
அன்புள்ள அம்மா —
நான், தென் தமிழகத்தின் சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் வயது: 35; வீட்டுக்கு மூத்தவள்; மின் பொறியியல் பட்டதாரி. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.
ஜவுளிக் கடையில், 'சேல்ஸ்மேன்' ஆக பணிபுரிந்தார், அப்பா. 58 வயது பூர்த்தியானவுடன், சிறு தொகையை கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
வீட்டில் சமோசா செய்து கடைகளுக்கு வினியோகம் செய்வார், அம்மா. எனக்கு இரு தங்கைகள், ஒரு தம்பி. மின் வாரியத்தில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்; கிடைக்கவில்லை.
நகரின் பணக்கார வீட்டார், என்னை, பெண் கேட்டு வந்தனர். அவர்கள் குடும்பத்தில் நான்கு மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகனுக்குதான் என்னை கேட்டனர்.
மூன்றாவது மகன், அரசுப் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்தார். நான்காவது மகன், கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடி கொண்டிருந்தார்.
மணமகனுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் இருந்தார். அவர்களிடம் இருக்கும், 10 ஏக்கர் நிலத்தில், பணப்பயிர் பயிரிட்டனர். டவுனில், நான்கைந்து கடைகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.
அப்பாவின் மறைவுக்கு பின், மணமகன் வீட்டில் மூத்த மகனின் கை வெகுவாய் ஓங்கியது. தம்பிக்காக பெண் கேட்டு வந்தது, மூத்த அண்ணன் தான்.
பெண் பார்க்க, மாப்பிள்ளையின் அம்மாவும், மூத்த அண்ணனும் தான் வந்திருந்தனர். காபி எடுத்து போய் வைத்த என்னை, தலையிலிருந்து கால் வரை ஆழமாய் அலசி பார்த்தார், அண்ணன். அவரின் பார்வை, என் கழுத்துக்கு கீழ்தான் இருந்தது.
'என் தம்பி, நீ காலேஜ் படிக்க போகும்போது உன்னை பார்த்திருக்கிறான். நான் ஓ.கே., சொன்னால்தான், அவன் உன்னை கட்டிக்க முடியும். எனக்கு உன்னை புடிச்சிருக்கு. சில நிபந்தனைகளை, நான் போடுவேன். நீ ஒத்துக்கொண்டால் இந்த திருமணம் நடக்கும்...' என்றார்.
நான் ஒத்துக்கொண்டேன்; திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின், மூத்தார் என்னிடம் பலமுறை அத்துமீற முயன்றார்; தடுத்தேன். விஷயத்தை கணவரிடமும், மாமியாரிடமும் கூறினேன். அவர்கள், 'நீயே சமாளித்துக் கொள்...' என்று, கூறி விட்டனர்.
எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் நான்காவது தம்பிக்கு திருமணம் நடந்தது. திருமணமான எட்டாவது மாதத்தில், சாலை விபத்தில் இறந்து போனார், கடைசி தம்பி.
கடைசி தம்பியின் மனைவியை எப்படியோ சரிக்கட்டி, தன் கட்டுப்பாட்டில் சின்ன வீடாக வைத்துக்கொண்டார், மூத்தார்.
எங்களுக்கு திருமணமான ஐந்தாவது ஆண்டில், என் கணவர், மஞ்சள்காமாலை நோய் வந்து இறந்து போனார். இப்போதும், ஆறுதல் சொல்லும் சாக்கில், என்னை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார், மூத்தார்.
கணவரின் இறப்புக்கு பின் கிடைத்த அரசு பணத்தில் பாதியை, பலவந்தமாக பறித்துக்கொண்டார். கருணை அடிப்படையில் பணி வேண்டி, மனு செய்திருக்கிறேன்.
பெற்றோர் நிழலில் ஒதுங்க முயற்சித்தேன்; அவர்கள் ஆதரிக்கவில்லை. அதனால், வாடகைக்கு வீடு பிடித்து, தனியே குடியிருக்கிறேன்.
இரவு நேரங்களில் மூத்தார் போன் செய்து தொந்தரவு செய்கிறார்.
'கருணை அடிப்படையிலான வேலை கிடைக்க, நான் உதவி செய்கிறேன். வீட்டு வாடகையும், மாத செலவும் நான் தருகிறேன். உன் மகளை படிக்க வைக்கிறேன். என்னுடன் சேர்ந்து வாழ். 'அண்ணன் பொண்டாட்டி, அரை பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி, முழு பொண்டாட்டி' என்பர். நீ எனக்கு முழு பொண்டாட்டி...' என்கிறார்.
மூத்தாரின் மனைவிக்கு, போன் செய்து, விஷயத்தை கூறினேன். அவரோ, 'அட்ஜஸ்ட் பண்ணி போ...' என்கிறார்.
இரண்டாவது சகோதரரிடம் புகார் பண்ணினால், 'நான் செத்தாலும், அண்ணன் என் பொண்டாட்டியை பெண்டாளதான் பாப்பான். அவனை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது...' என்கிறார். எந்த நேரத்தில், என் மூத்தார் என்ன செய்வாரோ என, பயந்து வாழ்கிறேன்.
அவரை சமாளிக்க நீங்கள் தான் தக்க ஆலோசனை வழங்க வேண்டும், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
கிராமத்தின் கூட்டுக்குடும்பங்களில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன. கூட்டுக்குடும்பத்தில் ஒருவர் சம்பாதிக்க, பலர் சோம்பேறிகளாய் களித்திருப்பர்.
கல்வியறிவும், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்ச்சியும் இல்லாத கூட்டுக்குடும்பங்களில் இது சாத்தியமே.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
1. கணவரின் கிராஜுவிட்டி, பி.எப்., பணத்தில் கிடைத்த பாதியை, வங்கி கணக்கு ஆராம்பித்து, நிரந்தர வைப்பு நிதியில் போடு. கிடைக்கும் பென்ஷனை வைத்து, குடும்ப செலவை பார்த்துக் கொள்ளலாம்.
2. கருணை அடிப்படையிலான வேலை சீக்கிரம் கிடைக்க, பள்ளி கல்வி துறை மேலதிகாரிகளையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் பார்த்து, நினைவூட்டல் மனு கொடு.
3. சைக்கிள் ஓட்ட தெரிந்திருந்தால் பரவாயில்லை. தெரியாவிட்டால் கற்றுக்கொள். பகல் நேரங்களில் எதாவது வேலைக்கு போ. உன் மகளை பள்ளியில் சேர்.
4. மூத்தார் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. கணவரின் இறப்புக்கு பின் கிடைத்த பணத்தில் பாதியை சுருட்டி கொண்டதை திருப்பி தரவும், பாலியல் ரீதியில் உன்னை தொந்தரவு செய்வதை நிரந்தரமாக தடுக்கவும், புகாரில் எழுதிக் கொடு.
5. மூத்தாரையும், அவரை போன்று பெண்களை பெண்டாள துடிக்கும் ஓநாய்களையும் சமாளிக்க, வீட்டில் கூர்மையாக தீட்டப்பட்ட அரிவாளை தயாராக வை. எவனும் உன் வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசிக்க முயன்றால், கண்டம் துண்டமாக வெட்டி போடு.
6. உன் மூத்தாருக்கு சின்ன வீடாய் இருக்கும் கொழுந்தனார் மனைவிக்கு, தகுந்த அறிவுரை கூறி, தவறான உறவு வட்டத்திலிருந்து அவளை விடுவி.
7. பாலியல் ரீதியான குற்றங்களை வேரோடு ஒழிக்க விவேகமும், மதியூகமும், வீரமும், சட்ட அறிவும் மற்றும் உலக ஞானமும் பெண்களுக்கு அதிமுக்கியம். தவறு செய்யும் ஆண்கள் வாலாட்டினால் ஒட்ட அறுங்கள். 'செக்ஸ்' அடிமைகளாக, 100 ஆண்டு வாழ்வதை விட, வீரபத்தினிகளாய் ஒரு நொடி வாழ்வது மேல்.
8. நீ தகுந்த வரன் கிடைத்தால், மறுமணம் செய்து கொள். குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஆனால், உன் கருணை அடிப்படையிலான பணி பாதிக்காது.
துணிந்து செல், தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது மகளே!
— -என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.