், நீ சரிபட்டு வருவாய் என அவனுக்கும் தோன்றினால், நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நீ பார்க்கும் வரன், அரசு பணியிலோ அல்லது உத்திரவாதமான தனியார் பணியிலோ இருப்பது நல்லது. பணியில் இல்லாதவனை மணந்து கொண்டால், உன் சம்பளத்தை அட்டை பூச்சி போல உறிஞ்சி விடுவான். குடி, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவனது முகமும், உதடும் காட்டி கொடுத்து விடும். இரண்டு பழக்கங்களும் இல்லாதவனாய் இருந்தால், மிக சிறப்பு
* உன்னை, கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டவனின் தொடர்புகளை முழுமையாக கத்தரி. அவனது கைபேசி எண்ணை அகற்றி, உன் கைபேசி எண்ணையும் மாற்று. அவன் இருக்கும் அலுவலகத்தில் பணிபுரியாதே; வேறு ஊருக்கு, விருப்ப மாற்றம் கேட்டு போ
* எக்காரணத்தை முன்னிட்டும், முறைப்படி விவாகரத்து பெறாத, திருமணமான ஆண்களுடன் நட்பு பாராட்டாதே
* திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் சில அலுவலக பெண்களுடன், நட்பு கொள்ளாதே
* எந்த ஆண் மற்றும் பெண்ணிடமும் உன் மனக்குறைகளை அழுது புலம்பாதே. கேலி செய்வர் அல்லது உன்னை தவறாக பயன்படுத்த முயற்சிப்பர்
* சின்னம்மா, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவு முறைகள் இருந்தால், அவர்களுடன் உறவுப்பாலம் அமை
* கோவிலுக்கு போ; பாட்டு கேள்; யோகா, தியான வகுப்புகளுக்கு செல். முழு உடல் பரிசோதனை செய்து கொள்.
மகன்களுடன் தினம் சில மணி நேரம் கொஞ்சி பேசி, அன்பை கொட்டு. உனக்கு சிறப்பான வாழ்க்கை துணை அமைய, வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

