
அன்புள்ள அம்மாவுக்கு —
எங்கள் வீட்டில், நான், அக்கா, அண்ணன் மூன்று பேர். டீச்சருக்கு படித்திருக்கிறாள், அக்கா. அவளுக்கு, பெரிய இடத்திலிருந்து வரன் வந்தது. இனிப்பு கடை நடத்துகிறார், மாப்பிள்ளை.
பெரிய அளவில் கல்யாணம் செய்து வைத்தோம். என் மாமாவுக்கு ஒரு அண்ணன் மட்டும் தான். நிறைய சொத்துகள் உள்ளன. என் அக்காவுக்கு கல்யாணம் ஆகி, ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மகன், மகள் உள்ளனர்.
என் மாமாவின் நடத்தை இப்போது முழுவதுமாக மாறி விட்டது. அவ்வப்போது குடித்தவர், இப்போது முழு நேர குடிகாரராகி, முழு சோம்பேறி ஆகி விட்டார். பிற பெண்களுடன் தவறான உறவில் இருக்கிறார்.
இது பற்றி கேட்டதுக்கு, அக்காவை கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்.
அக்காவுக்கு சொரியாசிஸ் நோய் உள்ளது. பிறவியிலேயே ஒரு கிட்னி தான் உள்ளது. சொரியாசிஸ் நோய்க்கு, டாக்டர்களின் ஆலோசனைபடி, நிறைய மருந்துகள் சாப்பிடுகிறாள்.
என் மாமாவின் நடத்தை பற்றி, அவர் அம்மாவிடம் கேட்டதற்கு, 'நீ இப்படி இருப்பது தான் அதற்கு காரணம்...' என்று, அக்கா மேல் பழி போடுகின்றனர்.
அக்காவின் நோயும், அவளின் பெண் குழந்தை பிறந்த நேரமும் சரியில்லை என்று, தினமும் வாட்டி வதைக்கின்றனர்.
மாமாவும், அவர் அண்ணனும் சேர்ந்து தான் இனிப்பு கடை நடத்தினர்.
'இனி, இனிப்பு கடைக்கு வர மாட்டேன்...' என சொல்லி, வார சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார், மாமா.
எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறாள், அக்கா. எங்கள் வீட்டில் அவளை நினைத்து அனைவரும் கவலைப்படுகிறோம். அக்கா ஒரு அப்பாவி. ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேச மாட்டாள். அக்கா வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் அக்காவுக்கு இரு உடல் ரீதியான பிரச்னைகள் உள்ளன.
ஒன்று, சொரியாசிஸ். இதை, காளாஞ்சகப்படை என்று தமிழில் கூறுவர். இரண்டு வகையான படைகள் உள்ளன. ஒன்று, தலை சருமத்தை மட்டும் பாதித்திருக்கும். இன்னொன்று, உடல் முழுக்க பரவியிருக்கும். உன் அக்காவுக்கு என்ன வகை என, நீ குறிப்பிடவில்லை.
இந்த நோயை முழுவதும் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுபடுத்தலாம். இந்நோய் கடுமையான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு, சித்தாவில் சிறந்த மருந்துகள் உள்ளன.
அடுத்து, உன் அக்கா பிறவியிலிருந்து ஒரு சிறுநீரகத்துடன் வாழ்வது.
மேற்சொன்ன இரு உடல் பிரச்னைகளையும் வைத்து, உன் அக்கா தாழ்வு மனப்பான்மையில் இருப்பதாக நம்புகிறேன்.
உன் மாமாவுக்கு ஆறு மாதம் கெடு கொடுக்கச் சொல். அதற்குள் அவர் தன் தீய பழக்க வழக்கங்களை தலைமுழுகி, கடை வேலைக்கு தினம் செல்ல வேண்டும்.
இந்த ஆலோசனை பக்கத்தில் அவ்வப்போது, ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறேன். படிப்பறிவில்லாத, பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு, விவாகரத்தை ஒரு தீர்வாக சொல்ல மாட்டேன். படித்த, பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்கள், சற்றும் தயங்காமல், பொருந்தாத திருமண உறவை விட்டு வெளியே வரவேண்டும் என, ஆணித்தரமாக கூறுவேன்.
ஆறு மாத கெடுவுக்குள் மாமா திருந்தாவிட்டால், அக்காவை குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்து விடச்சொல். குழந்தைக்கு நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அம்மாவும், மகளும், தனி சோப், தனி சீப்பு, தனி துண்டு பயன்படுத்த வேண்டும்.
அக்காவை தனியார் பள்ளி ஆசிரியை பணிக்கு போகச் சொல். ஓய்வு நேரங்களில் தெரிந்த சிற்றுண்டிகளை தயாரித்து, கடைகளுக்கு வினியோகம் செய்யலாம். அக்காவை தன்னம்பிக்கை ஊட்டும் சுயசரிதைகளை படிக்கச் சொல்.
'டெட்' தேர்ச்சி பெற்றிருந்தால், அரசு பணி முயற்சிக்கலாம். குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்து கேட்டு, அக்காவை விண்ணப்பிக்கச் சொல்.
உன் அக்கா நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்க்கட்டும்; மனதை அமைதிபடுத்தும் இசையை கேட்கட்டும்; கோவில் போய் வரட்டும்.
இவ்வுலகில் மகிழ்ச்சிகரமாக வாழ, அப்பாவியாக இருந்தால் மட்டும் போதாது. சகலவிதமான பிரச்னைகளையும் விவேகமாய் தாக்குபிடித்து, வெற்றி கொடி உயர்த்தும் போர்க்குணமும் தேவை.
தீமைகளுக்கு எதிராக வாள் சுழற்று, என் புதிய ஜான்சி ராணியே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.