PUBLISHED ON : ஆக 21, 2011

அன்புள்ள சகோதரிக்கு —
எங்களுக்கு, இரண்டு மகன்கள். பெரியவன், நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். சின்னவனும் நன்றாக படித்து, மாஸ்டர் டிகிரி முடித்து இருக்கிறான். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது, கூட படிக்கும் பிள்ளைகள் இவனை கலாட்டா செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்டு, தற்சமயம் சிகிச்சை பெற்று, வீட்டில் இருக்கிறான்.
வெளியில் செல்ல பயப்படுகிறான். இதனால், வீட்டில் எப்போதும் உட்கார்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் இருப்பான்; ஆனால், எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டான்.
இந்த மாதிரி அவன் உட்கார்ந்து இருப்பது, பெரியவனுக்கு பிடிக்கவில்லை. அடிக்கடி அவன் காதில் விழும்படி, 'தண்டச்சோறு, சும்மா எப்படித்தான் உட்கார்ந்து இருக்க முடிகிறதோ?' என்று, ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
சின்னவன் அமைதியாக இருந்தாலும், இந்த மாதிரி யாராவது மட்டமாக பேசினால், அவனுக்கு கோபம் வந்து, அவர்களிடம் கத்தி பேசி விடுகிறான். அப்போதுதான், அவனுக்கு மனசு சமாதானமாகிறது. இந்நிலையில், நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பெரியவன் சம்பாத்தியத்தில் நாங்கள் யாரும் சாப்பிடுவது இல்லை; அவன் சம்பளத்தை அப்படியே வங்கியில் போட்டு விடுவான். வீட்டு செலவு எல்லாம், என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். தம்பி எதிரிலேயே, 'எங்காவது போய் சாவு; இல்லை என்றால் பிச்சை எடுத்து சாப்பிடு...' என்று சொல்கிறான். இவர்களை எப்படி சமாளிப்பது என்று, நீங்கள் தான் எங்களுக்கு நல்ல முடிவு சொல்ல வேண்டும். சின்னவன், யாரிடமும், எந்த பிரச்னையும் செய்ய மாட்டான்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு —
உங்களின் கடிதத்தில், உங்களின், உங்கள் கணவரின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி தகவல்கள் இல்லை. உங்களுக்கு எந்த வருடம் திருமணமானது? உங்களிரு மகன்களின் வயது, கல்வித் தகுதி என்ன? உங்களின் மூத்த மகன் என்ன பணி செய்கிறார்? உங்கள் இளைய மகன் என்ன படிக்கும் போது, மனநிலை பாதிக்கப்பட்டார்? கூட படிக்கும் பிள்ளைகள் கலாட்டா செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்டார் என எழுதியிருக்கிறீர்கள். கலாட்டா செய்தது மாணவரா, மாணவியரா? முதன் முதலில் உங்கள் இளைய மகனை மருத்துவரிடம் எப்போது காட்டினீர்கள்? என்ன மன வியாதி என்று சொன்னார்? மருந்துகள் தற்காலிகமாக கொடுத்தாரா, ஆயுளுக்கும் சாப்பிடச் சொல்லி கொடுத்தாரா? மூத்த மகனுக்கு திருமணமாகி விட்டதா, இல்லையா? திருமணமாகவில்லை என்றால், பெண் பார்த்து, கட்டி வைத்தீர்கள் என்றால், அவர் இளையவனை தொந்தரவு செய்யாமல், தனிக் குடித்தனம் போய் விடுவார் இல்லையா? மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இல்லை.
உங்களது கணவர் உயர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர் என யூகிக்கிறேன். நீங்கள் காலமெல்லாம் கணவனை சார்ந்து வாழ்ந்திருக்கிறீர்கள். வீட்டில் ஆண்கள் ராஜ்ஜியம். உறவினர் யாரும் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதில்லை. உங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தால், மகன்களால் வரும் பிரச்னைகளை இச்சையாகவோ, அனிச்சையா கவோ சரிப்படுத் தியிருப்பார்.
இரு மகன்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிள்ளை இளையவன் தான். நீங்கள் செல்லம் கொடுத்ததால், உங்கள் இளைய மகன் வீணாகியிருக்கலாம். தவிர, அவனுக்கு கல்லூரியில் நடந்த பிரச்னையை நீங்களும், உங்களது கணவரும் விவேகமாக அணுகவில்லை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய விஷயம், விஷ விருட்சமாகி, தீரா பிரச்னை தருகிறது.
உங்களது இளைய மகனை நீங்களிருவரும் நிரந்தர ஆயுட்கால மனநோயாளி ஆக்கி விடாதீர்கள். வெளியே போகப் பயப்படுகிறான் என்றால், நீங்களோ, உங்களது கணவரோ துணைக்கு செல்லுங்கள். விட்ட படிப்பை தொடரச் செய்யுங்கள் அல்லது பணிக்கு அனுப்புங்கள் அல்லது வியாபாரம் செய்ய சிறுகடை வைத்துக் கொடுங்கள்.
மாதத்திற்கு ஒரு தடவை குடும்ப அங்கத்தினர்கள் கூடுங்கள். பிஸ்கெட், டீ சாப்பிட்டுக் கொண்டே பேசி, ஒருவருக்கொருவர் இருக்கும் மனமாச்சர்யங்களை களையுங்கள்.
இளைய மகனுக்கு என்ன வகை எதிர்காலம் ஏற்படுத்தி தரலாம் என்பதை, உங்கள் மனநல மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். உடன் உங்கள் மூத்த மகனும் இருக்கட்டும்.
இளைய மகனின் பிரச்னையிலேயே நீங்கள் மூழ்கி கிடந்து, மூத்தவனின் திருமணத்தை மறக்கிறீர்கள். மூத்தவன், இளையவனுடன் சண்டை போடுவதன் மூலம், மறைமுகமாக தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்கிறான்; புரிந்து கொள்ளுங்கள்.
சம்பாதிக்கும் மகனையும், மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும் பொருளாதார ரீதியாய் நீங்கள் இருவர் தான் கவனித்துக் கொள்கிறீர்கள். மூத்தவன், தன் சம்பளத்தை அப்படியே வங்கியில் போட்டுக் கொள்கிறான். நீங்களிருவரும் உயிரோடு இருக்கும் போதே, இளைய மகனுக்கு புனர்வாழ்வு அமைத்துக் கொடுப்பதுதானே சமயோசிதம். என்னதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியமான மனநிலை மீண்டால்தானே, சின்னவன் தன்னை தற்காத்துக் கொள்வான்.
மொத்தத்தில், மூத்த மகனை விரோதமாக பார்க்காதீர்கள். விரோதமாக பார்த்தால் உங்களுக்கும், அவனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாகும்.
நூறு சதவீதம் மன ஆரோக்கியம் உள்ள மனிதர்கள், உலகத்தில் இல்லவே இல்லை; ஏதாவது ஒரு சதவீதத்தில் பாதிக்கப்பட்டே இருக்கின்றனர். பாதிப்பை வெளிக்காட்டாமல் படிக்கின்றனர், பணிபுரிகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், அமைச்சராய் இருக்கின்றனர், சாமியாராக இருக்கின்றனர், ஏன்... மருத்துவர்களாய் கூட இருக்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவன் என லேபிள் குத்தி, சின்னவனை காய்கறிக் குவியல் ஆக்கி விடாதீர்கள்.
சிறு, சிறு வெளி வேலைகளை அவனை செய்து வரச் சொல்லுங்கள். அவனுடைய அர்த்தமற்ற பயங்களை பேசி, பேசி களையுங்கள். சித்த வைத்தியம், ஹோமியோபதி மருத்துவம் சின்னவனை தெளிச்சி பெற வைக்கும்.
அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே உறவுப்பாலம் இடுங்கள்.
மாதம் ஒருமுறை நால்வரும், எங்காவது மினிச் சுற்றுலா சென்று வாருங்கள்.
வீட்டில் சாப்பிட்டு, தூங்கி, தூங்கி வழிந்தால், உங்கள் இளைய மகன் குண்டாகி விடுவான். இப்போதே அவன், 95 கிலோ இருப்பான் என யூகிக்கிறேன். அவனது எடையை குறையுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது, இளையவனை கர்நாடாக இசை கேட்கச் சொல்லுங்கள். அவனுக்கு ஒரு நாளைக்கு, ஆறு தடவை உப்போ, சர்க்கரையோ இடாத எலுமிச்சை சாறு கொடுங்கள்.
வீட்டில் மீன் வளருங்கள்.
அவனுக்குள் இறங்கி, அவனை மீட்க, பெற்ற தாயால்தான் முடியும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்து, பிறர் மீது குற்றம் சாட்டாதீர்கள்.
வாரா வாரம் கோவிலுக்கு போய், இளையவனுக்கு பரிகாரப் பூஜைகள் செய்து வாருங்கள். ஒரு தடவை குணசீலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு போய், 11 நாள் தங்கி வாருங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
