
அன்புள்ள அம்மா —
வயது: 35. எனக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிகிறேன். எனக்கு இரு அக்கா உள்ளனர்.
ஒரு அக்காவின் கணவர், ரெவின்யூ இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவர்களுக்கு ஒரே மகன். அவர்கள் சொந்த வீட்டில் வசதியாக வாழ்கின்றனர். இரண்டாவது அக்காவின் கணவர், ஆட்டோ டீசல் மெக்கானிக்காக இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள். அவர்கள் சிட்டி அவுட்டரில் சொந்த வீடு கட்டி வசிக்கின்றனர்.
நான் மட்டும் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வாங்கும் சம்பளம் வாய்க்கும், வயிற்றுக்கும் சரியாக இருக்கிறது.
இரண்டாவது அக்கா, ஒரு பாக்தாத் திருடி. வீட்டை ஒட்டி மேயும் ஆடுகளை வீட்டுக்குள் இழுத்து வந்து, கசாப்பு போட்டு விடுவாள்.
10 கிலோ கறி கிடைக்கும்.
ஒரு கிலோ கறியை குழம்பு வைத்து, மீதியை உப்புக்கண்டம் தயாரிப்பாள். உப்பு கண்டத்தில் ஒரு பாதியை இன்னொரு அக்காவுக்கும், எனக்கும் கொடுப்பாள். அக்கா வாங்கிக் கொள்வாள். நான் திருப்பி அனுப்பி விடுவேன். 'போடா போக்கத்த பயலே' என, எள்ளி நகையாடுவாள்.
வீட்டுக்கு அருகே மேயும் கோழிகளையும் திருடுவாள். மாட்டிக் கொள்ளாமல், இது போல் பல திருட்டுகளை நடத்தி, பெரும் காசு சேர்த்து விட்டாள், அக்கா. இன்னொரு அக்கா, நேரடியாக திருட்டில் ஈடுபடா விட்டாலும், சகோதரி திருடி தரும் பங்குகளை, விருப்பமாக வாங்கிக் கொள்வாள்.
'அக்கா கொடுக்கும் பங்குகளை நாம் மறுக்காமல் வாங்கிக் கொள்ளலாம். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?' என்கிறாள், என் மனைவி.
'திருட்டு வேலைகளை விட்டுவிடு அக்கா...' எனக் கூறினால், 'போடா உன் வேலையை பாத்துக்கிட்டு... அறிவுரை சொல்ற மூஞ்சிய பாரு...' என, என்னை அடித்து விரட்டுகிறாள்.
அக்காவின் திருட்டுகளை பட்டியலிட்டு, காவல்துறையிடம் மாட்டி விடலாமா... என்ன செய்யலாம் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
கிராமப்புறங்களில் தான் மாடு, ஆடு, கோழி திருட்டு சர்வசாதாரணமாய் நிகழும். ஆட்டு மந்தைகளிலிருந்தும், மாட்டு கொட்டடிகளிலிருந்தும் ஆடு, மாடுகளை திருடி, சந்தைகளில் விற்று விடுவர்.
மாடுகள், 20 - 40 ஆயிரம் ரூபாய் வரையும், ஆடுகள், 5,000 - 10 ஆயிரம் ரூபாய் வரையும், நாட்டுக்கோழிகள், 350 - 500 ரூபாய் வரையும் விற்கப்படும். அதே கிராமங்களில், வழி தவறும் ஆடு, மாடுகளை, உரிமையாளரை தேடி கண்டுபிடித்து, ஒப்படைக்கும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றன.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
1. உன் அக்கா கொடுக்கும் திருட்டு பங்கை வாங்கிக் கொள்ள ஆசைப்படும் மனைவிக்கு, அமைதியாக அறிவுரை சொல். 'உழைத்து சாப்பிடும் பணமே உடலில் ஒட்டும். திருட்டு கொடுத்தவர் கண்டுபிடித்து விட்டால், திருடியவர் மட்டுமல்ல, திருட்டு பொருளை வாங்கி பயன்படுத்தியவரும் மாட்டிக் கொள்வர். மாட்டிக் கொள்வோம் என்கிற பயம் இருந்தாலே, குற்ற உணர்ச்சியில் மூழ்கி போவோம்...' எனக் கூறு.
2. திருட்டு பங்கை வாங்கி அனுபவிக்கும் அக்காவிற்கும், அக்கா கணவருக்கும், தகுந்த அறிவுரை கூறி உஷார்படுத்து.
3. பாக்தாத் திருடி அக்காவின் திருட்டு திருவிளையாட்டுகள், அவளது கணவருக்கு தெரியுமா என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. தெரியாமல் இருந்தால், 'மச்சான்... அக்காவின் திருட்டுகள் நம்மை அசிங்கப்படுத்துகின்றன. இதுவரை, சட்டம் நம்மை தண்டிக்காமல் இருக்கலாம். மனசாட்சி தினம் தினம் தண்டித்துக் கொண்டே இருக்கும். அக்காவை நல்வழிபடுத்துங்கள்...' எனக் கூறு.
4. கடைசியாக திருட்டு அக்காவிடம், 'அக்கா... உன் திருட்டுகளை இன்றோடு நிறுத்திக் கொள். இதுவரை நீ திருடிய பொருட்களின் தோராய மதிப்பை கூறுகிறேன். அந்த தொகையை அனாதை இல்லத்துக்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ நன்கொடையாக கொடுத்து விடு.
'நம் குலதெய்வம் கோவிலுக்கு போய், பாவமன்னிப்பு பெறு. உன்னுடைய திருட்டு பழக்கம், உன் குழந்தைகளுக்கு தொற்றாதிருக்கட்டும். நாம் அனைவரும் ஒரே தாயிடம் தான் தாய் பால் குடித்தோம். உனக்கு மட்டும் திருட்டு குணம் எப்படி வந்தது...
'உனக்கு இது, இறுதி எச்சரிக்கை. நீ திருந்தாவிட்டால் சற்றும் தயங்காது காவல் நிலையதில் உன் மீது புகார் செய்வேன். தேவையா உனக்கு, யோசித்து முடிவெடு...' என, முகத்தில் அடித்தாற் போல கடைசி தடவையாக கூறு.
5. நீ நேர்மையானவனாக இரு; ஆனால், ஓட்டைக்கையாக இருக்காதே. கையிலிருக்கும் பணத்தை வைத்து, ஒரு மனையை வாங்கிப்போடு. தகுந்த நேரம் பார்த்து குறைந்த பட்ஜெட்டில் சொந்த வீட்டை கட்டு. உன் மனைவியின் ஆவலாதி நீங்கும்.
6. உன் இரு குழந்தைகளுக்கும், நேர்மையாக இருப்பது, இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமான விஷயம் என்பதை சொல்லிக் கொடு.
7. மாமிச உணவுகளின் மீதான அதீத ஆசையை குறைத்து கொள். சிக்கனமான சைவ உணவுகளை கை கொள். உறவினர்களுக்கும் இந்த உணவு பழக்க வழக்கத்தை பரப்பு.
8. திருட்டு பழக்கத்துக்காக, உறவினர்களிடம், அக்காவை குறை கூறி திரியாதே. அக்காளின் மீதான பாசம் குறையாமல் பார்த்துக் கொள்.
9. அக்கா மகள்களிடம் பாசத்தை கொட்டு. திருட்டிலிருந்து விடுபடுவது, மகா சிரமம். நேர்மையாக வாழும்போது கிடைக்கும் மன நிம்மதிக்கு ஈடு இணையே இல்லை. அதை உன் அக்காள் உணர்ந்து, மகிழ்வாள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.