தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காக்கும் குருநாதர்!

காக்கும் குருநாதர்!

காக்கும் குருநாதர்!


PUBLISHED ON : ஆக 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடியார்களை காப்பாற்றுவதில், குருநாதரின் அணுகுமுறையே, வித்தியாசமாக இருக்கும்.

திருவாரூர் மடப்புரம், தட்சிணாமூர்த்தி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றவர்; சிவபெருமானையும், அம்பிகையையும் வினாடி நேரம் கூட மறவாதவர்; ஈசனின் சொற்படி திருவண்ணாமலையில், ஈசான்ய திசையில், ஆல மரத்தடியில், தவமும், நிஷ்டையும் கை கூடியவர், ஈசான்ய ஞானதேசிகர்.

தேசிகர், தவம் செய்யும்போது, இரண்டு புலிகள் வந்து, அவருக்கு இரு புறங்களிலும் படுத்திருக்கும். தேசிகரும், அவற்றை அம்பாள் - சிவபெருமானாகவே கருதி வந்தார்.

'அண்ணா மலையாரே...' என்று, அன்போடு தடவிக் கொடுப்பார். அடியார்கள் வருகையில், இரண்டு புலிகளும் விலகி காட்டிற்குள் ஓடி விடும்.

ஒருநாள், திருவண்ணாமலைக்கு வந்தார், ஜடன் எனும், மாவட்ட ஆட்சியாளர்.

தேசிகரை தரிசித்து, 'பல காலமாக என்னை காசநோய் பிடித்து பாடாய் படுத்தி வருகிறது. தாங்கள் தான் அதை போக்கி, ஆரோக்கியத்தை அருள வேண்டும்...' என, வேண்டினார்.

அவர் எண்ணத்தை நிறைவேற்றினார், தேசிகர்.

ஆட்சியாளரை பீடித்திருந்த நோய் விலகியது. அண்ணாமலையாரை, 'பெரிய ஐயா' என்றும், தேசிகரை, 'சின்ன ஐயா' என்றும் துதிக்க துவங்கினார்.

கார்த்திகை தீப திருவிழா சமயம், அலுவல் காரணமாக, திருக்கோவிலுார் போயிருந்தார், ஆட்சியாளர்.

'திருவண்ணாமலையில், தேர் திருவிழா நடக்கும். நாம் அதில் கலந்துகொள்ள வேண்டும்...' என, நினைத்த ஆட்சியாளர், குதிரை மீதேறி புறப்பட்டார்.

பெண்ணையாற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை தாண்டி போக வேண்டும். ஈசான்ய தேசிகரை, மனதில் நினைத்து, குதிரையை தண்ணீரில் இறக்கினார். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை கண்டு, மிரண்டு, பின் வாங்கியது குதிரை.

ஆட்சியாளர் விடவில்லை.

'என்ன, மிரள்கிறாய்... பெரிய ஐயாவையும், சின்ன ஐயாவையும் பார்த்து நாளாச்சு, புறப்படு...' என்று, வற்புறுத்தி, தண்ணீரில் இறக்கினார்.

அடுத்த வினாடி, குதிரையுடன் மறு கரையில் இருந்தார், ஆட்சியாளர்.

அதே நேரத்தில், திருவண்ணாமலையில், அடியார்கள் நடுவே இருந்த தேசிகர், வலது கையை தெற்காக நீட்டி, வடக்காக கொண்டு வந்தார்.

அடியார்களுக்கு காரணம் புரியவில்லை. 'என்ன...' என, கேட்டனர்.

'நம் அடியவன் ஒருவன், என்னை நினைத்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இறங்கி விட்டான். அவனை, மறு கரைக்கு அழைத்து வந்தேன்...' என்றார், தேசிகர்.

ஆட்சியாளர் வந்து சொன்ன பிறகே, அடியார்களுக்கும், உண்மை புரிந்தது. தேசிகரின் அருளாடலை எண்ணி வியந்தனர்.

குருவருளும், திருவருளும் ஒரு போதும் நம்மை கைவிடாது. அழுத்தமாக பிடிப்போம். அல்லல் வெள்ளத்தை அனாயாசமாக கடப்போம்.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

பூஜைக்கு உபயோகிக்கும், பாக்கு, வெற்றிலை, அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப குச்சி, ஸமித்துகள் போன்றவற்றை, பூமியில் நேரடியாக வைக்காமல், தட்டில் வைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us