தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உறவுத் திருவிழா!

உறவுத் திருவிழா!

உறவுத் திருவிழா!


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவில்களில் சுவாமிகளுக்கென்று திருவிழா நடத்துவது வழக்கமானது. ஆனால், வீடுகளில் உறவுகளை மேம்படுத்த, ஒரு விழா எடுக்கின்றனர் என்றால், அது போகி எனப்படும் உறவுத் திருவிழாவாகத் தான் இருக்கும்.

பொங்கலுக்கு முதல் நாள், மார்கழியின் கடைசி நாள், இது கொண்டாடப்படுகிறது. போக்கி என்ற சொல் தான், போகி என திரிந்தது. இந்த விழா கொண்டாடப்படுவதற்கு, 10 நாட்களுக்கு முன்பே, வீடுகள் வெள்ளையடித்து சுத்தப்படுத்தப் படுகின்றன.

அப்போது சேர்ந்த கழிவுகளை, போகியன்று எரிக்கும் வழக்கம் இருக்கிறது. பிறகு, புதிய பொருட்களை வாங்கி, அந்த ஆண்டுக்கு பயன்படுத்துவர்.

உண்மையில், போகி பண்டிகை கொண்டாடுவதன் நோக்கமே வேறு.

எந்த வீடாக இருந்தாலும், உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு வராமல் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே, போகியின் நோக்கம்.

கருத்து வேறுபாடுகளை தீயிட்டு எரித்து விட்டால் தான், மீண்டும் அது முளைக்காது. அதற்கு தகுந்தாற் போல், பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி, விட்டுக் கொடுத்து பிரச்னையை போக்க வேண்டும். அதுதான் உண்மையான போகி திருநாள். இதனால் தான் இதற்கு உறவுத் திருவிழா என பெயர்.

மனித மனங்களில் ஏற்படும் கெட்ட எண்ணங்கள், அவனது வாழ்வையே அழித்து விடும் என்பதை உணர்வதில்லை. கெட்ட எண்ணங்களைக் களைந்து, நல்லெண்ணெங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் போகித் திருநாளின் நோக்கம்.

போகி அன்று, நம் வீடுகளின் முன் வாசல் நிலையில், சந்தனம் அல்லது மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். வாசலில், தோகையுடன் கூடிய கரும்பு சாத்தி, ஒரு இலையில் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, நிலை வாசலுக்கு கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தெய்வம் வசிக்கும் என்பது ஐதீகம். அந்த தெய்வத்திற்கு என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். குல தெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ கூட கருதலாம். எனினும், இந்திரன் அல்லது லட்சுமி என, கருதுவது மரபு.

இந்திரனால் தடையின்றி மழை கிடைக்கும். அவரை மழைக் கடவுளாகக் கருதுவர். மழைக்காலத்தில் தோன்றும் வானவில்லை, இந்திர தனுசு என்று சொல்வர். லட்சுமி வழிபாடு தடையற்ற செல்வத்தை தரும்.

இரண்டுமே வாழ்வுக்கு தேவையானவை. இந்த நாளில் பூஜையறையில் போளி, சர்க்கரை பொங்கல், பாசிப்பயிறு படைத்து, இந்திரனை வழிபடலாம்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், பூஜையே செய்கிறோம். எனவே, எல்லா உறவுகளும் தங்கள் மனதிலுள்ள பிடிவாதம், வறட்டுக் கவுரவத்தை விட்டு, உறவுப்பாலம் அமைப்பதே நிஜமான போகி.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us