PUBLISHED ON : ஜூன் 21, 2020

அன்புள்ள அம்மா —
பட்டதாரி இளைஞன், வயது, 21. அரசு கலை கல்லுாரியில், பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, இரண்டு ஆண்டுகளாகிறது. கல்லுாரியில் படிக்கும்போதே, ஐ.ஏ.எஸ்., ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், பட்டப் படிப்பை முடித்து, அடுத்த மாதமே சென்னையில் உள்ள இலவச, ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன்.
சென்னையின் சூழ்நிலை ஒத்துப்போகாமல், இணையம் வழியாக படிக்க எண்ணி, சேர்ந்த ஒரே வாரத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன். மூன்று மாதங்கள் வரை, ஆர்வத்தோடு நன்றாக படிக்க துவங்கினேன்.
அப்போது, ரயில் பயணத்தில், ஒரு பெண்ணை சந்தித்தேன். எங்கள் ஊரிலிருந்து, 40 கி.மீ., தொலைவில் தான், அவளது ஊர் இருக்கிறது. அவளது மூன்றாவது வயதில், தாய் இறந்து விட, தந்தையும் அவளை பிரிந்து சென்று விட்டார். பெரியம்மாவும், மாமாவும் தான், அவளை வளர்த்து வருகின்றனர்.
பிளஸ் 2 வரை, விடுதியில் தங்கி பயின்றுள்ளாள். அரசு செவிலியர் பயிற்சிக்கு அழைப்பு வரவே, அதில் சேர்ந்தாள். முதல் சந்திப்பிலேயே இதை என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.
இந்த ஆண்டு இறுதியில், பயிற்சி காலம் முடிகிறது. அடுத்த ஒரு மாதத்தில், அரசு செவிலியராக பணியில் சேர உள்ளாள். பயணத்தின் முதல் சந்திப்பில் நண்பர்களான நாங்கள், தொடர்ந்து போனில் பேசிக் கொண்டோம்.
ஒரு மாதத்திற்கு பின், ஒருநாள் போனில் தொடர்பு கொண்டு, என்னை பிடித்திருப்பதாகவும், காதலிப்பதாகவும் சொன்னாள்.
எனக்கும், அவளை பிடித்திருந்தது.
அவள் மாமாவிற்கு போன் செய்து, அவளை காதலிக்கும் விஷயத்தை கூறி, 'நாங்கள் இருவரும் பணிக்கு சென்று, இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்...' என்றேன்.
'முதலில், இருவரும் வேலைக்கு செல்லுங்கள். பிறகு பார்க்கலாம்...' என்றார்.
அவள் மாமாவிடம் சொன்னது போலவே, என் பெற்றோரிடமும் சொன்னேன். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், 'வேலைக்கு சென்ற பிறகு பார்க்கலாம்...' என்றனர்.
நாங்கள் காதலிக்கும் விஷயம், அவள் உடன் படிக்கும் சக மாணவியருக்கு தெரியவே, காதலிக்க கூடாது என்று, இவளை வற்புறுத்தி உள்ளனர். இவள் மறுக்கவே, எங்கள் காதலை பிரிக்க எண்ணி, அவளது ஆசிரியைகளிடம் காதல் விஷயத்தை கூறினர். அத்துடன், அவள் மாமாவிற்கும் போன் செய்து, எங்களை பற்றி தவறாக கூறவே, அவருக்கு, என் மீதான நம்பிக்கை குலைந்தது. அவரும் எதிர்ப்பு கொடி காட்டி, இருவரும் பிரிந்து விடுமாறு அறிவுறுத்தினார்.
திடீரென்று என்னுடன் பேசுவதை தவிர்த்தாள்.
அவளது மாமாவுக்கு போன் செய்தேன்.
'உன்னை, பிடிக்கவில்லை என்று சொல்லி விலகி விட்டாள். அவளை, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க போகிறோம். இனி, அவளை தொந்தரவு செய்தாலோ, பார்க்க எங்கள் வீட்டு பக்கம் வந்தாலோ, ஆட்களோடு வந்து, உன் பெற்றோர் முன், உன்னை அசிங்கப்படுத்தி விடுவோம்...' என்று மிரட்டினார்.
அவளை காதலிக்க துவங்கியதிலிருந்து ஏற்பட்டு வரும் பிரச்னைகளால், என்னால், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு ஒருநிலை மனதோடு படிக்க இயலவில்லை. அவளை என்னால் மறக்க முடியவில்லை. அவளது நினைவிலிருந்து மீள முடியாமல் தினமும் தவிக்கிறேன்.
அவளுக்கு, திடீரென்று என்னை ஏன் பிடிக்காமல் போனது... என்னிடம் ஏன் பேச மறுக்கிறாள்... அவள், மீண்டும் வருவாளா, காதல் கைகூடுமா... வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல், நாட்களை நகர்த்தி வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது, ஆலோசனை கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
இந்திய ஆட்சி பணிக்காக தேர்வு எழுதும் கனவுடன் இருக்கும், 21 வயது இளைஞனுக்கு, காதல் வரலாமா... ஒரு மாணவன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்றால், தேர்வுக்கான பயிற்சி, ஒரு ஆண்டு; மூன்று தேர்வுகள், ஆறு மாதம்; நன்னடத்தை காலம், இரண்டு ஆண்டுகள் என, மூன்றரையிலிருந்து நான்கு ஆண்டுகள், தேர்வு தவம் இருந்தாக வேண்டும்.
விசுவாமித்திரராக நீ, மேனகாவாக உன் காதலி. பொதுவாக மாவட்ட ஆட்சி தலைவர்கள், 28 - 30 வயதில் தான் திருமணம் செய்து கொள்வர்.
அவர்களின் வாழ்க்கைத் துணையாக, ஒரு துணை மாவட்ட ஆட்சி தலைவரோ அல்லது அதிகாரத்தில் சமமான வேறொரு துறை அதிகாரியோ தான் இருப்பார். செவிலியர் நங்கை ஒத்து வராது.
ரயில் பயணங்களில் ஏற்படும் நட்புகளும், காதல்களும் நீர்க்குமிழித்தனமானவை. ஒரு காதல், முழுதாய் மலர்ந்து மணம் வீச, தகுந்த கால அவகாசம் தேவை. நீயோ காதலித்த ஒரே மாதத்தில் காதலியின் மாமாவுக்கு, போன் செய்து காதலை அறிவித்துள்ளாய். ஏனிந்த அவசரம்...
காதலை, அந்தரங்கமாக வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும். காதலியின் தோழிகளிடம் காதலை, கண்காட்சிபடுத்தி விட்டாய். காதலியின் தோழிகளுக்கு உன் மீது ஏனிந்த பொறாமை... காதலியின் ஆசிரியைகளிடமும், மாமாவிடமும் அவர்கள் கோள்மூட்டி, உங்கள் காதலை ஏன் பிரிக்க வேண்டும். காதலியின் தோழிகள் மீதும், காதல் வலை வீசி பார்த்தாயோ!
உன் காதலி, உன்னிடமிருந்து ஏன் விலகுகிறாள்... உன்னைப் பற்றிய ஒரு உண்மையையோ, அவதுாறையோ, அவள் நம்பியிருக்க வேண்டும். பரவாயில்லை எல்லாம் நன்மைக்கே.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, காதலையும், திருமணத்தையும் தள்ளிப்போடு. உன்னுடைய கைப்பேசி எண்ணை மாற்று. காதலியின் கைப்பேசி எண்ணை அகற்று. நீ எந்த பிரிவினை சேர்ந்தவனாக இருந்தாலும், குறைந்தபட்சம், ஆறு முறை, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதலாம். நல்லதொரு, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமியில் உன்னை இணைத்துக் கொள்.
உன்னை வஞ்சித்த காதலியையும், அவளது மாமாவையும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்வாகி, பழிவாங்க சங்கல்பம் கொள். காதல் சார்ந்த காமத்தை மனதிலிருந்து அகற்று. மாவட்ட ஆட்சி தலைவராகி மாவட்டத்திற்குள் நீ செய்யப் போகும் சீர்திருத்தங்களை கனவு காண்.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இடையே, குரூப் - 1 தேர்வையும் எழுது. குரூப் - 1 தேர்வில் தேர்வானாலும், மிகப்பெரிய பதவிகளுக்கு போகலாம். ரயிலில் போய் வராதே. அகாடமியில் தங்கி, பயிற்சிகளை மேற்கொள்.
ஐ.ஏ.எஸ்., அல்லது குரூப் - 1 தேர்வு எதாவது ஒன்றில் தேர்வாகி, நீ பெரிய பதவிக்கு போய் விட்டால், உன் காதலியை விட அழகிலும், படிப்பிலும் சிறப்பான பெண்கள், 1,000 பேர், உனக்கு வாழ்க்கைத் துணையாக வர, போட்டி போடுவர்.
தகுதிகளை உயர்த்திக் கொண்டே காத்திருந்தால், சூரிய பழமே உதிர்ந்து கையில் விழும்.
காதல் தோல்வி, ஒரு சாதனை மனிதனுக்கான அடி உரம் மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்
