PUBLISHED ON : மார் 29, 2020

அன்புள்ள அம்மாவுக்கு—
நான், 26 வயது பெண். பெற்றோர், காலமாகி விட்டனர். எனக்கு ஒரு அக்கா. தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் தான், இருவரும் வளர்ந்தோம்.
'எந்த சூழ்நிலையிலும் நாம் பிரிந்துவிடக் கூடாது; ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்வோம்...' என்று, இளம் பருவத்தில் பேசிக் கொண்டோம். கல்லுாரி படிப்பை அக்கா முடித்ததும், அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர், தாத்தா - பாட்டி. மாமாவுக்கு, வெளி மாநிலத்தில் பணி மாற்றம் வர, அங்கு சென்று விட்டனர்.
அவரது பிரிவால், மிக மன வருத்தம் ஏற்பட்டது. அடிக்கடி போனில் பேசிக் கொள்வதால், ஆறுதல் பட்டேன்.
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானாள், அக்கா. பிரசவத்துக்கு கூட எங்களிடம் வரவில்லை. அவளது மாமியாரே சமாளித்துக் கொண்டார்.
குழந்தைகளுக்கு, 2 வயதானபோது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனாள், அக்கா.
அக்காவின் குழந்தைகளை நான் வளர்த்து கொள்கிறேன் என்று கூறியும், குழந்தைகளின் மீதுள்ள பாசத்தால், அவர்களை என்னிடம் கொடுக்க மறுத்து விட்டார், மாமா.
இந்நிலையில், நான் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார், பாட்டி. நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.
திருமணத்துக்கு பின், அக்காவின் குழந்தைகளை வளர்க்க, காதலரும் சம்மதிக்கவில்லை. அக்காவின் குழந்தைகளுக்கு தாயாக வேண்டும், மாமாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வேறு யாரையாவது மாமா திருமணம் செய்து கொண்டால், வருபவர், அக்கா குழந்தைகளை கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டுமே என்றும் பரிதவிக்கிறேன்.
நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் அம்மா. நல்ல வழி சொல்லுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
விடலை பருவத்தில் சகோதரிகள் பேசிக் கொண்டதை எல்லாம், வாலிபத்தில் நிறைவேற்ற, கள யதார்த்தம் ஒத்துழைக்காது. ஒரு பொம்மையை வைத்து, இரு குழந்தைகள் ஒற்றுமையாக விளையாடுமா... பெண்கள் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்வர், ஒருக்காலும் கணவரை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
அறியாத வயதில், அக்கா பேசியதை, மனதிற்குள் வைத்து ஒரு நப்பாசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். திருமணமாகி கணவருடன் அக்கா, வெளி மாநிலம் சென்றவுடன், அந்த நப்பாசை தற்காலிகமாக தகர்ந்திருக்கிறது. இடையில் உனக்குள் ஒரு காதல் துளிர்த்திருக்கிறது. அந்த காதலும் முழுமையானது அல்ல.
மஞ்சள் காமாலையால் அக்கா இறக்க, மாமாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசை விஸ்வரூபித்து இருக்கிறது. இரட்டை குழந்தைகளை வளர்ப்பதற்காக, மாமாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுகிறாய். அது ஒரு நொண்டி சாக்கு. உன் பிரதான நோக்கம், அக்காவின் கணவரை கைப்பற்றுவது தான்.
உன்னிடம் சில விஷயங்களை விவாதிக்க வேண்டி இருக்கிறது.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நீ, உன் காதலனை கை கழுவுவது முறையா... உனக்கொரு மனம் இருப்பது போல, காதலனுக்கும் ஒரு மனம் இருக்கும் இல்லையா... நீ கைவிட்ட நிலையில், உன் காதலன் தற்கொலை செய்ய முயல்வானே...
திருமணம் செய்து, மனைவியிடம் நான்கு ஆண்டுகள் தாம்பத்யம் துய்த்த மாமாவுக்காக பரிதாபப்படுகிறாய். பல கனவுகளுடன், திருமண வாழ்க்கைக்குள் புக காத்திருக்கும், உன் காதலன் மீது பரிதாபப்பட மாட்டாயா... எந்த ஆண், கொழுந்தியாளின் மகன்களை வளர்க்க ஒத்துக்கொள்வான்; நிர்பந்தப்படுத்தினால், தெறித்து ஓடுவான்.
மாமாவை திருமணம் செய்யும் எண்ணத்தில் நீ உறுதியாக இருந்திருந்தால், ஏன் காதலனுடனான நிச்சயதார்த்தத்துக்கு ஒப்புக்கொண்டாய்...
'ஒரே ஆணை திருமணம் செய்து கொள்வோம்...' என, நீயும், உன் அக்காவும் பேசிக்கொண்டது, மாமாவுக்கு தெரியுமா... மாமாவுக்கு, உன்னை மறுமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறதா; உன் காதலை பற்றி, அவர் அறிவாரா... நிச்சயதார்த்தத்துக்கு பிறகு காதலனை உதறிவிட்டு, மாமாவை நீ கரம் பிடிக்க விழைவதை, அவர் ஆதரிப்பாரா?
உனக்கும், மாமாவுக்கும், 10 வயது வித்தியாசம் இருக்கும் என, யூகிக்கிறேன். 'சென்டிமென்டால்' உந்தப்பட்டு, மாமாவை திருமணம் செய்ய துடிக்கிறாய். உன் இளமை பிரளயத்துக்கு, மாமாவால் ஈடுகொடுக்க முடியாது. நீ மீண்டும் காதலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. இரு ஆண்களுடன் உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துக் கொள்வாய். இது, தேவையா யோசி.
நீ, உன் தாத்தா - பாட்டியிடம் மனம் விட்டு பேசு. மாமா பற்றியும், உன்னை பற்றியும் பாட்டிக்கு நன்கு தெரியும். உன் எதிர்காலத்துக்கு எது நல்லது என, அவர் அறிவார். பாட்டியின் உள்ளக்கிடக்கை அறிந்து, உன் பிரச்னைக்குரிய தீர்வை கூறுகிறேன், மகளே...
உன்னுடைய காதலனையே மணந்து கொள். திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். அவ்வப்போது, அக்காள் மகன்களை, உன் வீட்டுக்கு வரவழைத்து பாசத்தை பொழி.
மறுமணம் செய்வதும், செய்யாதிருப்பதும் மாமாவின் விருப்பம். கணவனை இழந்த மாமாவின் வயதுக்கு ஒத்துப்போகிற பெண் கிடைத்தால், அவர் மறுமணம் செய்து கொள்ளட்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே. நன்கு செல்லும் வாகனத்தை, பழுதாகி நிற்கும் வாகனத்துடன் இணைத்து ஓட்ட முயற்சிக்காதே. உன் அக்கா மகன்களின் எதிர்காலத்துக்கு இறைவன் எதை செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்வான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
உன் திருமண வாழ்க்கைக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
