sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 26, 2020

Google News

PUBLISHED ON : ஜன 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

வயது: 42. திருமணத்தின்போதே, கணவருக்கு சரியான வருமானம் இல்லை என்று தெரிந்தும், நான், கை நிறைய சம்பாதிப்பதால், என் விருப்பத்தின்படியே, திருமணம் செய்து வைத்தனர், பெற்றோர்.

மனைவி, தன்னை விட அதிகம் படித்தவள், சம்பாதிப்பாள், நல்ல நிறமாக இருக்கிறாள் போன்ற காரணங்களால், தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார், கணவர்.

இது, அவ்வப்போது அவரது பேச்சில் வெளிப்பட்டாலும், அப்போது எனக்கு புரியவே இல்லை.

எனக்கு ஒரு மகன் பிறந்தான்; எங்கள் இருவரது போலில்லாமல், மாநிறமாக இருந்தான். அக்குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று, பிரச்னை செய்ய ஆரம்பித்தார், கணவர்.

என் நடத்தையை இழிவாக பேசுவது, நல்ல உடை அணிந்தால், 'இதெல்லாம் நமக்கு வேண்டாமே...' என்று ஆரம்பித்து, என்னை கேவலப்படுத்தி, அந்த உடையை மீண்டும் அணியாதவாறு செய்து விடுவார்.

அதன் பின்னரே அவரது தாழ்வு மனப்பான்மை எனக்கு புரிந்தது. இதற்கிடையில், மது பழக்கத்துக்கும் அடிமையானார். குடித்து வந்து, வீட்டு வாசலில் நின்று கேவலமாக பேசுவார். மாமியார் எதுவும் செய்ய முடியாத நிலையில் தவிப்பார்.

கணவரது, 'டார்ச்சர்' அதிகமாகவே, இரண்டு வயது குழந்தையுடன் பிறந்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

பெற்றோரின் ஆதரவும், சம்பாதனையும் இருந்ததால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மகனை வளர்த்தேன். 'டீன் - ஏஜ்' பருவத்தில் இருக்கும் அவன், தனக்கு தந்தை இல்லை என்றே நினைத்துக் கொண்டுள்ளான்.

பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக இறக்க, தனி மரமானேன். இப்போது, கணவர், என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக, துாது அனுப்புகிறார். வயதான மாமியாரும், அவரோடு சேர்ந்து வாழ அறிவுறுத்துகிறார். ஆனால், அவர் என் மீது சந்தேகப்பட்டு பேசிய இழிவான வார்த்தைகள், இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

இப்போதும், அவர் திருந்தி விட்டார் என்பதற்கு, எந்த உத்தரவாதத்தையும், யாராலும் கொடுக்க முடியவில்லை. மகன் முன் திடீரென்று, 'இவர்தான் உன் தந்தை...' என்று நிறுத்தினால், அவன் மனம் என்ன பாடுபடுமோ, அவன் எதிர்காலத்தை பாதிக்குமோ என்றும் பயப்படுகிறேன்.

கணவருடன் சேர்ந்து வாழ, துளியும் விருப்பமில்லை. விவாகரத்து செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்யட்டும் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

ஆண்மை குறைவான ஆண்கள் தான், மனைவி மீது சந்தேகப்படுவர். மலைப் பாம்பு போன்றது, சந்தேகம். அது, சந்தேகப்படுபவர்களை சுருட்டி விழுங்கி விடும். விழுங்கப்பட்டோர், மலை பாம்பின் வயிற்றிலிருந்து வெளியே வருவது, முடியவே முடியாத விஷயம்.

பல அரசாங்கங்களை கவிழ்த்திருக்கிறது, சந்தேகம்; பல குடும்பங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது; பல உறவுகளை சிதைத்திருக்கிறது. சாத்தானின் முத்தம், சந்தேகம்; ஆன்மாவை அரிக்கும் கரையான்.

சந்தேகம் என்பது, ஒரு வழி பாதை. புற்றுநோய் குணமாகி விடும். சந்தேகம் பிடித்த மனிதர்கள், சந்தேகத்திலிருந்து விடுதலை ஆவது, குதிரை கொம்பு.

கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை உறுதி செய்து கொள்...

* குடி பழக்கத்திலிருந்து கணவர் மீண்டு விட்டாரா என, அவரின் நண்பர்களை விசாரி

* நீயும், அவரும் பிரிந்து, குறைந்தபட்சம், 15 ஆண்டுகள் இருக்கும் என, யூகிக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில், எந்த பெண்ணுடனும் தொடர்பில்லாமல், கணவர் வாழ்கிறாரா என்பதை உறுதி செய்

* அவரை நேரடியாக அழைத்து, மனம் விட்டு பேசு. என்ன நோக்கத்திற்காக உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்; மகன், அவருக்கு தான் பிறந்தான் என்பதை, இப்போதாவது நம்புகிறாரா... குடி நோயாளியாக இருந்து பெரும் கடனாளியாக ஆகியுள்ளாரா... அவரது கடனை அடைக்க, உன் சேமிப்பு பணம் உதவும் என திட்டமிடுகிறாரா...

பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கும் உன்னுடன் சேர்வது போல சேர்ந்து, பழி வாங்க விரும்புகிறாரா... தந்தை பாசம் விஸ்வரூபமெடுத்து, மகனுடன் இணைய விரும்புகிறாரா... உண்மையில், அவரின் உள்நோக்கம் என்ன என்பதை அலசி ஆராய்

* தாம்பத்யத்துக்கு, 'மாரல் சப்போர்ட்'டும், கணவன் மீண்டும் தேவை என, உன் உடலும், மனமும் விரும்புகிறதா என, ஆத்ம பரிசோதனை செய்

* வயதான மாமியாரை, தனியே அழைத்து, மகன் திருந்தி விட்டதற்கு என்ன உத்தரவாதம் தருகிறாள் என்பதை கேள்

* கணவன், தற்சமயம் ஏதாவது நிலையான உத்தியோகத்திலிருந்து, சம்பாதிக்கிறாரா என்பதை விசாரி

* கணவனை, முழு உடல் பரிசோதனை செய்து, அறிக்கையை எடுத்து வந்து உன்னிடம் கொடுக்க சொல். குடித்து குடித்து கல்லீரல் செயலிழந்து போயிருக்கலாம். உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, நீரிழிவு கோளாறு இருக்க கூடும். அப்படி இருந்தால் நீதான், கணவனுக்கு லட்சக்கணக்கில் மருத்துவ செலவு செய்ய வேண்டி வரும்

* இரண்டு வயதில் தந்தையை பார்த்தது, 17 வயதில் அடையாளம் தெரியாது என, தப்பு கணக்கு போடாதே. மகனின் மனக்கண்ணில், தந்தையின் உருவம் பச்சை குத்தப்பட்டிருக்கும். அவனிடம், 'மகனே, உன் தந்தையை பிரிந்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது, அவர், நம்முடன் சேர விரும்புகிறார். உன் கருத்து என்ன...' என வினவு. கணவனின் நடத்தையும், உடல்நலமும் திருப்திகரமாய் இருந்து, மகன் சம்மதிக்கிறான் என்றால், சேர்ந்து வாழ். மகன் வேண்டாம் என்று சொல்லி விட்டால், கணவனை, முறைப்படி விவாகரத்து செய்து, தலை முழுகு

* நீ, 42 வயதுக்கு மேல் மறுமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டாய் என, நம்புகிறேன். மறுமண ஆசை இருந்தால், மகனின் அனுமதியுடன், மனைவியை இழந்த, மகனோ, மகளோ இல்லாத விதவனை, மறுமணம் செய்து கொள்

* அய்யோ பாவம் என இரக்கப்பட்டு, எதையும் ஆராயாமல், கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாய் என்றால், நிரந்தரமாய் நரகத்தில் தள்ளப்படுவாய்.

உனக்கும், மகனுக்கும் நல் வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us