
அன்புள்ள அம்மா —
என் வயது: 26. நான், தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறேன். இப்போது எனக்கு, வீட்டில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.
என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள். மூத்த இரு சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது.
முதல் அக்காவுடையது காதல் திருமணம். அவளது கணவர் இறந்து, ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இரண்டாவது அக்காவுக்கு, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அவளது கணவர், குடி நோயாளி. அவளுக்கு, ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நான், சொந்த அத்தை மகனையே காதலித்தேன். அவரை தான் நிச்சயம் செய்துள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், என் அத்தை மகனிடம் விளையாட்டாக காதலை கூறினேன்.
இப்போது பிரச்னை என்னவென்றால், அவரும், என் இரண்டாவது அக்காவும், பல ஆண்டுகளுக்கு முன்பே காதலித்துள்ளனர். அவரை விட என் அக்கா, வயது மூத்தவள் என்பதால், இந்த காதல் கைகூடவில்லை.
என் இரண்டாவது அக்காவுக்கும், அவள் கணவருக்கும் எந்த விதத்திலும் ஒத்துப் போகவில்லை. தினமும் சண்டை சச்சரவில் தான், அவள் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.
இரண்டாவது அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், ஏதாவது காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்தி விடும்படி என்னிடம் கெஞ்சுகிறார், அத்தை மகன்.
இந்நிலையில், அக்காவிற்காக என் காதலை இழக்கவா அல்லது என் காதலுக்காக அக்காவின் வாழ்க்கையை இழக்கவா?
என்ன செய்வதென்று தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறேன். இதற்கு தகுந்த ஆலோசனை விரைவில் வழங்குமாறு வேண்டுகிறேன், அம்மா.
— இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்பு மகளுக்கு —
நீ ஆசையாய் எடுத்த பட்டுப்புடவையை அக்காவுக்கு உடுத்தக் கொடுக்கலாம். பதிலுக்கு அதே மாதிரியான வேறொன்றை நீ உடனே வாங்கி உடுத்திக் கொள்ளலாம்- இழப்பில்லை. நீ உன் வாயருகே கொண்டு சென்ற உணவுக் கவளத்தை அக்காவுக்கு ஊட்டி விடலாம். அடுத்த கவளத்தை நீ தின்று, உன் பசியாற்றிக் கொள்ளலாம்- இழப்பில்லை.
வறுமையில் இருக்கும் அக்காவுக்காக, சொத்தில் உன் பங்கை விட்டுத் தரலாம்; -பின்னாளில் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், நீ ஆசையாய் காதலித்த அத்தை மகனை, அக்காவுக்கு விட்டுத் தருதல் என்ன நியாயம்?
அர்த்தமற்ற தியாகங்களை திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும், நாவல்களிலும் தான் பார்க்க முடியும். மூத்த அக்கா, கணவனை இழந்து தவிக்கிறாளே... அவளுக்கு உன் அத்தை மகனை கட்டி வைக்க வேண்டியது தானே. வயது வித்தியாசம் இருப்பதால், இது கைக் கூடப் போவதில்லை.
இரண்டாவது அக்காவின் சண்டைக் கோழிதனத்தால் தான், உன் மாமா, குடிநோயாளி ஆனாரோ என்னவோ?
அத்தை மகன், இரண்டாவது அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார், சரி. உன் அக்கா, தன் குடி நோயாளி கணவரையும், ஏழு வயது மகனையும் அம்போ என விட்டு விட்டு, அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கிறாரா...
உன் இரண்டாவது அக்கா, இன்னும் தன் குடிநோயாளி கணவருடன் தான் வாழ்கிறார்; இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. விவாகரத்து செய்து கொள்ளாத அக்காவை, எப்படி முறைப்படி திருமணம் செய்து கொள்வார், அத்தை மகன்.
உன்னையும் காதலித்துள்ளார், அத்தை மகன். இரண்டாவது அக்காவையும் காதலிக்கிறார். நன்றாக விசாரித்து பார், மூத்த அக்காவையும் அத்தை மகன் காதலித்து இருந்திருக்க போகிறார்.
இந்த காதல் மன்னனை, உன் பக்கம் மடக்கிப் போடு. அத்தை மகனை நீ, திருமணம் செய்து கொண்டால், இரண்டாவது அக்காவின் வாழ்க்கை எப்படி புதிதாக பாழாகும். அவர் தன் குடிநோயாளி கணவரை திருத்தி நல்வழிபடுத்தி, மகிழ்ச்சியான இல்லறம் காணலாமே!
உன் இரண்டாவது அக்கா, 'அத்தை மகனை மடிபிச்சை கொடு. கணவரை விவகாரத்து செய்து விட்டு இவனை மறுமணம் செய்து கொள்கிறேன்...' என, உன்னிடம் மண்டியிட்டு இறைஞ்சினாளா?
பத்தில் எட்டு பெண்கள், கணவன் குடிநோயாளியாக இருந்தாலும், அவனுடன் தான் சேர்த்து வாழ விரும்புவர். எப்போதோ காதலித்தவனின் நினைவுகளை துாக்கி எறிந்திருப்பர்.
நான் சொல்வதை கவனமாக கேள்...
'அத்தை மகனே... நம் திருமணத்தை நான் எதாவது சாக்குபோக்கு சொல்லி நிறுத்த, நீண்ட நேரமாகாது. நம் திருமணம் நின்றாலும், நான் வேறு யாரையாவது திருமணம் செய்து, 'செட்டில்' ஆகி விடுவேன்.
'நீயோ, அக்கா பெறும் விவாகரத்துக்காக, கூடுதலாக அவளின் சம்மதத்துக்காகவே பல ஆண்டுகள் காத்திருந்து, இலவு காத்த கிளியாகி விடுவாய். ஒருவேளை, இரண்டாம் அக்காவை நீ மணந்து கொண்டால், நீங்களிருவரும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் என, எவ்வித உத்திரவாதமும் கிடையாது.
'கேட்காதவர்களுக்கு அறிவுரை கூறாதே, தேவைப்படாதோருக்கு தியாகங்கள் செய்யாதே. நாமிருவரும் திருமணம் செய்து கொண்டு, அக்காவின் குடும்பத்துக்கு தார்மீக ஆதரவு தந்து, பொருளாதார உதவியும் செய்வோம். அக்காவின் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து வெளிக்கொணர பெரும் பாடுபடுவோம்...' எனக் கூறி, அவனை மூளைசலவை செய்.
தனக்கு மிஞ்சி தான், தான தர்மம் மகளே. கற்பனை வானத்தில் பறக்காதே, யதார்த்தத்தில் கால் ஊன்று.
உன் வனத்தில் நீயே தீவைத்துக் கொண்டு, ஏன் இருதலைக் கொள்ளி எறும்பாகிறாய்? சுயநலமழை பெய்வித்து தீயை அணை.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.