
நடைபயிற்சி முடித்து, அருண் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பாவும், அம்மாவும் முகம் முழுக்க மலர்ச்சியுடன் வாசலில் நின்றிருந்தனர்.
''என்னப்பா... ஏன் இங்கே நிக்கறீங்க?'' என்று, காலணிகளை அவிழ்த்தபடியே கேட்டான்.
''எல்லாம் நல்ல செய்திதாம்பா. மிகப் பெரிய அமெரிக்க கம்பெனிக்கு, ஐ.ஐ.டி.,ல முதல் தடவையா, நீங்க 12 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்கள்ல... அதுக்கு, உங்க எல்லாருக்கும் பாடம் எடுத்த எட்டு ஆசிரியர்களுக்கு, நீங்க, 12 பேரும் சேர்ந்து பாராட்டு விழா எடுத்து, நினைவுப் பரிசு கொடுக்கணும்ன்னு உன் நண்பர்கள் எல்லாம் திட்டம் போட்டிருக்காங்க. நீ என்னப்பா சொல்றே?'' என்றாள் அம்மா.
அவன் தன் பெற்றோரை, புன்னகையுடன் பார்த்து, ''கண்டிப்பா செய்யணும்மா; அதுபற்றி அவங்க கிட்ட பேசுறேன்,'' என்று கூறி, வீட்டிற்குள் சென்றான்.
கண்ணில் நீர் கசிய, தன் கணவரைப் பார்த்தாள் அம்மா.
''என்ன அகிலா... என்ன ஆச்சு... ஏன் கண்ணு கலங்குது?'' என்றார், கரிசனத்துடன்!
''போஸ்ட் ஆபீஸ் வேலைல, நாம எத்தனை ஊர்களுக்கு மாறியிருப்போம்... பையன் படிப்பு கெட்டுடுமேன்னு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்... ஆனா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு பாத்தீங்களா... எல்லாம் பெரியவங்க ஆசீர்வாதம்.''
''ஆமா... பெரியவங்க அருள் தான்; இவ்வளவு பெரிய வேலை அருணுக்கு கிடைக்கும்ன்னு, நானும் எதிர்பாக்கல,'' என்று அப்பாவும் கரகரத்தார்.
''இவன நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேங்க... எப்பப் பாத்தாலும் கிரிக்கெட், கபடின்னு புத்தகத்தையே தொடமா விளையாட்டுப் பிள்ளையா இருக்கானேன்னு... பரிட்சைக்கு மொத நாள் கூட விளையாடிட்டு, ராத்திரி தான் வீட்டுக்கு வருவான். இதம், பதமா ஏன் கோபமா கூட சொல்லியிருக்கேனே...'' என்றாள்.
அவர் சிரித்துக் கொண்டே, ''ஒரு தடவை ஒட்டடைக்குச்சிய எடுத்து, அவனை விளாசினே... கவலையே படாம வாசல் கேட்டுல ஏறி குதிச்சு ஓடுனானே நினைவிருக்கா...'' என்றார் அப்பா.
பெருமூச்சுடன் தலையாட்டி, பழைய நினைவுகளில் மூழ்கினாள் அம்மா.
ஐந்தாவது, ஆறாவது படிக்கும் போது, வேண்டா வெறுப்பாகத் தான் பள்ளிக்குச் செல்வான் அருண். வீட்டிலேயே இருக்க மாட்டான். சாப்பிடும்போது, அம்மா சொல்கிற அறிவுரைகளுக்காகவே சாப்பாட்டையே வெறுத்தான். அப்பாவிடம் நின்று பேச மாட்டான்.
'டேய் கண்ணு... படிப்புதான்டா நமக்கு சொத்து. மாடு, மனை, வீடு, நிலம்ன்னு பரம்பரையா எதுவும் இல்லடா நமக்கு... நீ படிச்சு நல்லா வந்தாத்தான்டா குடும்பம் முன்னேறும் புரிஞ்சிக்கடா...' என்று அவன் கை பற்றி, எவ்வளவு அழுதிருக்கிறாள்.
'போம்மா வேலையப் பாத்துகிட்டு... எப்ப பாத்தாலும் படிப்பு படிப்புன்னு ரொம்ப டார்ச்சர் கொடுத்தீங்க, வீட்டை விட்டு ஓடிப் போயிருவேன்...' என்று, ஒரு நாள் அவன் விறைப்பும், முறைப்புமாக சொன்னவுடன், அன்றிலிருந்து அவள் தன்னை அடக்கிக் கொண்டாள்.
எப்படியோ, ஏழாம் வகுப்பில் மெல்ல படிக்க ஆரம்பித்து, இதோ ஐ.ஐ.டி.,யில் உயர் கல்வி முடித்து, மிகப் பெரிய நிறுவனத்தில், மிகப் பெரிய வேலையும் கிடைத்து விட்டது.
'ஏப்பா அய்யனார்சாமி... வர்ற பொங்கலுக்கு, ஊருக்கு வந்து, உன் காலடில பொங்கல் வைக்கிறேன்ப்பா ...' என்று, அவள் கண்கள் நீரைப் பொழிந்தன.
பத்து நாட்கள் பரபரப்பான வேலைகள். விழா மேடை அலங்காரம், ஆடிட்டோரிய இருக்கைகள், சிறப்பு விருந்தினர், வருபவர்களுக்கு பானம், புத்தகம், மைக் ஏற்பாடு, அழைப்பிதழ் என்று நண்பர்கள் வருவதும், போவதுமாக இருந்தாலும், அருண் எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருந்தான். முகத்திலும், பேச்சிலும், சந்தோஷம் இல்லை. ஏதோ வலுக்கட்டாயத்தின் பேரில் இயங்குவது போல தோன்றும் மகனைப் பார்த்து, அவள் மிகவும் கவலைப்பட்டு கணவரிடம் சொன்னாள்.
அவர் மிகவும் சாதாரணமாக, ''என்னவோ... அவன் தினம் தினம் நம்ம பக்கத்துல உட்கார்ந்து மனம் விட்டுப் பேசறவன் மாதிரி சொல்றே... என்னிக்கு, அவன், 'படபட'ன்னு பேசி, சிரிச்சு இருந்திருக்கான்? விடு... விழா பத்தின டென்ஷனா இருக்கும்,'' என்றார்.
வண்ண விளக்குகளாலும், சரிகைத் தோரணங்களாலும், அரங்கம் பளபளத்தது. லெக்சரர்கள், புரபசர்கள் குடும்ப சகிதம், 'சர் சர்...'ரென்று வாகனங்களில் வந்து இறங்கி பெருமிதமாக அரங்கிற்குள் சென்றனர். பட்டும், நறுமணமும், கேமராக்களும், சிரிப்புகளுமாக அந்த இடம் திருவிழாக் கோலம் பூண்டது.
''ஆரம்பிக்கலாமா?'' என்று மெக்கானிக்கல் ஹெச்.ஓ.டி., கேட்டதும், மேடை ஏறினான் சந்தர்.
''வணக்கம்... எங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய, மகத்தான எங்கள் கல்லூரி பேராசிரியர்களுக்கு தலை சாய்த்து நன்றி சொல்ல ஆசைப்படுகிறோம். அழைப்பை ஏற்று, இங்கு வந்த அனைத்து ஆசான்களுக்கும் நன்றி. இப்போது, அருண் வந்து பேசுவான்; அவன் சாதனையாளன். மிகப் பெரிய சம்பளத்தில் பிளேஸ்மென்ட் வாங்கி, அகில இந்திய வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து, டாப் ஒன் ஸ்தானத்தில் நிற்கிற அருணை அழைக்கிறேன்,''என்றதும், பலத்த கரகோஷத்துக்கிடையில் மேடை ஏறினான் அருண்.
''அனைவருக்கும் வணக்கம்,'' என்று புன்னகையுடன் ஆரம்பித்தான்....
''உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விக்கு இருக்கிற மதிப்பு பிரமிப்பு தருகிறது. மனம் ஒன்றி, கல்வியை ஆராதித்து, அதன் மேல் மரியாதை வைத்து கற்றதன் பலன், இன்று கிடைத்துள்ளது. மேடையில் இருக்கும் அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கும் நன்றி. ஆனால், இவர்களுக்கு சற்றும் குறையாத ஆசிரியர்கள் இருக்கின்றனர். களிமண்ணாக இருந்த எங்களை சிற்பங்களாக்கியவர், மரமாக நின்ற எங்களுக்கு, நிழலும், கனியும் உண்டாக்கக்கூடிய ஆற்றல் இருப்பதை சொல்லிக் கொடுத்தவர்கள்.
''அதோ சின்னசாமி சார்... என் கணக்கு வாத்தியார்; ஆறாம் வகுப்பில் அல்ஜீப்ரா சொல்லிக் கொடுத்து, முதல் தடவையாக நூறு மதிப்பெண்கள் வாங்க வைத்தவர்; எனக்குள் இருந்த புத்திசாலியின் தூக்கத்தை கலைத்தவர் அவர் தான். 'ஆயிரம் பேரைக் கொன்றவன், அரை வைத்தியன் அல்ல; ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று பழமொழியை திருத்தி சொல்லிக் கொடுத்தவர் பழனியப்பன் சார்...
''இதோ இருக்கிறாரே... அறிவியல் வாத்தியார் மாணிக்கவாசகம்... இவர்தான், 'நல்ல மாட்டுக்கு, ஒரு சூடு அல்ல, நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு' என்று மாட்டின் கால்தடத்தைக் காட்டி, அந்த சுவட்டின் அழுத்தத்தில், மாட்டின் பலத்தையும், நோயையும் அறிய முடியும் என்று வாழ்க்கை அறிவியலில் ஆர்வம் உண்டாக்கியவர். 'நங்கைக்கு எதிர் வார்த்தை எது' என்று நாங்கள் குழம்பிய போது, 'நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்...' என்று, திரைப்படப் பாடலைப் பாடிக் காட்டி, தமிழிலும், இசையிலும், கவிதையிலும் ஆர்வம் உண்டாக்கியவர். பொன்னடியான் சார்.
''ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியின் இந்த அருமையான ஆசிரியர்கள் இல்லாவிட்டால், நாங்கள் இன்னும் இலக்கணப் பிழையும், பொருட் பிழையுமாக அரைகுறை படிப்புடன் மட்டுமே நின்றிருப்போம்.
''கற்றலில் ஆர்வத்தை உண்டாக்கி, செய்வது எதுவானாலும் திறம்பட செய்வதே, நம் கடமையும், பொறுப்பும் ஆகும் என, எங்களை உணர வைத்தவர்கள், எதிர்பாராத மனமும், அர்ப்பணிப்பு பண்புமாக, எங்களை பள்ளி இறுதி வரை கொண்டு வந்து அற்புதமாக ஜெயிக்க வைத்த, அந்த எளிய மாமனிதர்களுக்கு, எங்கள் முதல் நன்றியை அர்ப்பணிக்கிறோம்.
''அழுக்கு வைரங்களாக கல்லூரிக்கு வந்தவர்களை, பட்டை தீட்டி மெருகேற்றி உயர்ந்த இடத்தில் நிற்க வைத்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் அனுமதியுடன், அந்த அருமையான ஆசான்களையும் மேடைக்கு அழைக்கிறேன்; வாருங்கள் எங்கள் சிற்பிகளே...''
அருண் பேசப் பேச கூட்டம் பிரமித்தது. நெகழ்ச்சியால் கண்கள் கசிய கண்களைத் துடைத்தபடி இருந்தாள் அம்மா.
உஷா நேயா

