தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது: 26. எனக்கு திருமணம் ஆகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம் தான். நான், நல்ல வசதியான வீட்டில் பிறந்து, வசதியானவருக்கு தான் வாழ்க்கைபட்டுள்ளேன். ஒரு ஏழையை திருமணம் செய்திருந்தால் கூட, ஒருவேளை என்னை நன்றாக வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

திருமணம் நடைபெற்ற நிமிடத்திலிருந்து இன்று வரை, கணவர் எனக்கு செய்யும் வன்கொடுமையை என்னவென்று சொல்வது. கல்லால் அடித்தால் கூட பரவாயில்லை. அவர், சொல்லால் அடிக்கிறார். என் மனசு செத்து விட்டது. நடைபிணமாக தான் வாழ்கிறேன்.

கணவரை விட, நான் சிறிது சிவப்பாக இருப்பேன். திருமண வரவேற்பின்போது, எங்களை வாழ்த்த வந்தவர்களில் சிலர், 'பொண்ணு தங்க சிலை போல இருக்கா, பிரபல நடிகை ஒருவர் போல இருக்கா, தேவதை போல இருக்கா...' என்றெல்லாம் கூறினர்.

அவர் நண்பர் ஒருவர், ஒருபடி மேலே போய், 'உனக்கு, இவங்க அதிகம் டா...' என்றார்.

அதுதான் வினையா... என்னை சந்தேகப்படுகிறாரா ஒன்றும் புரியவில்லை.

வெளியே சென்றால் நான் எதை விரும்புகிறேனோ, அதற்கு நேர் எதிரான பொருளாக, எனக்கு பிடிக்காத ஒன்றை வாங்கிக் கொடுப்பார். புடவை கேட்டால், சுடிதார்; வெள்ளை நிறம் என்றால், கறுப்பு. வெனிலா ஐஸ்கிரீம் என்றால், ஸ்டிராபெரி; சினிமா என்றால், பீச். நாய் குட்டி வளர்க்க பிடிக்கும் என்று கேட்டேன்; பூனை குட்டி கொடுத்தார்.

ஒருநாள், அவர் வார்த்தையை மீறி, எனக்கு பிடித்த உடையை உடுத்தியதற்காக, உடம்பில் ஒட்டு துணியின்றி, கையை கட்டிப்போட்டு அறைக்குள் பூட்டி விட்டார். மூன்று மணி நேரம் கழித்து தான் விடுவித்தார்.

வேறு ஒருநாள், அவர் பேச்சை கேட்காமல் பாகற்காய் பொரியல் செய்ததால், அன்று, எனக்கு, அது மட்டும் தான் உணவு என்று சொல்லி அதையே முழுதும் சாப்பிட வைத்தார்.

ஒருநாள், என் மாமியார், 'கோவிலுக்கு போகலாம்...' என்றார். அதற்கு தயாராகி, கிளம்பி விட்டேன். அப்போது, ஆபீசிலிருந்து வந்தவர், என்னை அழைத்து, நான் கட்டியிருந்த புடவை அவருக்கு பிடிக்கவில்லை என்று, மாற்ற வைத்தார். யாரும், அவரை எதுவும் கேட்கவில்லை.

அவருக்கு பிடித்த வாழ்க்கையை, என்னை வாழ கட்டாயப்படுத்துவது, மற்றவருக்கு, அவர் என் மீது காட்டும் அக்கறையாகவே தெரிகிறது. ஏனென்றால், உலகத்தை பொறுத்தவரை, சத்தம் போட்டு பேசினால், அடித்தால், பணம் கேட்டு துன்புறுத்தினால் தான், வன்கொடுமை என்ற எண்ணம்.

இன்று வரை, என் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததில்லை, கணவர். என்னை மனதளவில் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கிறார்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இதுவரை நான் மூன்று முறை கருவுற்று, தனக்கு, குழந்தை இப்போது வேண்டாம் என்று, கட்டாய கரு கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும், மிரட்டி வைத்துள்ளார்.

என் பிறந்த வீட்டார், தங்கமான மாப்பிள்ளை என்று, தங்க தட்டில் வைத்து தாங்குகின்றனர். 'அவர் இஷ்டப்படி நடந்து கொள்...' என்கின்றனர்.

புகுந்த வீட்டாரோ, 'என்னம்மா... அவன் உன் மேல் உசிரையே வெச்சிருக்கான். கொஞ்சம் விட்டுப் பிடி...' என்கின்றனர்.

எனக்கு, வர வர ஆண்கள் மீது வெறுப்பு வருகிறது. 'கீ' கொடுக்கும் பொம்மையாக இனி வாழ முடியாது. எனக்கு, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை. பணம் இல்லை, வேலை இல்லை. சட்டம் எனக்கு தீர்வு கொடுக்குமா... இல்லை, என் இறுதி காலம் வரை இந்த நரக வாழ்வு தானா?

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

ஓர் ஆணின் பேச்சை, பெற்றோர் கேட்க மாட்டார்கள். உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் கேட்க மாட்டார்கள். கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கேட்க மாட்டார்கள். ஏன் வளர்ப்பு நாய் கூட கேட்காது. ஆனால், கட்டின மனைவி கேட்க வேண்டும்.

கணவனின் பொம்மலாட்ட பொம்மை, மனைவி. கணவன் நில் என்றால், மனைவி நிற்க வேண்டும்; கணவன் ஓடு என்றால் ஓட வேண்டும். மனைவிக்கென்று விருப்பு, வெறுப்பு ரசனைகள், ஆசாபாசங்கள் இருக்கக் கூடாது. மொத்தத்தில் மனைவி ஒரு கொத்தடிமை.

உன் கணவன் தாழ்வுமனப்பான்மையும், ஆணாதிக்க உணர்வும், ஈகோவும், சுயநலமும் கொண்ட கோழை. அவனை, நீ வெகு சாமர்த்தியமாக கையாள வேண்டும்.

1. உன் ஒப்பனைகளை குறைத்து இயல்பாக வெளிப்படு.

2. எதாவது கேட்டால்தானே கணவன், எகனைக்கு மொகனையாக செயல்படுகிறான். அவனிடம் புடவையோ, ஐஸ் கிரீமோ, நாய் குட்டியோ எதுவும் கேட்காதே. கைசெலவுக்கு அம்மாவிடம் பணம் வாங்கி வைத்துக் கொள். உனக்கு பிடித்த நிறத்தில் புடவை எடுத்துக் கொள். உனக்கு விரும்பிய சுவையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடு.

3. கணவனுக்கு பிடிக்காத உடையை உடுத்து. ஆடையை களைந்து உன்னை அறையில் பூட்ட வந்தால், கணவனை கடுமையாக எச்சரி. 'வன்முறைக்கு வன்முறையில் ஈடுபடுவேன். என் ஆடைகளை களைய வந்தால், கடுமையாக தாக்குவேன்...' என, எச்சரி. பாகற்காய் பொரியல் சமைத்தால், உன்னை சாப்பிட சொல்லி வலுக்கட்டாயப்படுத்தினால், பொரியலை கணவனின் முகத்தில் துாக்கி அடி.

4. உன் கணவனின் ரகசிய சித்திரவதைகளை பிறந்த வீட்டாரிடமும், புகுந்த வீட்டாரிடமும் அப்பட்டமாக்கு. அவனின், 'இமேஜை' தரை மட்டமாக்கு.

5. அடுத்தமுறை நீ கருத்தரித்தால், எக்காரணத்தை முன்னிட்டும் கருச்சிதைவு செய்து கொள்ளாதே. ஊரையே கூட்டி, கணவனின் கயமைதனத்தை வெளிபடுத்து.

6. தனிமையில் கணவனை அமர வைத்து, அமைதியாக பேசு. 'நான் சிவப்பாக, அழகாக இருக்கிறேன் என்கிற மமதை, எனக்கு துளியும் இல்லை. இருந்திருந்தால், மும்முறை உனக்காக கருவுற்றிருப்பேனா... உனக்கு ஒரு மனம் இருப்பதை போலதான் எனக்கும் ஒரு மனம் இருக்கிறது.

'அவரவர் ரசனை விருப்பத்தில், அவரவர் இயங்குவோம். உன் உணவு விருப்பத்தை, என் மீது திணிக்காதே. நீ, உன் வன்முறைகளை தொடர்ந்தாய் என்றால், நான், அம்மா வீட்டுக்கு போய் விடுவேன். சில மாதங்கள் கழித்திருந்து உன்னிடமிருந்து விவாகரத்து கோருவேன்.

'எனக்கு, 26 வயது தான் ஆகிறது. உன்னிடமிருந்து விவாகரத்து பெற்றபின், மறுமணம் செய்து கொள்வேன். விவாகரத்துக்கான மனுவை தாக்கல் செய்யும் போதே, உன் மேல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்வேன். ஓட ஓட விரட்டுகிறாய், திரும்பி நின்று முறைத்தால் என்ன ஆவாய் நீ?'- எனக்கூறு.

உன் கணவன் திகைத்து போவான். நீ அவனை கைவிட்டாய் என்றால், தெருவில் அனாதையாக நிற்பான். ஒரு தெரு நாய் கூட அவனை சீண்டாது. சமாதானத்துக்கு வருவான். பேசி சமரசம் செய்து கொள்.

7. சமாதானத்துக்கு அவன் வரவில்லை என்றால், அவனிடமிருந்து முறைப்படி விவகாரத்து பெறு.

8. நீ என்ன படித்திருக்கிறாய்... நீ வேலைக்கு போகிறாயா அல்லது இல்லத்தரசியா என்கிற தகவல்கள், உன் கடிதத்தில் இல்லை. கட்டாயம் படித்திருப்பாய். எதாவது ஒரு வேலைக்கு போ.

9. தேனாகவும் இராதே, வேப்பங்காயாகவும் இராதே; மத்திமமாய் இரு. கோழையாக இராதே, விவேகமாக இரு. திருமண வாழ்க்கை கசந்து விட்டால், துக்கத்தில் மூழ்கிப் போய் விடாதே. விடுபட்டு புதுஉறவை தேடிக் கொள்.

10. பெற்றோருடனான தகவல் தொடர்பை பலப்படுத்து. அவர்களின், 'மாரல் சப்போர்ட்' இருந்தால், எந்த நெருப்பாற்றையும் நீ நீந்தி வரலாம்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us