/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கேள்வி வளையம், கழுத்தை இறுக்குகிறதா?
/
கேள்வி வளையம், கழுத்தை இறுக்குகிறதா?
PUBLISHED ON : பிப் 21, 2016

'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்; என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...' என்பர் சிலர்! இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப் பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும், எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்!
இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா... எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது தான்!
'பெண்ணிடம் வயதை கேட்காதே, ஆணிடம் வருமானத்தை கேட்காதே...' என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர்.
இக்கேள்விகள், எந்த நிமிடமும், நம்மை நோக்கி வீசப்படலாம் என்பதால், ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களை, தயாராக, ஏற்கனவே மனதிற்குள் தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
வயதைப் பொறுத்த வரை, 'எத்தனையோ கழுதை வயசாச்சு; கணக்குத் தெரியல, என்ன இப்போ... வேறு ஏதாச்சும் பேசுவோமா...' என்று சிரித்தபடி பதில் சொல்லலாம்.
'உங்க மக வயசு, உங்க தங்கச்சி வயசு...' என்றும் விஷயத்தை திசை திருப்பலாம். மதிப்புமிக்க மனிதராக இருந்தால், அமைதியாக, புன்னகை மட்டும் பூக்கலாம். 'யோவ்... இந்தக் கேள்வியைக் கேட்டதே தப்புய்யா...' என்பது இம்மவுனப் புன்னகையின் பதில்!
வருமானத்தைப் பற்றிக் கேட்டால், 'இப்படிப் போட்டுடைக்கச் சொல்லி, வெளிப்படையாகக் கேட்டா எப்படி... அப்புறம் சொல்றேனே...' எனலாம்.
'சமாளிக்கிற சம்பளம் தான்; ஓரளவு மிச்சம் புடிக்க முடிகிற நல்ல சம்பளம் தான்...' என்பதும், நல்ல சமாளிபிகேஷன்!
'இன்னும் உயரட்டும், சொல்றேன்...' என்றெல்லாம் விதவிதமாக சொல்லலாமே தவிர, ஏதோ நெற்றிப் பொட்டில், எதிராளி துப்பாக்கியை வைத்து, கேள்வி கேட்டது போல் எண்ணி, பட்டவர்த்தனமாகப் பேசி, உண்மையை உடைத்து விட வேண்டாம்; சரியான விடையைத் தர, இது ஒன்றும், தேர்வு வினாத்தாள் அல்ல!
இங்கே எல்லா பதில்களிலும், ஒரு உண்மை இருப்பதை கவனித்தீர்களா... 'பொய் ஒன்றை கூறி தப்பியுங்கள்...' என்று நான் சொல்லவே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. பொய் கூறாத, மாற்று பதில்கள் பல உண்டு...
'முதலாளி, என்னப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா?'
'நான் இல்லாத போது, என்னைப் பத்தி, ஏதும், 'கமென்ட்' வந்திருக்குமே...'
'நீயும், அவளும் என்ன பேசிக்கிட்டீங்க?'
'இந்த வீட்டக் கட்ட, உங்களுக்கு எவ்வளவு செலவாச்சு?'
'எனக்காக நீங்க செலவழிச்ச பணம் எவ்வளவு?'
'நீங்க எனக்குக் கொடுத்த பரிசோட மதிப்பு எவ்வளவு இருக்கும்...'
'இப்போ வேல பார்க்குற டிரைவருக்கு, என்ன சம்பளம் குடுக்குறீங்க?'
'நீங்க, வெளிநாடு போறீங்களாமே, சொல்லவே இல்லை...'
— இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும், எதிராளிகள் குடையட்டும்; எதற்குமே அசைந்து கொடுக்காதீர்கள். இவர்களது கேள்வி வங்கிகளுக்கு, சாமர்த்தியமான பதில்களை, தயார் செய்து வைத்திருங்கள்.
உண்மையான பதில், நன்மை செய்யாத போது, புதுக்கோளாறுகளை உண்டாக்கும் போது, கேள்விகள் உள்நோக்கம் உடையவை, சிறு பிள்ளைத்தனமானவை என்கிற போது, அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
'நான் ஏன் பயப்படணும், என் வாழ்க்கை திறந்த புத்தகம்; நான் ஏன் மறைக்கணும்; வெளிப்படையாப் பேசித்தான் எனக்குப் பழக்கம்...' என்றெல்லாம் வீராப்புப் பேசி, வகையாக மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம்!
தெரிந்தால் தவறில்லை; அதே நேரத்தில் தெரிய வேண்டிய அவசியமில்லை என்கிற விஷயங்களில், தெளிவாக இருந்து, நம்மையும், பிறரையும் பாதிக்காத கேள்விகளுக்கு, பதில் சொல்லலாம் தவறில்லை!
மற்றபடி, 'உன் ஜம்பம், என்கிட்டே நடக்காதுடி...' என்று, வினா எழுப்பும் மனிதர்களிடம், விழிப்பாக இருந்து விட்டுப் போவோம்.
இந்த அணுகுமுறை தான், நமக்கு என்றென்றும் பாதுகாப்பு!
லேனா தமிழ்வாணன்

