
அன்புள்ள அம்மா —
என் வீட்டில் நான் கடைசி பையன். பொறியியல் பட்ட படிப்பு முடித்து, அரசு துறையில் பணியில் உள்ளேன். நான் கல்லுாரி படிக்கும் காலத்திலும், வேலை தேடியபோதும் இரண்டு பெண்கள் என்னை காதலித்தனர். ஆனால், பெற்றோரிடமிருந்து பிரித்து விடுவர் என்று, அவர்களை நான் மறுத்து விட்டேன்.
அரசு பணியில் சேர்ந்த பின், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தேன். மணப்பெண் தேர்வு என்னுடையது. என் மனைவி சற்று முற்போக்கு சிந்தனை மற்றும் குழந்தை தனம் கொண்டவள். ஆனாலும், நான் பயந்தது போல் வீட்டை பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கினாள்.
திருமணம் ஆகி அடுத்த ஆண்டு, மகன் பிறந்தான். பின்னர் எங்களிடையே எந்தவித உடல் தொடர்பும் இல்லை. நான் தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் உடையவன். ஆனால், என் மனைவிக்கு அது சம்பந்தமாக பேசினாலே பிடிக்காது. பின்னர் இரு குடும்ப பெரியவர்கள் முன்னிலையில் பேசிய போதும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
திருமணமாகி, 12 ஆண்டுகள் கழிந்த பின்பும், மனம் விட்டு என் தேவையை கூறியும், அவளோ, 'எனக்கு அது பிடிக்காது. அது சம்பந்தமாக எதும் பேசாதீர்கள். நான் உங்களை நன்கு கவனிக்கிறேன். ஆனால், என் அன்பு உங்களுக்கு புரியாது. நான் இறந்த பின்னால் தான் அது புரியும்...' என, கூறுகிறாள்.
இது சம்பந்தமாக மருத்துவ ஆலோசனைக்கு வர மறுக்கிறாள். யாரிடம் என் கஷ்டத்தை சொல்வது என்று தெரியவில்லை. தற்போது எனக்கு, 39 வயதாகிறது. என் உணர்வுகளை அடக்க முடியவில்லை. மனைவியிடம் பேசினால், மகன் முன் சண்டைக்கு வருகிறாள்.
மகன் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என, என்னை ஆசுவாசப்படுத்தினாலும் என் உணர்வுகளுடன் தினமும் போராடுகிறேன். தங்களது தெளிவான ஆலோசனையை எதிர்பார்த்து காத்துள்ளேன்.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
உன் மனைவியின் தாம்பத்ய வெறுப்புக்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக இருக்கலாம்
* திருமணத்திற்கு முன், இரு பெண்களை நீ காதலித்தது, உன் மனைவிக்கு மகன் பிறந்த பின் தெரிந்து, பழி வாங்குகிறாளோ என்னவோ
* இயற்கைக்கு முரணான முறைகளில் நீ, தாம்பத்தியம் முயற்சிப்பது உன் மனைவிக்கு ஒவ்வாமல் இருக்கலாம்
* சுத்தமும், ஆரோக்கியமும் தாம்பத்தியத்துக்கு மிக முக்கியம்
* உன் மனைவி அவளது சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கலாம். அந்த கெட்ட அனுபவங்கள் உன் மனைவியை தொடர்ந்து வந்து வேட்டையாடக் கூடும்
* பெரும்பாலான பெண்களுக்கு ஒரு குழந்தை பெற்ற பின், தாம்பத்யத்திற்கு இனி நாம் ஒத்து வர மாட்டோம் என்ற தாழ்வுமனப்பான்மை வந்து விடுகிறது. குழந்தைக்காக உணவு, உடை, தாம்பத்தியம் அனைத்தையும் தியாகம் செய்ய பெண்கள் தயாராகி விடுகின்றனர்
* முதல் குழந்தை பிறந்த பின், உன் மனைவிக்கு 'புரொடிஜஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன்கள் சுரப்பு குறைந்திருக்கலாம்
* உன் மனைவியின் தாம்பத்திய வெறுப்பு பிறவியில் வந்தது அல்ல, இடையில் வந்தது. உன் மனைவிக்கு, குடும்பத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மன பதட்டம், பயம், வெறுப்புணர்ச்சி மிகுந்திருக்கக்கூடும்
* உன் அம்மாவோ, அப்பாவோ, உடன்பிறப்புகளோ தொடர்ந்து உன் மனைவியை தேள் மாதிரி கொட்டி கொண்டு இருப்பர். அந்த கோபத்தை, உன்னிடம் காட்டக் கூடும்.
மொத்தத்தில் உன் மனைவிக்கு, 'பாலியல் வெறுப்பு குறைபாடு' இருக்க வாய்ப்பிருக்கிறது.
உன் மனைவியை வற்புறுத்தி, மனநல மருத்துவரிடம் அழைத்து போ அல்லது முடிந்தால், மனநல மருத்துவரை வீட்டுக்கு வரவழை. உன் மனைவிக்கு எந்தெந்த விஷயங்கள் பதட்டத்தை, அருவெறுப்பை, ஒவ்வமையை தருகின்றனவோ அந்த விஷயங்களை மனநல மருத்துவர் பட்டியலிடுவார்.
சுயசுத்தம் பேணி, மனைவியின் மன பதட்டங்களை குறைத்து, தாம்பத்யத்தை சுகானுபவமாக்கு.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன் மனைவியிடம் பிரேமையாய், 'ஐ லவ் யூ!' கூறு. அந்த ஒற்றை வாக்கியம் பல ரசவாதங்களை எற்படுத்தும். வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்