PUBLISHED ON : ஜூன் 25, 2023

அன்பு சகோதரிக்கு —
கணவரின் சந்தேக புத்தியால், வாழ்க்கையை ரணகளமாக கழித்துக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டசாலியில் நானும் ஒருவள். என் வயது: 48.
சிகப்பாக, லட்சணமாக இருப்பேன், நான். கணவரோ எனக்கு நேர் எதிர். உறவினரான அவர், அரசு பணியில் உயர் பதவியில் இருந்ததால், என்னை வற்புறுத்தி அவருக்கு திருமணம் செய்து வைத்தனர், பெற்றோர்.
திருமணமான புதிதில், கணவரின் சந்தேக புத்தி கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது தாழ்வு மனப்பான்மையால் அப்படி நடந்து கொள்வதாக, என்னை தாழ்த்திக் கொண்டு, அவரை சரி செய்ய எவ்வளவோ முயன்றேன். அவ்வளவு முயற்சியும் வீணானது தான் மிச்சம்.
நாளுக்கு நாள் அவரது மூர்க்கத்தனம் அதிகமானதே தவிர, குறையவில்லை. அவரது கொடுமையால், நான் அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கிறேன்.
எங்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்து, இப்போது கல்லுாரிக்கும் செல்கின்றனர். இப்போது வரை, கணவரது சந்தேக புத்தி சற்றும் குறையவில்லை.
கணவர் எனக்கு போன் செய்யும்போது, உடனே எடுத்து பேச வேண்டும். இரண்டு, மூன்று ரிங்டோன் அதிகமானாலோ, 'என்கேஜ்ட்' ஆக இருந்தாலோ அவ்வளவு தான். அன்றைய பொழுது நரக வேதனை தான்.
'யாருடன் போனில் பேசினாய்; எங்கே யாருடன் கூத்தடிச்சே...' என்று திரும்ப திரும்ப கேட்டு, சாகடித்து விடுவார்.
இத்தனைக்கும், அவரது பெற்றோர், எங்களுடன் தான் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வார்த்தை கண்டிக்க மாட்டார்கள்; எனக்கு ஆதரவாகவும் பேச மாட்டார்கள்.
நாளை என் குழந்தைகளுக்கு திருமணமாகி, பேரன், பேத்தி எடுத்தாலும், இந்த வேதனை குறையாது; அவரது சந்தேக புத்தியும் மாற போவதில்லை. எங்கள் உறவினர் மத்தியில் கேலி பேச்சாக இருக்கும் நான், நாளை என் சம்பந்திகளுக்கும் வேடிக்கையாக இருக்க வேண்டுமா?
என் பொறுமையும் குறைந்து வருகிறது. தவறே செய்யாத போதும், குற்றவாளி போல் தினம் தினம் பயந்து கொண்டிருப்பதை விட, வாழ்க்கையே முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
கணவரின் கொடுமையிலிருந்து விடுபட தீர்வு சொல்லுங்கள் சகோதரி.
— இப்படிக்கு,உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
நாம் வைத்திருக்கும் விலையுயர்ந்த வைரம் காணாமல் போய் விட்டால், யாராவது திருடி விட்டால், கீழே விழுந்து நொறுங்கி விட்டால், பளபளப்பு மங்கி கறுத்து விட்டால் என்ன செய்வது என்ற, நொடிக்கு நொடி பதைபதைப்பு, வைர வியாபாரிக்கு இருக்கும் அல்லவா?
அதே போன்ற பதைபதைப்பு தான், பேரழகியான மனைவிகளை வைத்திருக்கும் கணவர்களுக்கும் இருக்கும்.
எந்த ஆணாவது போனில் பசப்பு வார்த்தைகளை பேசி, மனைவியை மயக்கி விடுவானோ? மயக்கினவனுடன் மனைவி ஓடி விடுவாளோ? ஓடவும் செய்யாமல், விவாகரத்தும் பெறாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து ரகசிய காதலர்களின் எண்ணிக்கையை பெருக்குகிறாளோ?-
இப்படி பல சந்தேகங்கள், கணவரின் மனதில் ஓடுகிறது.
சந்தேகம் ஒரு மன வியாதி. யாருக்கு வேண்டுமானாலும், எந்த உறவுக்குள் வேண்டுமானாலும் வரும். கணவரின் மிதமிஞ்சிய காதல் தான், சந்தேகமாக உருமாறுகிறது என, தெளிந்து, கணவரை தொடர்ந்து ஊக்குவிக்க முடியுமா? கணவரின் வகை வகையான சந்தேகங்களை ரசித்து பாராட்டமுயுமா?
கணவரின் தொடர் சந்தேகங்கள், மனைவியை திருமண பந்தம் மீறிய உறவுக்கு வழி வகுப்பதும் உண்டு.
உனக்கான ஆலோசனைகள் இதோ...
* உனக்கு திருமணமாகி, 20 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும் என நம்புகிறேன். இத்தனை காலம், சந்தேகக் கணவரை சகித்து விட்டாய். இன்னும் சில ஆண்டுகளில் மகன் படித்து முடித்து வேலைக்கு போய் திருமணம் செய்து கொள்வான். விரும்பினால், மகனுடன் போய் செட்டில் ஆகலாம்.
* 'இனி ஒரு நிமிஷம் கூட இவனை சகித்துக் கொள்ள மாட்டேன்...' என, நீ பொருமினால், விவாகரத்துக்கு விண்ணப்பி. பெற்றோர் வீட்டில் போய் தஞ்சமடை. படித்து முடித்து வேலைக்கு போனதும் மகனும், மகளும் உன்னை தேடி வருவர். அவர்களை உன் பக்கம் தக்க வைத்து, கணவரை தனிமைப்படுத்து.
* உறவினர் கேலிகளை அலட்சியப்படுத்து. பத்து கணவர்களில் ஆறு பேர், சந்தேகப் பிராணிகள் தான். வீட்டுக்கு வீடு வாசற்படி. 'முதலில் உங்கள் புருஷனை திருத்திவிட்டு, என்னை கேலி செய்ய வாருங்கள்...' என, விளாசு.
* கணவரின் மனநோய் தீவிர நிலை அடைவதற்குள் விழித்துக் கொள். அவரை, சிறந்த மனநல மருத்துவரிடம் அழைத்து போ.
கோவிலுக்கு போ. 'டிவி'யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார். கணவரின் பேச்சுகளை அலட்சியப்படுத்து. தந்தையின் அக்கிரம நடத்தையை மகன், மகளுக்கு அம்பலப்படுத்து.
கணவருக்கான சமையலில் உப்பு, புளி, காரம், எண்ணெய், கொழுப்பு குறை. உன்னை தாழ்த்திக் கொள்ளாதே. இயல்பான கம்பீரத்துடன் இரு.
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.
